Published:Updated:

OTT கார்னர்

Murder Mystery 2 - Movie
பிரீமியம் ஸ்டோரி
News
Murder Mystery 2 - Movie

வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு சில டிரோன் ஷாட்களில் மட்டும் விருதுநகர் நிலப்பரப்பைக் காட்சிப்படுத்துகிறது. மற்றபடி கதைக்குத் தேவையானதை மட்டுமே செய்திருக்கிறது.

செங்களம் - Web Series

பழிவாங்கும் படலமும் அதற்குப் பின்னால் இருக்கும் துரோகமும் அரசியல் களத்தில் குருதியை ஓடவிட்டால் அதுதான் இந்த ‘செங்களம்.'

ஒன்பது எபிசோடுகளாக விரியும் இந்த ஜி5 இணையத் தொடரில் வாணி போஜன், கலையரசன், ஷாலி நிவேகாஸ், சரத் லோஹிதாஸ்வா, வேல ராமமூர்த்தி, பகவதி பெருமாள், டேனியல் ஆனி போப், மானசா ராதாகிருஷ்ணன் எனப் பலர் நடித்துள்ளனர்.

‘இன்று', ‘அன்று ஒரு நாள்' என ஒவ்வொரு எபிசோடையும் இரண்டாகப் பிரித்து நகரும் திரைக்கதையில், இன்றைய கதையில் கலையரசனும் அவரின் இரண்டு சகோதரர்களும் தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்துக்காக வரிசையாக அரசியல் புள்ளிகளைக் கொலை செய்கிறார்கள். அதற்கான காரணம் என்ன என்பதை இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடக்கும் ‘அன்று ஒரு நாள்' கதை நமக்கு விளக்குகிறது.

செங்களம்
செங்களம்

ஒரு நகராட்சித் தலைவர் பதவியை மையமாக வைத்து, அதன் பின்னணியில் இருக்கும் குடும்ப அரசியல், எதிர்க்கட்சிகளின் சதி, நட்பு துரோகமாக மாறினால் நடக்கும் விபரீதங்கள் எனப் பல திருப்பங்களுடன் நகர்கிறது கதை. அதிகாரத்துக்காக அறத்தின் எல்லைகளைக் கவலையின்றிக் கடக்கும் ‘மனிதர்கள்', நம்பி ஏமாந்ததால் ஆயுதம் தூக்கும் ‘கொலைகாரர்கள்' என ஓர் ஊர் சம்பந்தப்பட்ட அரசியல் த்ரில்லரில் பலவிதமான கதாபாத்திரங்களை நுழைத்து சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்.

கதையின் நாயகனாகக் கலையரசன், ‘இன்று' கதையின் பெரும்பலமாக உலா வருகிறார். வாணி போஜன் கதையின் நாயகியாக முன்னர் புலப்பட்டாலும் தொடரின் பாதிக்கு மேல் அறிமுகமாகும் ஷாலி நிவேகாஸின் ‘நாச்சியார்' கதாபாத்திரமே நம் மனதில் பதிகிறது. ‘‘இந்தக் கால இளைஞர்களின் அரசியல் எப்படியிருக்கும்னு அவங்க பார்க்கட்டும்'’, ‘‘அரசியலில் சிந்திக்கத் தெரிந்தவர்கள் எல்லாம் ராஜகுரு, ராஜமாதான்னு பின்னாடிதான் இருக்கணுமா'’ என வசனங்கள் அரசியல் கத்தி வீசுகின்றன. சரத் லோஹிதாஸ்வாவின் கதாபாத்திரம் ஏகப்பட்ட பில்டப்புகளுடன் ஆரம்பத்தில் காய் நகர்த்தினாலும், பின்னர் அடையாளமே தெரியாமல்போவது ஏமாற்றம்.

செங்களம்
செங்களம்

வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு சில டிரோன் ஷாட்களில் மட்டும் விருதுநகர் நிலப்பரப்பைக் காட்சிப்படுத்துகிறது. மற்றபடி கதைக்குத் தேவையானதை மட்டுமே செய்திருக்கிறது. புதுமையின்றித் தவிக்கும் பிஜி டான் பாஸ்கோவின் படத்தொகுப்பு, பழங்கால டி.வி நெடுந்தொடர்களை நினைவூட்டுகிறது. தரண் குமாரின் இசை, அரசியல் ட்விஸ்ட்களின்போது தடதடத்துப் பரபரப்பைக் கூட்டுகிறது.

