Published:Updated:

Mismatched Season 2 Review: ஜென் Z தலைமுறையின் காதல் கதை - ஆனால் சிக்கல் என்னவென்றால்?!

Mismatched Season 2

Mismatched: ஜென் Z தலைமுறை டீனேஜர்களின் காதல் கதை - தற்போது வெளியாகி இருக்கும் சீசன் 2, முதல் சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திருக்கிறதா?

Published:Updated:

Mismatched Season 2 Review: ஜென் Z தலைமுறையின் காதல் கதை - ஆனால் சிக்கல் என்னவென்றால்?!

Mismatched: ஜென் Z தலைமுறை டீனேஜர்களின் காதல் கதை - தற்போது வெளியாகி இருக்கும் சீசன் 2, முதல் சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திருக்கிறதா?

Mismatched Season 2
2017-ம் ஆண்டு வெளியான சந்தியா மேனனின் `வென் டிம்பிள் மெட் ரிஷி' (When Dimple Met Rishi), என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு நெட்ஃப்ளிக்ஸில் 2020-ம் ஆண்டு இந்தியில் வெளியான ரொமான்டிக் காமெடி வெப் சீரிஸ்தான் `மிஸ்மேட்ச்ட்' (Mismatched). பிரஜக்தா கோலி, ரோஹித் சரஃப், ரன்விஜய் சிங்ஹா மற்றும் வித்யா மால்வதே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாரம்பரிய ஓல்ட் ஸ்கூல் பாலிவுட் காதலில் அதிக நம்பிக்கை உடைய ரிஷி, கோடிங் மட்டுமே தனது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று ஆழமாக உணரும் கேமரான டிம்பிள் மீது காதல் வயப்படுகிறார். அவர்கள் செல்லும் சம்மர் கோர்சில் உடன் பயிலும் மாணவர்கள், அவர்களுக்கு இடையே அரங்கேறும் காதல் நாடகங்கள், பனிப்போர், காழ்ப்புணர்ச்சி, போட்டி, பொறாமை, நட்பு, அவர் அவர் காக்கும் ரகசியங்கள் என ஜென் Z தலைமுறைக்காகவே அமைந்திருக்கும் கதைதான் 'மிஸ்மேட்ச்ட்'.

Mismatched Season 2
Mismatched Season 2

ரிஷி - டிம்பிள், இந்த எதிரும் புதிரும் ஜோடியின் நட்பும் காதலும் முதல் சீசனில் ரசிகர்களுக்கு இதமான காதல் கதையாக அமைந்தது. முதல் சீசன் முடிவில் காதல், நட்பு, வேலை என அனைத்திலும் சிக்கல்கள் ஏற்பட்டு ஆரம்பித்த இடத்திலேயே கதை முடிந்தது. ரிஷிக்கும் அவன் தோழி நம்ரதாவுக்கும் இடையிலுள்ள பிளவு, டிம்பிளின் ஆப் திருட்டு, அதனால் ரிஷி - டிம்பிள் இடையே ஏற்பட்ட பிரிவு, இத்தகைய அநேக உணர்வுகளின் கிளர்ச்சியில் டிம்பிளுக்கும் ஹர்ஷுக்கும் இடையே நிகழும் அந்த ஒரு சம்பவம், இப்படியாகப் பல புதிய திருப்பங்களுக்குத் தொடக்கம் வரைந்து நிறைவு பெற்றது சீசன் 1.

தற்போது வெளியாகி இருக்கும் சீசன் 2, முதல் சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திருக்கிறதா?

இந்த சீசனின் கதையில் புதிய திருப்பமோ, புது கதாபாத்திரங்களோ பெரிதாக இல்லாதது ஒரு குறை. புது கதாபாத்திரமென்று ரிஷிக்கு ஜோடியாக சன்ஸ்க்ரிதி என்ற தமிழ் பெண்ணாக சஞ்சனா இடம்பெற்றிருக்கிறார். ஆனால், அவர் கதையின் போக்கோடு ஒட்டாமல், திணிக்கப்பட்ட கதாபாத்திரமாகத் தென்படுகிறார்.

