
WEB SERIES
மீண்டும் ஒருமுறை கடவுளின் தூதர் இந்த உலகில் அவதரித்தால், சர்வ வல்லமை பொருந்திய அதிகார அரசுகள் என்ன செய்யும் என்பதை சர்ச்சைகள் கலந்து சொல்கிறது நெட்ஃபிளிக்ஸில் வெளியான `மெஸையா.’
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, ‘கடவுள் என்னிடம் கூறிவிட்டார். மக்களுக்கு எதுவும் ஆகாது’ என ஆன்மிக உரையாற்றுகிறார் அல்-மைசியா. அவர் சொன்னதுபோலவே அடுத்தடுத்த சம்பவங்கள் நடக்கின்றன. மக்களை அவர்களின் துன்பத்திலிருந்து மீட்பதாகச் சொல்லி, பாலைவனங்கள் கடந்து இஸ்ரேல் - சிரியா எல்லை நோக்கி அழைத்துச் செல்கிறார். கம்பிவேலிகளை ‘அல்-மைசியா’ தகர்த்தெறிந்து செல்ல, அவரைக் கைது செய்கிறது இஸ்ரேல் காவல்துறை. சிரியா, இஸ்ரேல் எனச் சின்ன தேசங்களையெல்லாம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நம்பும் அமெரிக்கா இதை எப்படி சும்மா விடும்?
அமெரிக்காவின் சிஐஏ இஸ்ரேலுக்குள் நுழைய, அல்-மைசியா சிறையிலிருந்து தப்பிக்கிறார். புனித ஜெருசலேத்தின் மசூதி ஒன்றில் தோன்றி அங்கிருக்கும் மக்களுக்கு போதிக்கிறார்; குண்டடிபட்ட ஒரு சிறுவனை நொடிப்பொழுதில் காப்பாற்றுகிறார். சிஐஏ குழம்பி நிற்க, மீண்டும் அங்கிருந்து மறைகிறார். யாரும் எதிர்பாராத வண்ணம், அமெரிக்க டெக்சாஸ் நகரத்தின் தேவாலயம் ஒன்றில் தோன்றுகிறார். புயல் அங்கு சுழன்றடிக்க , கட்டடங்கள் பறக்க, அங்கிருக்கும் மக்களை மீட்கிறார் அல்-மைசியா. `நவயுக தேவதூதனி’ன் வாகனத்தை நோய்வாய்ப் பட்டவர்கள், வாழ்வில் சிக்குண்டவர்கள், மோட்ச விரும்பிகள் எனப் பலரும் ஆயிரக்கணக்கில் பின்தொடர்கிறார்கள். வாஷிங்டனில் இருக்கும் லிங்கன் நினைவாலயத்தின் குளத்தில் சொற்பொழிவு நிகழ்த்தி, நீரிலேயே நடக்கிறார் ‘அல்-மைசியா.’ `யாரு சாமி இவன்’ என உலகமே ஆச்சர்யத்துடன் உற்றுநோக்க, ‘இவர்தான் சாமியே’ என ஆன்மிகக் கூக்குரலிடுகிறார்கள் அவரின் நலம் விரும்பிகள்.
இவர் செய்வது எல்லாமே வெறும் கண்கட்டி வித்தைகள் என்பதைக் கொஞ்சமாய் கொஞ்சமாய் கண்டுபிடிக்கிறது சிஐஏ. இஸ்ரேலிலிருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா வந்ததற்கான ஆதாரங்களை அடுக்குகிறது சிஐஏ. ஆனால், மதம் போர்த்திவிட்ட உலகில் சிஐஏ-வின் பேச்சையெல்லாம் நம்ப யாருமே தயாராய் இல்லை. உலகம் முழுக்க இருக்கும் அமெரிக்க ராணுவப் படைகள் அந்தந்த தேசங்களிலிருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபருக்குக் கட்டளை யிடுகிறார் `அல்-மைசியா.’ விஷயம் தங்கள் கைமீறிப் போவதை அமெரிக்கா எப்போதும் விரும்புவதில்லை. சிஐஏ-வின் ஆதாரங்களை மீடியாவிடம் கட்டவிழ்த்து நவயுக தேவதூதனின் முகத்திரையை அம்பலப்படுத்தி, தன்னைத் துன்பத்திலிருந்து விடுவித்துக்கொள்கிறது அமெரிக்கா.

‘அல்-மைசியா’வாக பெல்ஜிய நடிகர் மெஹ்தி தெஹ்பி நடித்திருக்கிறார். அவர் எதைச் சொன்னாலும் மக்கள் நம்புவார்கள் என்பது போன்ற ஆன்மிகமயமான அவரது முகம், இந்தத் தொடரின் முதல் ப்ளஸ். சிரியா - இஸ்ரேல் பிரச்னை, உலகம் முழுக்க இருக்கும் அமெரிக்க ராணுவம், நிஜ இடங்கள், அமெரிக்கச் செய்தி ஊடகங்கள், அமெரிக்கா அங்கிருக்கும் அகதிகளை நடத்தும் விதம் போன்றவற்றை இந்தத் தொடர் தோலுரிக்கிறது. `நாற்பது ஆண்டுகளாக அகதி களுக்கு அநீதி இழைத்துவிட்டேன், இறக்கும் தறுவாயில் நிம்மதியாக இறக்க விரும்புகிறேன்’ என, தன் முடிவை மாற்றிக்கொள்ளும் அமெரிக்க நீதிபதி முதல், பல விஷயங்களை அழுத்தமான வசனங்கள் வெளிப்படுத்துகின்றன.
இவர் இறைத்தூதரா அல்லது அந்த பிம்பத்தை உடைத்தெறிய வந்தவரா என்னும் கேள்விக்கான விடையை இறுதிவரை சொல்லாமல், அடுத்த சீசனுக்கு அழைப்பு விடுப்பது பெரிய மைனஸ். வலியில் கதறிக்கொண்டு இருக்கும் நாயைச் சுட்டுக் கொல்வது, அவரை நம்பி வந்தவர்களை நடுப்பாலை வனத்தில் விட்டுச் செல்வது, அல்-மைசியா சில சமயங்களில் சர்வாதிகாரிபோல் நடப்பது என இவர் ஒரு மோசடி மன்னன் என்னும் தியரியை முன்வைக்கிறது. மற்றொரு புறம், மாய வித்தைகள் மூலம், இதுவொரு ஆன்மிகத் தொடரா என்னும் கேள்வியையும் எழுப்புகிறது. இந்தக் குழப்பம்தான் இந்தத் தொடரின் ஆகப்பெரும் பிரச்னை. கதையில் எந்தப் பெரிய நகர்வும் இல்லாததால், சுவாரஸ்யமான திரைக்கதையும் ஒருகட்டத்துக்கு மேல் சலிப் பூட்டுகிறது.
கடவுளோ அவதாரமோ கடவுளின் தூதர்களோ உண்மையிலேயே இந்தப் பூமிக்கு வந்தால் அவர்களை அதிகாரச் சக்திகள் எப்படி எதிர் கொள்ளும் என்று சொன்னவிதத்தில் கற்பனையும் சமகாலமும் கலந்த கலவை இந்த ‘மெஸையா.’