
சிறுவன் பீட்டர், காணாமல்போன தன் தங்கை உயிருடன் இருக்கிறாள் என்பதை ஒரு குறிசொல்லும் பெண் வாயிலாக அறிந்துகொள்கிறான்


MH370 The Plane That Disappeared - Docuseries
நெட்ப்ளிக்ஸ் உருப்படியாய் வேலை பார்க்கும் ஒரே ஒரு ஏரியாவுக்கும் ஆபத்து வந்துவிடும் போல. 2014-ல் காணாமல்போன மலேசிய விமானம் குறித்த ஆவணத் தொடர் அறிவிப்பை நெட்ப்ளிக்ஸ் வெளியிட்டபோதே எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால், ‘அதெப்படி நாங்க சரியா பண்ணுவோம்னு நீங்க எதிர்பார்க்கலாம்’ என அதற்கு அவர்களே வேட்டும் வைத்துக்கொண்டார்கள். விமானம் என்னவானது என்கிற மில்லியன் டாலர் கேள்விக்குப் பதில் சொல்வார்கள் எனக் காத்திருந்தால், வெறும் யூகத்தின் அடிப்படையிலான தியரிகளை மட்டும் முன்வைத்து சீரிஸை சப்பையாக முடித்துவிட்டார்கள். ஆங்காங்கே ஒர்க் அவுட் ஆகும் சென்டிமென்ட் காட்சிகளும் இல்லாவிட்டால் மொத்தமாய் மூழ்கியிருக்கும் இந்தத் தொடர். 3 எபிசோடுகள், ஒவ்வொன்றும் 90 நிமிடங்கள் என்று நீட்டி முழக்காமல், விமானம் காணாமல் போனதற்கு அறிவியல் ரீதியாக என்னென்ன காரணங்கள் இருக்கலாம் என அலசியிருந்தால் சிறப்பான ஆவணத் தொடராகியிருக்கும். இவ்வளவு சொன்ன பிறகும் அப்படி என்னதான் இருக்கிறது என மனம் குறுகுறுப்பவர்கள் ஒரு வீக்கெண்டை இதற்காகத் தியாகம் செய்யலாம்.


Accidental Farmer & Co. - Web Series
உழைப்பு - அப்படின்னா என்னவென்று கேட்கும் அளவுக்குச் சோம்பேறியான வைபவ், கடனை அடைப்பதற்காகத் தாத்தா விட்டுச்சென்ற நிலத்தில் விவசாயம் செய்ய முயற்சி செய்கிறார். அவரது நிலத்தில் பெயர் தெரியாத செடி ஒன்று வளர்கிறது. என்ன செடி என்றே தெரியாமல் நிலம் முழுக்கப் பயிரிடுகிறார். அது என்ன செடி என்பதைக் கண்டுபிடித்தாரா, விவசாயம் செய்து கடனை அடைத்தாரா என்பதுதான் சுகன் ஜெய் இயக்கத்தில் சோனி லைவ்வில் வெளியாகியுள்ள ‘ஆக்சிடென்டல் ஃபார்மர் அண்ட் கோ’ வெப் சீரிஸ். வைபவ், ரம்யா பாண்டியன், வினோதினி எனப் பலர் நடித்திருந்தாலும் வைபவ் மட்டும் உடல் மொழியாலேயே கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து கவனம் ஈர்க்கிறார். ஆனால், பண்டைய கால திரைக்கதையாலும் காட்சிகளாலும் முதல் எபிசோடிலிருந்து கடைசி எபிசோடு வரை திரைக்கதை எங்குமே கவனம் ஈர்க்கவில்லை. பள்ளி ஆண்டுவிழாக்களில் நாடகம் போடுவதுபோன்ற மேக்கிங் வேறு சோதிக்கிறது. சுவாரஸ்யமான ஒன்லைனுக்குப் புதுமையான திரைக்கதை அமைத்திருந்தால் இந்த விவசாயி ஈர்த்திருப்பான்.


