சினிமா
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

வேலை பார்த்துகொண்டே படிக்கும் டின் என்கிற ஷாங்காய் நகரத்துச் சிறுவனுக்கு தன் பால்ய கால தோழியை மீண்டும் கரம்பிடிக்க ஆசை.

OTT கார்னர்
OTT கார்னர்

ColdCase

மோகன்லால், பகத் என ஓ.டி.டி-யில் களமிறங்கும் மலையாள சூப்பர்ஸ்டார்கள் வரிசையில் இப்போது பிரித்விராஜின் முறை. இவரின் முந்தைய படமான ‘அய்யப்பனும் கோஷியும்’ ஓ.டி.டியில் உண்டாக்கிய அலை, த்ரில்லரா - ஹாரரா எனக் கணிக்க முடியாத ட்ரெயிலர் என ரிலீஸுக்கு முன்பே எதிர்பார்ப்புகளைக் கிளப்பியது படம். திருவனந்தபுரத்தின் ஆற்றில் மீன் பிடிக்கும் வலையில் ஒரு மண்டையோடு மாட்டுகிறது. அது யாருடையது என விசாரிக்கும் பணி போலீஸ் அதிகாரி பிரித்விராஜுக்கு. அவர் இந்த வழக்கை விசாரிக்க விசாரிக்க, மற்றொருபக்கம் இது எதிலும் சம்பந்தப்படாத ஒரு ரிப்போர்ட்டரின் வீட்டில் அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. அவர் வீட்டு மர்மமும், மண்டையோட்டு வழக்கும் சந்திக்கும் முடிச்சுதான் கதை. கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய ப்ளஸ். ஆங்காங்கே ஹாரர் படங்களுக்குரிய ‘திக்’ தருணங்கள் இருந்தாலும், பின்பாதியின் யூகிக்கக் கூடிய திரைக்கதை பெரிய மைனஸ். பிரித்வியிடம் பெரிய ஆக்‌ஷனை எதிர்பார்த்து உட்கார்பவர்களுக்கும் ஏமாற்றமே! மலையாளத்தின் ‘ஒருதடவை பார்க்கலாம்’ த்ரில்லர்களின் லிஸ்ட்டில் சேர்கிறது அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் இந்தப்படம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Haseen Dillruba

வீடு வெடித்து கணவர் விக்ராந்த் மாஸே இறந்துவிட, அதற்கான காரண காரணிகள் மனைவி டாப்ஸி பக்கம் திரும்புகின்றன. சமுதாயமே ‘டாப்ஸி தான் கொலையைச் செய்திருக்க வேண்டும்’ என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க, அடுத்து என்ன நடக்கும் என்கிற த்ரில்லுடன் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கிறது ஹஸீன் தில்ரூபா. எல்லாவற்றிலும் ‘கொஞ்சம் எக்ஸ்ட்ரா’ கேட்கும் மனைவி, பேசவே பீதியாகும் கணவன், உள்ளே நுழையும் கணவரின் உறவினர், திடீர் காமம் தரும் பிரச்னைகள், கொலை என த்ரில்லருக்கான எல்லா விஷயங்களையும் ஒருங்கே பெற்றிருக்கிறது ஹஸீன் தில்ரூபா. படம் முழுக்க வரும் கற்பனை நாவல்கள் ஒரு பக்கம் சுவாரஸ்யம் என்றாலும், அதிகமான லாஜிக் ஓட்டைகள் படத்தையே ஒரு நாவலாக பாவித்து நம்மை கடைசிப் பக்கங்களைப் புரட்ட வைத்துவிடுகிறது. மிகச்சிறந்த த்ரில்லராக வந்திருக்க வேண்டிய சினிமா, எமோஷனலா - த்ரில்லரா என்னும் கேள்விக்குள் சிக்கித் திக்குமுக்காடிப் போய்விடுகிறது. கதைக்களத்துக்கு ஏற்ப ஆங்காங்கே அடல்ட் காட்சிகள் உண்டு. தமிழிலும் இருப்பது கூடுதல் ப்ளஸ்.

OTT கார்னர்
OTT கார்னர்

Wish Dragon

வேலை பார்த்துகொண்டே படிக்கும் டின் என்கிற ஷாங்காய் நகரத்துச் சிறுவனுக்கு தன் பால்ய கால தோழியை மீண்டும் கரம்பிடிக்க ஆசை. ஆனால், இருவருக்குமிடையே பல ஆண்டுக்கால பிரிவும், பணமும் வந்து நிற்கின்றன. அற்புத விளக்கு பூதம் ஒன்று டின் கைக்கு வர, மூன்று வரங்கள் அவனுக்குத் தரப்படுகின்றன. அதன்பின் என்ன நடக்கிறது என்பதைச் சொல்கிறது நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் விஷ் டிராகன். ‘அது என்ன சொல்றது, அலாவுதீனும் அற்புத விளக்கும், பட்டணத்தில் பூதம் எல்லாம் நாங்களும் பார்த்திருக்கிறோம்’ என்கிறீர்களா? கதை என்னவோ அதுதான். ஆனால், டின் வாழ்க்கையோடு சேர்ந்து லாங் என்னும் அற்புதங்களை அள்ளித் தரும் டிராகனின் கதையும் உடன் வருகிறது. சீனா என்பதால், பூதத்துக்குப் பதில் டிராகன். வாழ்க்கையைக் கற்று உணர்ந்தாரா லாங் என்பதுதான் கதையின் பேசுபொருள். அந்த வகையில் ஈர்க்கிறது இந்தக் குழந்தைகளுக்கான அனிமேஷன் சினிமா.

OTT கார்னர்
OTT கார்னர்

Ray

சத்யஜித் ரேயின் நான்கு கதைகளை இந்தக் காலத்திற்கு ஏற்றாற்போல நான்கு எபிசோடுகள் கொண்ட ஆந்தாலஜி தொடராக மாற்றியிருக்கிறார்கள். பணத்தில் கொழிக்கும் ஒரு இளம் தொழிலதிபரின் திடீர் மறதி வியாதியைப் பேசும் சைக்காலஜிக்கல் த்ரில்லரான ‘Forget me not’, நடுத்தர வயதிற்கேயுரிய இயலாமையில் பொசுங்கும் ஒரு மேக்கப் மேனின் பழிவாங்கும் படலமான ‘Bahrupriya’, ரயில் பயணத்தில் சந்திக்கும் இருவர் பரிமாறிக்கொள்ளும் கதைகளையும் அனுபவங்களையும் சொல்லும் நையாண்டியான ‘Hungama Hai Kyon Barpa’, தோல்வியின் விளிம்பில் இருக்கும் ஒரு நடிகனுக்கும் புகழின் உச்சியில் இருக்கும் ஒரு பெண் சாமியாருக்குமான ஈகோ மோதலை விவரிக்கும் ‘Spotlight’ என ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம். இரண்டாவது, மூன்றாவது கதைகளின் பலம் அதில் நடித்திருக்கும் மனோஜ் பாஜ்பாய், கஜ்ராஜ் ராவ், கே கே மேனன் போன்ற கலைஞர்கள் என்றால், கடைசிக் கதையின் பலம் அதன் மேஜிக்கலான ஒளிப்பதிவு. 20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளியான சத்யஜித் ரேயை பதின்பருவத்தினருக்கு அறிமுகம் செய்யும் முயற்சிக்காகவே நெட்ஃபிளிக்ஸின் இந்த சீரிஸை வரவேற்கலாம்.