
லூகா என்கிற சிறுவயது கடல் மான்ஸ்டர் எப்படித் தன் ஆசைகளை நிறைவேற்றுகிறான் என்பதுதான் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் லூகாவின் ஒன்லைன்


Tragic jungle - MOVIE
பிலிம் பெஸ்டிவல்களில் கலந்துகொண்டு தற்சமயம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் மெக்ஸிகன் நாட்டுத் திரைப்படம். மயன் நாகரிகத்தின் புகழ்பெற்ற துர்தேவதையான டாபேயின் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம். தனக்கு நடக்கவிருக்கும் திருமணத்தைத் தடுக்க, காட்டுக்குள் ஓடி ஒளிகிறாள் ஓர் இளம்பெண். அந்த மழைக்காடுகளின் மரங்களிலிருந்து பசை எடுக்கும் ஒரு குழுவை அடைகிறாள். அவர்களோடு இணைந்து பயணப்படுகிறாள். பின் நடக்கும் மர்மமான சம்பவங்களே கதை. பரபர ஹாரர் வகைப் படமில்லை. காட்டுப் பரப்புகளின் வழியே மெதுவாய் நடைபோடும் Slowburner ரகப் படமென்பதால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நமக்கு த்ரில் ஏற்றுகிறது. முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்திரா ரூபி ஆண்ட்ரேவினும் ஒளிப்பதிவும் படத்தின் பெரிய பலம். ஆங்காங்கே வன்முறை தெறிக்கும் என்பதால் கண்டிப்பாகப் படம் 18 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டும்.


LUCA - MOVIE
லூகா என்கிற சிறுவயது கடல் மான்ஸ்டர் எப்படித் தன் ஆசைகளை நிறைவேற்றுகிறான் என்பதுதான் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் லூகாவின் ஒன்லைன். கடலில் வாழும் கடல் மான்ஸ்டர்களை, வெறுத்து ஒதுக்கிறார்கள் நிலத்தில் வாழும் மனிதர்கள். கடல் மான்ஸ்டர்கள் நிலம் அடைந்ததும், மனிதர்களைப்போலத் தோற்றமளிக்கத் தொடங்கிவிடுவார்கள். தண்ணீர் பட்டால், உண்மை வெளிப்பட்டுவிடும். இப்படியான சூழலில், லூகாவுக்கு மனிதர்களுக்குள் நடக்கும் போட்டியில் கலந்துகொண்டு வெல்ல ஆசை. குழந்தைகளுக்கான கதைக்குள் நிறவெறி, உருவகேலி, பாலினப் பாகுபாடு எனப் பல்வேறு அரசியல்களை நுழைத்து சத்துமாவாகத் தந்திருக்கிறது பிக்ஸார். ‘தன்னைப்போல் பிறரையும் நினை’ என்கிற தத்துவத்தைச் சொல்லிக் கவர்கிறான் லூகா.


Sherni - MOVIE
காடும் மனிதர்களும் கலந்திருக்கும் இடத்தில் புலி ஒன்று மனிதர்களுக்கு ஆபத்தானதாக மாறிவிடுகிறது. அதைச் சுட்டுக்கொன்று தர்மத்தை நிலைநாட்டவேண்டும் என்கிறது ஒரு கும்பல். இன்னொருபுறம், அந்தப் புலியைக் காப்பாற்றி உயிரியல் பூங்காவுக்குக் கொடுக்க வேண்டும் எனப் போராடுகிறார் ஒரு வன அதிகாரி. இறுதியில் யார் வெல்கிறார்கள் என்பது படமல்ல, இந்தச் சமூகம் மிருகங்களுக்கு ஒரு குறைந்தபட்ச வாய்ப்பை இறக்கும் தறுவாயிலும்கூடத் தருவதில்லை என்பதை அழுத்திச் சொல்கிறது அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் ஷேர்னி. வித்யா பாலன், விஜய் ராஸ் என படத்தில் வரும் ஒவ்வொரு நடிகரும் கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்பப் பொருந்திப்போகிறார்கள். ‘இங்கு ஒரு காடு இருந்ததென’ தாமிரச் சுரங்கதைச் சுட்டிக்காட்டி விஜய் பேசும் வசனம் நாம் இயற்கைக்குச் செய்துவரும் துரோகத்தைத் தோலுரிக்கிறது. ‘நியூட்டன்’ இயக்குநரான அமின் மீண்டுமொருமுறை காடுகளுக்குள் சென்று வெற்றியுடன் திரும்பியிருக்கிறார். படம் முடிந்ததும், நம்முள் எழும் ஆயிரம் கேள்விகளுக்கான விடைகளை அதனுள் விட்டுச் சென்றிருக்கிறது இந்தப் படைப்பு.


