சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

OTT கார்னர்

லாலாகுண்டா பொம்மைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
லாலாகுண்டா பொம்மைகள்

‘மாடர்ன் லவ் சென்னை' - வெப்சீரிஸ்

`தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழில் வாசகர்கள் பகிர்ந்த வாழ்வனுபவக் காதல் கதைகள் பல மொழிகளில் வெப்சீரிஸ்களாக வந்தன. அதன் பிற கதைகள் சிலவற்றைத் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றியுள்ளது அமேசான் பிரைம் வீடியோ. உருவாக்கத் தயாரிப்பாளராக தியாகராஜன் குமாரராஜா பணியாற்றியிருக்கும் இந்த ‘மாடர்ன் லவ் சென்னை'-யில் மொத்தம் ஆறு எபிசோடுகள்.

லாலாகுண்டா பொம்மைகள்
லாலாகுண்டா பொம்மைகள்
OTT கார்னர்

லாலாகுண்டா பொம்மைகள்

ஷோபாவுக்கு முன்னாள் காதலன் கொடுத்த வலி உடலளவிலும் மனதளவிலும் பாதிப்பை உண்டாக்குகிறது. இருந்தும் துணிந்து மீண்டும் தன் காதல் கதவுகளைத் திறக்கும் அவளை எத்தகைய ஆண்கள் அரவணைக்கிறார்கள்? சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து அதற்கு அட்டகாசமாக உயிரூட்டியிருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன். ஷோபாவாக நடித்திருக்கும்  கௌரி பிரியாவின் மிரட்டல் நடிப்புடன் வசுந்தரா, எழுத்தாளர் பாக்கியம் சங்கர் என பிற நடிகர்களின் பங்களிப்பும் இந்த ‘பொம்மை' கதையைச் சுவாரஸ்யம் ஆக்கியிருக்கின்றன. ஷான் ரோல்டனின் இசையும், நிரவ் ஷாவின் ஒளிப்பதிவும் கூடுதல் பிளஸ்.

இமைகள்
இமைகள்
OTT கார்னர்

இமைகள்

காதலி தேவிக்குக் கண்பார்வை குறைந்துகொண்டே இருக்கிறது என்றாலும், அவளை விருப்பப்பட்டுத் திருமணம் செய்துகொள்கிறான் நித்தியா. ஆனால், குடும்பம் உருவான பிறகு, அதே அக்கறையும் புரிதலும் அவனிடம் இருந்ததா? அசோக் செல்வனும், டி.ஜே.பானுவும் போட்டி போட்டுக்கொண்டு நடித்தாலும் பானு அதில் இரண்டு மார்க் அதிகமாக வாங்குகிறார். ஆனால், ரோட்டில் நின்று சண்டைபோடும் அந்தக் காட்சியில் மட்டும் தராசின் முள் நேராக நிற்கிறது. பாலாஜி தரணிதரனின் எழுத்தும், பாலாஜி சக்திவேலின் இயக்கமும் முதிர்ச்சியின் சங்கமம். ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கர் வைத்திருக்கும் அந்தக் கடைசி ஷாட் ஓர் அழகான ஹைக்கூ!

காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கற எமோஜி
காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கற எமோஜி
OTT கார்னர்

காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கற எமோஜி

காதல் சினிமாப் பித்துப் பிடித்த மல்லிகாவுக்கு ‘சினிமாக் காதலில்' திளைக்க ஆசை. ஆனால், அவள் வாழ்வில் வந்த ஆண்கள் ஏமாற்றவே செய்கிறார்கள். ஆனால், ஏமாந்தவர்கள் ஆண்களிலும் உண்டுதானே? ரிது வர்மா மிகை நடிப்பை அள்ளி இறைக்க, செயற்கைத்தனமான ‘நீலாம்பரி' காட்சிகளுடன் நகர்கிறது ரேஷ்மா கட்டாலாவின் திரைக்கதை. கிருஷ்ணகுமாரின் இயக்கத்தில் குறையில்லை என்றாலும் கௌதம் மேனன் படங்களின் காதல் எபிசோடுகளின் நீட்சியாகவே அரங்கேறி முடிகிறது இந்த நாடகம். ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை, ஆங்காங்கே நிதர்சனம் பேசும் வசனங்கள் ஆகியவை மட்டுமே ஆறுதல் பரிசைப் பெற வைக்கின்றன.

