தாயை இழந்த இரண்டு யானைக்கன்றுகளைப் பெற்றோரைப்போலப் பராமரித்து வளர்த்த தென்னிந்தியாவின் முதல் தம்பதியைப் பற்றிய உண்மைச் சம்பவம்தான், இயக்குநர் கார்த்திகி கான்சால்வஸ் இயக்கத்தில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள ‘The Elephant Whisperers’ ஆவணப்படம். இந்தப் படம் இன்று நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவணக்குறும்படத்துக்கான விருதினை வென்றிருக்கிறது.

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்குக் கொண்டுவரப்படும் தாயை இழந்த ரகு, அம்மு என்ற இரண்டு யானைக் கன்றுகளை பெற்றோரைப்போல் பேரன்பை ஊட்டி வளர்க்கிறார்கள் பொம்மன் – பெல்லி தம்பதி. யானைக் கன்றுகள் ஏன் ஆதரவற்ற நிலையில் முகாமிற்குக் கொண்டுவரப்பட்டன, வயதான பொம்மனுக்கும் பெல்லிக்கும் இடையிலான நட்பு எப்படிக் காதலாக மாறுகிறது, இருவரும் சேர்ந்து அந்த யானைகளை எப்படியெல்லாம் பாசம் காட்டி வளர்க்கிறார்கள், கடைசிவரை யானைகள் அவர்களோடு வளர்கின்றனவா... இதற்கெல்லாம் விடைகள் சொல்கிறது ‘The Elephant Whisperers’.

காட்டு நாயக்கன் என்கிற பொம்மன் கத்தியுடன் காட்டை சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, காட்டு அணில் மரத்தில் தொங்கியபடி எதையோ சாப்பிடுவது, ஒரு ஆந்தை அழகாக எட்டிப் பார்த்துக்கொண்டிருப்பது, ஓணான் கடற்கரை மணலில் சன் பாத் எடுப்பதுபோல் கேஷுவலாக மரக்கிளையில் மல்லாக்கப் படுத்துக்கொண்டிருப்பது, பளபளப்பாக மின்னி அள்ளி பருகத் தூண்டும் தண்ணீர் சலசலப்புடன் ஓடிக்கொண்டிருப்பது என ஓப்பனிங் காட்சியிலேயே நம் கவனத்தைக் கவர்ந்து இழுக்கிறார் இயக்குநர். படம் முழுக்க காட்டின் பேரழகைப் படம்பிடிக்கும் ட்ரோன் காட்சிகள், நம் கண்களை அங்குமிங்கும் சுழலவிடாமல் கட்டிப்போட்டுவிடுகின்றன.
பொம்மன் செல்லமாக அழைத்ததும் ரகு தனது குடிசையிலிருந்து வந்து குளிப்பது, அவரோடு ஃபுட்பால் விளையாடுவது, மற்றொரு யானை புல் சாப்பிடுவதைப் பார்த்து அப்படியே தானும் சாப்பிடுவது, ஸ்ட்ரா போட்டு ஜூஸ் குடிப்பது என ரகுவின் குறும்புகளைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றனர். அதேபோல, முள் செடி எனத் தெரியாமல் சாப்பிடும் ரகுவின் வாயிலிருந்து அந்த முள் செடியை கிருஷ்ணா (மற்றொரு யானை) வெளியில் எடுப்பது, பொம்மன் சொல்வதைத் தலையசைத்துக் கேட்டுக்கொள்வது, தண்ணீரில் துதிக்கையை விட்டு விளையாடுவது எனப் பெரும்பாலான காட்சிகள் ரசிக்கவைக்கின்றன.
அதுவும், மின்சார வேலிகளால் கொல்லப்படும் யானைகளின் கன்றுகள் படும் வேதனையையும் சொல்லி நம்மையும் வருத்தம்கொள்ள வைத்துவிடுகிறது ரகுவின் தாய் யானை மின்சார வேலியால் கொல்லப்பட்ட ஃப்ளாஷ்பேக். வனத்துறை அதிகாரிகள் கொண்டுபோய் காட்டில் விட்டும் தாயைப் பிரிந்த வேதனையில் காட்டுக்குள் செல்ல மறுக்கும் ரகு, பொம்மனையும் பெல்லியையும் தாய் - தந்தைபோல் நினைத்து வளர்வது நெகிழ்ச்சி. அதுவும் தாயை இழந்த யானை ரகு, தனது மகளை இழந்த பெல்லி இருவரும் எப்படிப் பாசத்தைப் பொழிந்துகொள்வார்கள் என்பதைக் காட்சிகள் அப்படியே விவரிக்கின்றன.
"ரகு இல்லையென்றால் எங்க வாழ்க்கையில ஒன்றுமே இல்ல" என்ற உன்னத உணர்வில் பொம்மன் - பெல்லி வாழ்ந்து கொண்டிருக்கும்போதுதான் காட்டில் வெப்பம் உண்டாகி தீ பரவுகிறது; அவர்களது, இதயத்திலும்தான். வெப்பத்தின் விளைவால் விலங்குகள் உட்படக் காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடிச் செல்வதும் அதற்குப்பிறகு ஏற்படும் மரணங்களும் நமக்கும் சோகத்தை உண்டாக்குகின்றன.