கொலைகாரர்களைப் பிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை எதையுமே புத்திசாலித்தனமாகச் செய்யாமல் இருப்பது, பிரதான ட்விஸ்ட் உட்பட அனைத்துத் திருப்பங்களும் கணிக்கும் வகையிலேயே இருப்பது போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனாலும், பொழுதுபோக்கு என்ற வகையில் ‘செங்களம்' கவனிக்க வைக்கிறது.

Chor Nikal Ke Bhaga - Movie
Chor Nikal Ke Bhaga - Movie

Chor Nikal Ke Bhaga - Movie

விமானப் பணிப்பெண் யாமி கெளதமுக்கும் வைர வியாபாரி சன்னி கெளஷலுக்கும் காதல். இவர்களின் காதல், திருமணத்தை நெருங்கும்போது சன்னிக்கு வருகிறது ஒரு நெருக்கடி. அதைச் சமாளிக்க விமானத்தில் வரும் வைரத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார்கள். அதேநேரம், விமானம் கடத்தப்படுகிறது. இந்தக் கலவரத்தில் வைரத்தைக் கொள்ளையடிக்க முடிந்ததா, விமானத்தை யார் கடத்தினார்கள், அவர்களின் நோக்கம் என்ன, யாமி கெளதமும் சன்னி கெளஷலும் இணைந்தார்களா என்பதே நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள ‘சோர் நிகல் கே பாகா’ கதை. விமானப் பணிப்பெண்ணாகச் சிறப்பான நடிப்பை வழங்கி பார்வையாளர்களின் இதயங்களை டேக் ஆஃப் செய்யவைக்கிறார் யாமி கெளதம். விமானக் கடத்தலுக்கு இப்படியும் ஒரு ட்விஸ்ட் வைத்த இயக்குநருக்குப் பாராட்டுகள். அதேநேரம், எளிதில் யூகிக்கக்கூடியதாக இருக்கும் மற்ற ட்விஸ்ட்டுகள் கொஞ்சம் பலவீனம். பிற காட்சிகளும் யூகித்ததைப் போலவே நகர்கின்றன. ஆனால், இரண்டாம் பாதி பரபரப்பாக நகர்வதால் இந்த ஹைஜாக் டிராமாவில் நாமும் ஜாலியாகப் பயணிக்கலாம்.

Murder Mystery 2 - Movie
Murder Mystery 2 - Movie

Murder Mystery 2 - Movie

2019-ல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘மர்டர் மிஸ்டரி’யின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ளது ‘மர்டர் மிஸ்டரி 2.’ ஜெனிஃபர் அனிஸ்டன், ஆடம் சாண்ட்லர், அடீல் அக்தர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கோடீஸ்வர இளவரசர் அடீல் அக்தர், தனது நெருங்கிய துப்பறியும் நண்பர்களான ஆடம் சாண்ட்லரையும், ஜெனிஃபர் அனிஸ்டனையும் தனது திருமணத்துக்கு அழைக்கிறார். தனித்தீவில் பிரமாண்டமாக நடைபெறும் திருமண விழாவின்போது அடீல் அக்தர் மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார். அடீல் அக்தர் எதற்காகக் கடத்தப்படுகிறார், துப்பறியும் நண்பர்கள் அவரைக் கண்டுபிடித்தார்களா என்பதுதான் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள ‘மர்டர் மிஸ்டரி 2.’ அனைவருமே அவரவர் நடிப்பை காமெடி ப்ளஸ் கலாட்டாவாக வழங்கியிருக்கிறார்கள். அடீல் விக்ரம் கடத்தப்பட்டபிறகு பரபரப்புடன் நகர்கிறது திரைக்கதை. ஆனால், ட்விஸ்ட்டுகள் எதிலுமே நம்பகத்தன்மை இல்லை. ஒளிப்பதிவாளர் போஜன் பசெலியின் கேமராக் கோணத்தில் தீவுகள் கொள்ளையழகு. இதனை ரசிப்பதற்காக மட்டுமே ஒருமுறை இந்தப் படத்தைப் பார்க்கலாம்.