காலம் காலமாக சீரிஸ்களுக்கென்றே உள்ள ஒரு கதை போக்குதான் இதிலும் இருக்கிறது. ஹீரோவுக்கு ஒரு புதிய லவ் ட்ராக், ஹீரோயினுக்கும் ஒரு தனி ட்ராக் எனச் சில எபிசோடுகளை ஓட்டிவிட்டு, இறுதியில் வழக்கம்போல் ஹீரோ ஹீரோயின் தங்களின் 'உண்மையான' காதலின் ஆழம் அறிந்து மீண்டும் ஒன்றிணைவார்கள். இந்த டெம்ப்ளட்டிலிருந்து சிறிதும் மாறாமல் அப்படியே அதைக் கடைப்பிடித்திருக்கிறது 'மிஸ்மேட்ச்ட் - 2'. தமிழ்த் திரைப்படங்களில் அந்தக் காலங்களில் அமெரிக்கா மாப்பிள்ளை என்ற ஒரு அப்பாவி கதாபாத்திரம் இருக்கும். அதே போன்ற ஒரு பாத்திரத்தில் வருகிறார் ஹர்ஷ்.

Mismatched Season 2
Mismatched Season 2
சீசன் 1-ல் கோடிங், கேமிங், துடிப்பான இளைஞர்கள், அவர்கள் சந்திக்கும் சவால்கள், ஆப் ஐடியா என்று கலர்ஃபுல்லான விஷயங்களுடன், 'வெறும் காதல் கதை' என்றில்லாமல், புதிதாக இருக்கிறதே என்ற உணர்வு இருக்கும். ஆனால், அந்த மேஜிக்கை சீசன் 2 எங்குமே நிகழ்த்தவில்லை.

ரிஷி - டிம்பிள் தவிரப் பிற கதாபாத்திரங்களின் காதல் கதைகள் மட்டுமே சில இடங்களில் இன்றைய சமுதாயத்தின் பிரதிபலிப்பாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக, சமூக ஊடகங்களுக்காக மட்டுமே வாழ்க்கை என்று போலியாக நாள்களைக் கடத்தும் சிம்ரன் கதாபாத்திரம் நிதர்சனத்தை ஆங்காங்கே விளக்குகிறது. இவைதவிர, சித்தார்த் - சீனத் இடையே அமைந்த அந்த அன்பும், தன்பால் ஈர்ப்பு கொண்ட நம்ரதா சந்திக்கும் பிரச்னைகளும் சுவாரஸ்யமாகக் கையாளப்பட்டிருக்கின்றன. அதாவது, முக்கிய பாத்திரங்கள் தவிர, பிற கதைமாந்தர்களின் கதைகள் நன்றாகவே எழுதப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, டிம்பிளின் பெற்றோரின் சித்திரிப்பு நெகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. தன் தந்தையின் பணத்தை வீணடிப்பதாக நினைத்து மன அழுத்தத்தில் அழுது கதறும் டிம்பிளிடம் அவள் அப்பா "இன்னும் 5 லட்சம் இன்றே கூட அனுப்புகிறேன், பணம் முக்கியம் அல்ல. உன் பெற்றோராக நாங்கள் பெருமை கொள்கிறோம்" என்று தக்க நேரத்தில் ஆறுதல் சொல்லும் அந்தக் காட்சி அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

Mismatched Season 2
Mismatched Season 2
மொத்தத்தில் கஷ்டப்பட்டு 8 எபிசோடுகள் எழுதவேண்டும் என்று வாலன்டியராக முயற்சி செய்து எடுத்தது போல இருக்கிறது இந்த சீசன். ரிஷி மற்றும் டிம்பிளைச் சுற்றி மட்டுமே பிரதான கதையை நகர்த்தாமல், அழகாக எழுதப்பட்டிருக்கும் பிற கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இந்த சீசனை இன்னமும் ரசித்திருக்கலாம். ஆனால், அந்த முதல் சீசனின் ஈர்ப்பு இதில் எங்குமே தோன்றவில்லை என்ற இடத்தில் நிஜமாகவே மிஸ்மேட்ச்டு-ஆக மாறி நிற்கிறது இந்த சீரிஸ்.