Luther The Fallen Sun - Movie
துப்பறியும் காவல் அதிகாரியான லூத்தர், கடத்தப்பட்ட ஓர் இளைஞன் தொடர்பான வழக்கை விசாரிக்கிறார். அது சம்பந்தமாகத் தேடப்படும் சீரியல் கில்லரோ, தன் மாஸ்டர்பிளானால் லூத்தரையே சிக்கலில் மாட்டவைத்துச் சிறைக்கு அனுப்பிவிடுகிறான். அடுத்தடுத்து அசம்பாவிதங்கள் நடக்க, சிறையிலிருந்து தப்பிவந்து குற்றவாளியைத் தேடத் தொடங்குகிறார் லூத்தர். அதில் வெற்றி அடைந்தாரா? ‘லூத்தர்’ என்ற புகழ்பெற்ற டி.வி தொடருக்கு சீக்குவலாக ஒரு படம் எடுக்கிறேன் என்று நெட்ப்ளிக்ஸ் களத்தில் குதித்திருக்கிறது. தொடர்ச்சி என்றாலும் தனிப்படமாகவும் இதைப் பார்க்கலாம் என்பது ப்ளஸ். காவல் அதிகாரியாக வரும் இட்ரிஸ் எல்பா யதார்த்த நடிப்பால் ஈர்க்கிறார். சீரியல் கில்லராக வரும் ஆண்டி செர்க்கிஸ் மிரட்டினாலும் சில இடங்களில் ஓவர்டோஸாக நடித்துத் தள்ளியிருக்கிறார். பரபர திரைக்கதை, சிறப்பான மேக்கிங் போன்றவற்றைத் தாண்டி, சீரியல் கில்லர் பெரிதாக எதையோ செய்யப்போகிறார் என்ற பில்டப் படம் முழுவதும் வியாபித்திருக்கிறது. ஆனால், கடைசிவரை அப்படி எதுவும் நிகழாமலே முடிந்துவிடுகிறது. திருப்பங்களற்ற ஆக்ஷன் டிராமா இது!


The Magician’s Elephant - Movie
சிறுவன் பீட்டர், காணாமல்போன தன் தங்கை உயிருடன் இருக்கிறாள் என்பதை ஒரு குறிசொல்லும் பெண் வாயிலாக அறிந்துகொள்கிறான். யானையே இல்லாத ஊரில் யானையைப் பின்தொடர்ந்தால் தங்கையைக் காணலாம் என்கிறார் அவர். பேரதிசயமாக, ஒரு மேஜிக் நிபுணரின் தவறான மேஜிக்கால் ஒரு யானையும் அந்த ஊருக்குள் வருகிறது. அந்த யானையை அடைய, பீட்டரின் முன்னால் இப்போது மூன்று சவால்கள் வந்து நிற்கின்றன. அவற்றில் அவன் வென்றானா என்பதுதான் இந்த நெட்ப்ளிக்ஸ் அனிமேஷன் படத்தின் கதை. இதே பெயரில் வெளியான நாவலைச் சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் நல்லதொரு பொழுதுபோக்குப் படமாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் வெண்டி ரோஜர்ஸ். பீட்டருக்கு உதவும் அரசவை கேப்டன், அரசர், மேஜிக் நிபுணர் எனச் சிறு பாத்திரங்கள்கூட தனித்தன்மையுடன் எழுதப்பட்டிருக்கின்றன. ‘லாஜிக்கைப் பார்க்காதீங்க, பேரன்பைப் பாருங்க’ என்பது இந்தப் படம் பார்க்கும்முன் கவனத்தில்கொள்ள வேண்டியது. ஒரு போரின் தாக்கம், கொண்டாட்ட மனநிலையில் இருந்த ஊரை எப்படியெல்லாம் மாற்றும் என்ற மறைமுக மெசேஜும் சிறப்பு.