Published:Updated:

OTT கார்னர்

Kill Boksoon - Movie
பிரீமியம் ஸ்டோரி
News
Kill Boksoon - Movie

எப்போதும் அழைப்பே வராத அந்த போனில் ஒருநாள் மணி அடிக்க, பாதிக்கப்பட்டவருக்கு பீட்டர் உதவ முற்பட, அது மிகப்பெரிய அரசியல் சதிக்குள் அவனைத் தள்ளுகிறது.

Purusha Pretham - Movie
Purusha Pretham - Movie

Purusha Pretham - Movie

கடந்த ஆண்டு வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்ற 'ஆவாச வியூகம்' படத்தின் இயக்குநர் க்ரிஷாந்த் இயக்கியிருக்கும் அடுத்த படம் இது. சோம்பலாய் வேலை பார்க்கும் கேரள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றின் எல்லைக்குள் ஒரு பிணம் கண்டெடுக்கப்படுகிறது. சில நாள்கள் கழித்து அது தன் கணவர் உடல் என ஒரு பெண் உரிமை கோருகிறார். ஆனால் அதற்குள் போலீஸ் அதைப் புதைத்து விடுகிறார்கள். இதன்பின் நடக்கும் களேபரங்கள்தான் கதை. காவல்துறையின் செயல்பாடுகளை உண்மைக்கு நெருக்கமாய்க் காட்டுவது, சமூக அவலங்களைப் பகடி செய்வது என ஏகப்பட்ட கோணங்களில் நம்மைக் கவர்கிறது படம். எஸ்.ஐ சூப்பர் செபாஸ்டியனாக வரும் பிரசாந்த் அலெக்ஸாண்டர், சூசனாக வரும் தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோரின் பங்களிப்பு பிரமாதம். வித்தியாசமான நடிப்பு, ஆழமான அரசியல் வசனங்கள், கூடவே துப்பறிதல், ட்விஸ்ட் எனப் பல ஜானர்களை உள்ளடக்கியிருக்கிறது இந்தப் படம். வித்தியாச விரும்பிகள், சோனி லைவில் இதைப் பார்க்கலாம்.

The Night Agent - Web Series
The Night Agent - Web Series

The Night Agent - Web Series

எஃப்.பி.ஐ-யில் கடைநிலை ஊழியராக இருக்கும் பீட்டர் சதர்லேண்டுக்கு வெள்ளை மாளிகையின் அடித்தளத்தில் இயங்கும் அவசர கால போன் இணைப்பு ஒன்றைக் கவனித்துக்கொள்ளும் பணி. எப்போதும் அழைப்பே வராத அந்த போனில் ஒருநாள் மணி அடிக்க, பாதிக்கப்பட்டவருக்கு பீட்டர் உதவ முற்பட, அது மிகப்பெரிய அரசியல் சதிக்குள் அவனைத் தள்ளுகிறது. தன்னை நம்பி வந்த பெண்ணைக் காத்து, அரசியல் சதிகளை பீட்டர் முறியடித்தானா இல்லையா என்பதே இந்த 10 எபிசோடு நெட்ப்ளிக்ஸ் தொடர். திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையுடன் அரசியல் ஆடுபுலி ஆட்டமாக, அட்டகாச த்ரில்லராக விரிகிறது தொடர். பீட்டராக வரும் கேப்ரியல் பேஸ்ஸோவுக்கு உணர்ச்சிகளை வெளிக்காட்டாத ஆக்‌ஷன் ஹீரோ ரோல். ரோஸாக வரும் லூசியேன் புச்சனன், அதற்கு ஈடாக பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். வெள்ளை மாளிகையின் செயல்பாடுகள், பெரிய தலைகளின் மாஸ்டர்பிளான் அரசியல் போன்ற சுவாரஸ்யங்களுக்காக இதன் நீளத்தை மறந்து ரசிக்கலாம்.

Kill Boksoon - Movie
Kill Boksoon - Movie

Kill Boksoon - Movie

15 வயது மகளைப் பராமரித்துவரும் சிங்கிள் மதர் Jeon Do-yeon. வெளியுலகத்திற்கு அவரது வாழ்க்கை இப்படித்தான். ஆனால், அவர் உண்மையில் ஸ்கெட்ச் போட்டுக் கொலை செய்யும் பெரிய கேங் ஒன்றின் நம்பர் ஒன் கில்லர். ஒரு பக்கம் பதின்வயது தடுமாற்றங்களிலிருந்து மகளை மீட்கப் போராட்டம், மறுபக்கம் கொலை செய்யும் அசைன்மென்ட்களில் வரும் சிக்கல்கள் எனத் தன்னை நோக்கிப் பாயும் தோட்டாக்களை அவர் எப்படிச் சமாளித்தார் என்பதுதான் இந்த நெட்ப்ளிக்ஸ் கொரியத் திரைப்படத்தின் கதை. மகளைக் கண்டிப்புடனும் பாசத்துடனும் வளர்க்கும் தாய், அதேநேரம் பத்துப் பேரை ஒற்றை ஆளாய்ச் சமாளித்துச் சண்டையிடும் கில்லர் என நடிப்பில் மிரட்டுகிறார் ஜியோன். 137 நிமிடப் படத்தில் முதல் பாதியைக் கொஞ்சம் பொறுமையுடன் கடந்துவிட்டால் இரண்டாம் பாதி ஓவர் ஸ்பீடில் நம்மை ஒன்ற வைத்துவிடுகிறது. கில்லர் பெண்ணின் சாகசங்களுக்காக ‘Kill Boksoon'-ஐ ரசிக்கலாம் என்றாலும் அதீத வன்முறைகள் இருப்பதைக் கவனத்தில் கொள்க.

Gaslight- Movie
Gaslight- Movie

Gaslight- Movie

ராஜ குடும்ப வாரிசு சாரா அலிகான், தந்தைமீதான கோபத்தால் சிறுவயதிலேயே அரண்மனையை விட்டு வெளியேறுகிறார். 15 வருடங்களுக்குப் பிறகு அவர் வரும்போது அங்கே தந்தை இல்லை. மாறாக, அடுக்கடுக்கான அமானுஷ்யங்கள் மட்டுமே பீதியூட்டுகின்றன. இந்தச் சூழலில் சாரா தன் தந்தையைக் கண்டுபிடித்தாரா என்பதுதான் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள ‘கேஸ்லைட்.’ நடக்கமுடியாத மாற்றுத்திறனாளியாக சாரா அலிகான். தந்தையைத் தேடுவது, சித்தியைச் சந்தேகப்பட்டுச் சண்டையிடுவது என நடிப்பில் பாஸ் ஆகிறார். சாராவின் தந்தைக்கு என்ன நேரிட்டது, அதற்குப் பின் இருப்பவர்கள் யார் என்பதற்கெல்லாம் ட்விஸ்ட்களுடன் பதில் சொல்லியிருக்கிறார்கள். அரண்மனை என்றாலே அமானுஷ்யங்கள் என்ற அரதப்பழசு கதை, மெதுவாக நகரும் திரைக்கதையிலிருந்து படத்தைக் காப்பாற்றுவது ராகுல் தருமனின் திகிலூட்டும் ஒளிப்பதிவு மட்டும்தான். அந்த அனுபவத்துக்காக இந்த அரண்மனைக்குள் சென்று வரலாம்.