சினிமா
Published:Updated:

OTT கார்னர்

Taj: Divided by Blood - Web Series
பிரீமியம் ஸ்டோரி
News
Taj: Divided by Blood - Web Series

அக்பருக்குப் பிறகு அவரின் மூன்று மகன்களில் யார் அரியணை ஏறவேண்டும் என்ற கேள்விக்கு விடை காணும் ‘வாரிசு’ அரசியல்தான் ரான் ஸ்கல்பெல்லோ இயக்கத்தில் ஜீ5-இல் வெளியாகியுள்ள இந்த வெப் சீரிஸின் ஒன்லைன்

Cunk on Earth
Cunk on Earth
OTT கார்னர்

Cunk on Earth - Mockumentary Series

ஆவணப்படங்களைப் பகடி செய்து எடுக்கப்படும் மாக்குமென்ட்ரி படைப்புகளுக்குத் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஏற்கெனவே ‘Cunk on Britain' தொடரில் பரிச்சயமான பிலோமினா கங்க் வேடத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் டயானே மார்கன். இந்த முறை உலக வரலாறு, கற்காலம் டு எதிர்காலம் வரை பகடி செய்து ஐந்து எபிசோடுகள் கொண்ட படைப்பாக மாற்றியிருக்கிறார்கள். நிஜமான அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் எனப் பலரையும் கூட்டி வைத்து சீரியஸாகப் பேசுகிறேன் எனக் காட்சிக்குக் காட்சி காமெடியை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். அபத்த நகைச்சுவை ஜானரில் தன் சீரியஸான நடிப்பில் இந்தத் தொடரைக் கலகலப்பானதாக மாற்றியிருக்கிறார் டயானே. உப்புச்சப்பில்லாமல் எடுக்கப்படும் ஆவணப் படங்களை எள்ளி நகையாடுகிறது தொடர். மேக்கிங்கும் பிரமாண்டம். BBC Two-ல் வெளியான இந்தப் படைப்பு தற்போது நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது.

Taj: Divided by Blood
Taj: Divided by Blood
OTT கார்னர்

Taj: Divided by Blood - Web Series

அக்பருக்குப் பிறகு அவரின் மூன்று மகன்களில் யார் அரியணை ஏறவேண்டும் என்ற கேள்விக்கு விடை காணும் ‘வாரிசு’ அரசியல்தான் ரான் ஸ்கல்பெல்லோ இயக்கத்தில் ஜீ5-இல் வெளியாகியுள்ள இந்த வெப் சீரிஸின் ஒன்லைன். நரை கூடிக் கிழப்பருவம் எய்தி, நாடி தளர்ந்து கை நடுக்கம் ஏற்பட்ட போதிலும் ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?’ எனக் கேட்கும் இறுமாப்பு, தீப்பிழம்பாய்க் கொப்பளிக்கும் கோபம் என அக்பராக தன் அனுபவத்தைப் பிரதிபலிக்கிறார் நசிருதீன் ஷா. மாவீரனாக இருந்தாலும் மது, மாது என மயங்கித் திரியும் மூத்த மகன் சலீமாக ஆசிம் குலாட்டி, அவரது ஆத்மார்த்த காதலி அனார்க்கலியாக அதிதி ராவ் ஹைதரி. இவர்களின் சந்திப்பின்போது ஒலிக்கும் பின்னணி இசை பிரமாதம். பேரரசர் என்று போற்றப்பட்ட அக்பரின் ஆட்சித்திறன் பக்கம் போகாமல் அவரின் தனிப்பட்ட வாழ்வைக் காட்டும் இது, இக்காலச் சூழலில் அக்பர்மீது மரியாதையைவிட வெறுப்பைத்தான் உண்டாக்கும்.

Chris Rock: Selective Outrage
Chris Rock: Selective Outrage
OTT கார்னர்

Chris Rock: Selective Outrage - Comedy Event

டைம் பார்த்து வியாபாரம் செய்து கல்லாப் பெட்டியை நிரப்பிக்கொள்வதில் நெட்ப்ளிக்ஸுக்கு நிகர் நெட்ப்ளிக்ஸ்தான். நகைச்சுவைக் கலைஞர் கிறிஸ் ராக்குடன் இரண்டு நேரலை காமெடி ஷோவுக்கான ஒப்பந்தத்தை முன்பு அந்த நிறுவனம் போட்டிருந்தது. ஆஸ்கர் மேடையில் அவருக்கும் வில் ஸ்மித்திற்கும் முட்டிக்கொள்ள, அன்று மேடையில் விழுந்த அறை உலக வைரலாக, ‘எடுப்பா அந்தப் பத்திரத்தை' எனக் கச்சிதமாய்த் திட்டமிட்டு ஒரு ஷோவையும் இறக்கி விட்டார்கள். சும்மாவே ஆடும் கிறிஸ்ஸுக்கு சலங்கையும் கட்டிவிட்டால், அவர் விட்டுவைப்பாரா என்ன? இங்கிலாந்து அரச குடும்பத்தின் மேகன் மோர்கல் தொடங்கி தன்னை அடித்த வில் ஸ்மித் வரை பலரையும் சகட்டுமேனிக்குக் கலாய்த்துத் தள்ளியிருக்கிறார். சரி, தவற்றுக்கு அப்பாற்பட்டு அவர் பேசும் சில விஷயங்கள் சிந்திக்கவும் வைக்கின்றன என்பது இந்த காமெடி நிகழ்வின் ப்ளஸ். கெட்ட வார்த்தைகள் சரளமாய்ப் பாய்வதுதான் பெரிய மைனஸ். அதனாலேயே இது வயது வந்தவர்களுக்கு மட்டும்.

மாய தோட்டா
மாய தோட்டா
OTT கார்னர்

மாய தோட்டா - Web Series

கடும் பாதுகாப்பில் இருக்கும் அமைச்சரை ஹோட்டலில் வைத்துக் கொல்கிறது ஒரு துப்பாக்கித் தோட்டா. கொலை நடக்கும்போது அந்த இடத்தில் 12 பேர் இருக்கின்றனர். அவர்களுக்கும் அமைச்சருக்கும் என்ன சம்பந்தம், அவரின் முதன்மைப் பாதுகாப்பு அதிகாரியின் பின்னணி என்ன, துப்பறிய வரும் சிறப்பு அதிகாரி கொலைகாரனைக் கண்டறிந்தாரா? ஆறு எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடரைத் தங்களின் முதல் தமிழ்ப் படைப்பாக இறக்கியிருக்கிறது ஹங்கமா. அமித் பார்கவ், குமரன், சைத்ரா ரெட்டி, வைஷாலி தனிகா எனத் தெரிந்த முகங்கள் இருந்தும் யாரும் அழுத்தமான நடிப்பை வழங்காதது சறுக்கல். சுவாரஸ்ய முடிச்சுகள் ஆங்காங்கே இருந்தாலும், லிப் சின்க் பிரச்னைகள், சுமாரான இசை போன்றவை திரைக்கதையின் போக்கைச் சிதைக்கின்றன. லோ பட்ஜெட் சீரியல் கணக்கான இதன் மேக்கிங் மற்றொரு மைனஸ். மாயத் தோட்டாவில் மாயமும் இல்லை, தோட்டாவைப் போன்ற வேகமும் இல்லை!