The Little Things - MOVIE
லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடக்கும் சீரியல் கொலைகளைத் துப்பறியும் இளம் காவல் அதிகாரி ஒருவருக்கு மூத்த அதிகாரி ஒருவர் உதவி செய்கிறார். அதற்குக் காரணம் அவர் முன்னர் துப்புத்துலக்கிய கேஸுக்கும் இதற்குமான ஒற்றுமை. ஒட்டுமொத்த விசாரணையும் ஒருவனைச் சந்தேகத்தின் பார்வையில் சிக்கவைக்க, அவன் எப்போதும் ஒரு படி மேலே இருந்து இந்த அதிகாரிகளின் மீதே உளவியல் ரீதியான தாக்குதலை நடத்துகிறான். இது அவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஓர் உளவியல் பகுப்பாய்வாகச் சொல்கிறது படம். ஹாலிவுட்டுக்கு மிகவும் பரிச்சயமான க்ரைம் த்ரில்லர் ஜானர் படத்துக்கு மூன்று முக்கிய நடிகர்களான டென்சில் வாஷிங்டன், ரமி மாலிக் மற்றும் ஜாரெட் லெடோ இணைந்து நடித்துள்ளனர். ஆனால், இது வழக்கமான தடயங்களை வைத்துக் குற்றவாளிகளைப் பிடிக்கும் கதையாக விரியாமல், காவல் அதிகாரிகள் சந்திக்கும் உளவியல் ரீதியான பிரச்னைகள் குறித்துக் காட்சிப்படுத்துகிறது. திரைக்கதையில் டேவிட் ஃபின்சரின் ‘செவன்’, கிறிஸ்டோபர் நோலனின் ‘இன்சோம்னியா’ படங்களின் பாதிப்பும் அதிகமாகத் தெரிகிறது. அதேபோல டிவி மற்றும் வெப்சீரிஸ்களான ‘ட்ரு டிடெக்டிவ்’, ‘மைண்ட் ஹன்டர்’ போன்றவற்றையும் ஞாபகப்படுத்துகிறது. ஜாரெட் லெடோ சந்தேகத்துக்கு இடமான குற்றவாளியாக மிரட்ட, அவருக்கு ஈடுகொடுத்துத் தன் அனுபவத்தைக் காட்டியிருக்கிறார் சீனியரான டென்சில் வாஷிங்டன். ரமி மாலிக்கும் இளம் காவல் அதிகாரியாக இவர்களுக்கு ஈடாக ஸ்கோர் செய்கிறார். வழக்கமான க்ரைம் த்ரில்லராக இல்லாமல் வேறு தளத்தில் பயணிப்பதால் க்ரைம் விரும்பிகள் சற்றே ஏமாற்றம் அடையலாம். இருந்தும் முப்பெரும் ஆளுமைகளின் நடிப்புக்காக தாராளமாக ஸ்ட்ரீம் செய்யலாம்.


Lupin - SERIES
`ஜென்டில்மேன் திருடன்’ அர்சான் லூபின் கதாபாத்திரத்தால் சிறுவயதிலேயே வெகுவாக ஈர்க்கப்பட்ட அசான் டியாப், தனது தந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, அரசையே தனது பாக்கெட்டில் வைத்திருக்கும் ஒரு செல்வந்தரைப் பழிவாங்கும் கதைதான் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் பிரெஞ்சுத் தொடரான `லூபான்’ ஒன்லைன். புத்தகங்களில் லூபின் கதாபாத்திரம் செய்த தந்திரமான சாகசங்களைப் போன்றே தனது புத்திக்கூர்மையாலும், மாறுவேடத் திறமையாலும் அனைவரின் கண்களிலும் மண்ணைத் தூவி, எப்பேர்ப்பட்ட சிக்கலில் இருந்தும் எளிதாகத் தப்புவது ஹீரோவின் ஸ்டைல். புல்லட் ட்ரெயின் வேகத்தில் செல்லும் திரைக்கதை, அட்டகாசமான மேக்கிங் போன்றவற்றால் முதல் சீசன் வெளியானபோதே பாசிட்டிவ் விமர்சனங்களை வாங்கிக் குவித்தது இத்தொடர். வில்லனின் அடியாளால் டியாப்பின் மகன் கடத்தப்பட்ட முதல் சீசனின் இறுதிக்காட்சியில் இருந்தே இரண்டாவது சீசன் தொடங்குகிறது. பிளவின் நுனியில் இருக்கும் குடும்பம், துரத்தும் போலீஸ், கொல்லத் துடிக்கும் வில்லன் என இத்தனைக்கு மத்தியிலும் டியாப் வில்லனைப் பழிவாங்கினாரா என்பதுதான் இரண்டாம் பாகத்தின் கதை. இந்த பாகத்தின் தொடக்கத்தில் நம் பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு காட்சிகள் மெல்ல நகர்ந்தாலும், எபிசோடுகள் செல்லச்செல்ல சீட்டின் நுனியில் நம்மை உட்கார வைக்கிறது திரைக்கதை. எங்கு திரும்பினாலும் ரம்மியமாகக் காட்சியளிக்கும் பிரான்ஸ் நாட்டின் லொக்கேஷன், கான்சர்ட்டில் அமர்ந்து ரசிக்கும் உணர்வைத்தரும் பின்னணி இசை, `நீ எவனா இருந்தா எனக்கென்ன?’ என எவரையும் அசால்ட்டாக டீல் செய்யும் ஹீரோவின் இன்டெலிஜென்ஸ் என எல்லாம் கலந்த காக்டெயிலாக வெளியாகியிருக்கிறது `லூபின் 2’.