அப்போது, பார்வையாளர்களின் இதயத்தைக் குளிர்விக்கும்படி என்ட்ரி ஆகிறார் ஐந்து மாத அம்முக்குட்டி (யானை). அதுவும், கமெர்ஷியல் படக் கதாநாயகன் என்ட்ரி காட்சியில் முகத்தைக் காண்பிக்காமல் பில்டப் செய்வதுபோல, அம்முக்குட்டி முகத்தைக் காண்பிக்காமல் வெறும் தும்பிக்கையை மட்டும் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் காண்பிக்கிறது. தின்பண்டத்தை வாங்கிச் சாப்பிடும் அந்த ஓப்பனிங் காட்சியிலேயே அதன் சுட்டித்தனம் வெளிப்பட ஆரம்பித்துவிடுகிறது. ரகு கொஞ்சம் பெரியவர் ஆனதால், அம்முக்குட்டி கொஞ்சம் ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு பொம்மன் – பெல்லியுடன் கொஞ்சி பார்வையாளர்களையும் ஈர்த்துவிடுகிறது. ரகுவுக்கும் அம்முக்குட்டிக்கும் ஆரம்பத்தில் கொஞ்சம் உரசல் இருந்தாலும் பிறகு பாசமலர்களாகிவிடுகிறார்கள்.
பெற்ற பிள்ளையைப்போல் வளர்த்துவிட்டு ரகுவை முகாமில் விடவேண்டும் என்ற சூழல் வரும்போது, இதயத்தைக் கனக்கவைத்துவிடுகிறது அந்த காட்சி. அதுவும், ரகு பிரியும்போது அம்முக்குட்டியின் கதறல்… ரகு திரும்ப ஓடிவருவது எல்லாமே சகோதரத்துவ சென்டிமெண்ட். காட்டின் பேரழகையும் மலையில் தேன் எடுக்கும் காட்சியையும் அப்படியே படம்பிடித்திருக்கிறார்கள்.
தென்னிந்தியாவிலேயே, தாயை இழந்த இரண்டு குட்டி யானைகளை வளர்க்கும் தம்பதி என்ற பெருமையை அடைந்த பொம்மன் – பெல்லியின் பாசம் நிறைந்த வாழ்வியல், விலங்குகள் மீதான நேசிப்பை அதிகப்படுத்துகிறது.

ரகு – அம்முக்குட்டி என இரண்டு யானை கன்றுகளின் சுட்டித்தனம், தும்பிக்கையால் இழுத்து அரவணைக்கும் பாசப்பிணைப்பு என எக்ஸ்பிரஷன்கள் நம்மை நெகிழ்ச்சியில் தத்தளிக்க வைத்துவிடுகின்றன. ரகுவை முந்திக்கொண்டு பெல்லியிடம் பாசம் கொஞ்சும் அம்முக்குட்டியின் குழந்தைத்தனத்தை ரசிக்காமல் இருக்கமுடியாது. அதுவும், வித வித ஹேர் ஸ்டைலில் அம்முக்குட்டி பார்வையாளர்களைச் செல்லம் கொஞ்சவைத்துவிடுகிறது.
புலியால் கணவரைப் பறிகொடுத்த வயதான பெல்லி, பொம்மனை மறுமணம் செய்வதும் செம்ம க்யூட் எபிசோடு. பொதுவாக யானை பாகன்கள் என்றால் ஆண்கள்தான் நினைவுக்கு வருவார்கள். இதில், யானையை வளர்க்கும் பெண் பெல்லியையும் ஆவணப்படுத்தியுள்ளதற்காக இயக்குநர் கார்த்திகி கான்சால்வஸுக்கு கைக்குலுக்கல்கள். அதுவும், மனிதர்களின் தவறுகளால்தான் யானைகள் மக்கள் வசிப்பிடங்களை நோக்கி வருகின்றன. அனாதையாக்கப்படும் அனைத்து யானைகளையும் மனிதர்களால் வளர்க்கமுடியாது என்ற நிதர்சனத்தையும் உணர்வுபூர்வமாக கூறிய இயக்குநருக்குக் கூடுதல் பாராட்டுகள்.

பச்சை பசேல் காடுகள், காட்டு உயிர்கள், அவற்றுக்கு ஏற்படும் ஆபத்துகள் எனத் தத்ரூபமாகக் காட்டியுள்ள கரண் தப்லியால், கார்த்திகி கான்சால்வஸ், க்ரிஷ் மஹிஜா, ஆனந்த் பன்சாலின் ஒளிப்பதிவு அட்டகாசம். பார்வையாளர்களைக் குழந்தைகளாக மாற்றிவிடும் பொம்மன், பெல்லி, ரகு, அம்மு உலகத்தில் நிச்சயம் நாம் வாழ்ந்துவிட்டு வரலாம்!