மார்கழி
மார்கழி
OTT கார்னர்

மார்கழி

தந்தையும் தாயும் விவாகரத்து பெற்றுவிட, வெறுமை சூழ்ந்த ஜாஸ்மினுக்கு வாழ்வில் ஒரு பிடிமானம் தேவைப்படுகிறது. பதின்வயதுப் பெண்ணான அவளுக்கு அது ஒரு தற்காலிகக் காதலாக இருந்தால்? ஜாஸ்மினாக சஞ்சுலா சாரதி, அகவயத்தன்மை உடைய பாத்திரத்தை அதற்கேற்ற முதிர்ச்சியுடன் கையாண்டிருக்கிறார். நிஜமாகவே ‘நெஞ்சில் ஒரு மின்னல்’ இளையராஜாவின் இசை. ஹெட்செட்டை வைத்து அவருடைய பாடலின் ஒலிக்கோவையில் விளையாடியது சுவாரஸ்ய யுக்தி. பாலாஜி தரணிதரனின் திரைக்கதையும், அக்‌ஷய் சுந்தரின் இயக்கமும் இந்தக் கதையை மார்கழி மாத மழையாக மாற்றியிருக்கின்றன.

பறவைக் கூட்டில் வாழும் மான்கள்
பறவைக் கூட்டில் வாழும் மான்கள்
OTT கார்னர்

பறவைக் கூட்டில் வாழும் மான்கள்

விவாகரத்தை எப்படி ஏற்க வேண்டும் என்ற முதிர்ச்சியைத் தமிழ்ச் சமூகத்துக்கு எடுத்துரைக்கும் முன்னெடுப்பைச் செய்திருக்கிறார்கள் இயக்குநர் பாரதிராஜாவும் திரைக்கதை அமைத்திருக்கும் எஸ்.பிரதீப் குமாரும். ரம்யா நம்பீசன், கிஷோர், விஜயலட்சுமி என மூவருமே போட்டி போட்டு ஸ்கோர் செய்ய, அமைதியாக ஒரே காட்சியில் கவர்கிறார் டெல்லி கணேஷ். விவாகரத்து என்பதை இந்த அளவுக்குச் சாதாரணமாக நம்மூரில் கடந்து போவார்களா எனத் தோன்றினாலும், அப்படிச் செய்வதே சரி என்கிறது கதை. மெட்ரோ ரயில் காட்சிகள், வீட்டில் நடக்கும் உரையாடல் போன்றவற்றில் ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கரும், இசையில் இளையராஜாவும் முத்திரை பதிக்கிறார்கள்.

நினைவோ ஒரு பறவை
நினைவோ ஒரு பறவை
OTT கார்னர்

நினைவோ ஒரு பறவை

நினைவுகளை இழந்துவிட்ட காதலனைக் காப்பாற்ற, மீட்பராக மாறும் காதலிக்குச் சிலுவையைப் பரிசளிக்கிறது காதல். அந்த இரண்டாம் இன்னிங்ஸ் காதலுடன் ஒரு மெட்டா அனுபவத்தையும் தருகிறது இந்தக் கதை. காட்சிக்குக் காட்சி ஸ்கோர் செய்யும் வாமிகா கபி, இரண்டாவது பிரேக் அப்பில் காட்டும் முகபாவங்கள் நடிப்பின் உச்சம். சிகரெட்டுக்கு ‘கேன்சர் குச்சி' என்றும், டாய்லெட் டிஷ்யூவுக்கு ‘ஆ... ஸ்வைப்' என்றும் பெயரிட்டு தன் முத்திரையைப் பதிக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. கலர் கலவையில் தனிக்கவனம் பெறுகிறது நிரவ் ஷா - ஜீவா சங்கரின் ஒளிப்பதிவு. இளையராஜா, பாடல்களில் இசைராஜாவென தன் கிரீடத்தைத் தானே வைத்துக் கொள்கிறார்.