
எழுத்தாளரான கிளேர் பியர்ஸுக்கு வாழ்க்கையே பிரச்னைதான். சோதனையான இந்தக் காலகட்டத்தில் வேறு வழியின்றி ஒரு புதிய வேலையை ஏற்கிறார்.

Jubilee - Web Series
ஒவ்வொருவரும் தங்களின் கனவுகளுக்காக ஒருவரை ஒருவர் சார்ந்தோ அல்லது விழுங்கியோ முன்னோக்கி வர முயலும் கனவுச்சங்கிலிதான் அதிதி ராவ் ஹைதரி, அபர்ஷக்தி குரானா, சித்தாந்த் குப்தா நடிப்பில் விக்ரமாதித்ய மோத்வானே இயக்கத்தில் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் ‘ஜூப்ளி’ வெப்சீரிஸின் கதைக்களம். அனைவரும் குறைசொல்ல முடியாத அளவுக்கு நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். பழங்கால பாலிவுட்தான் கதைக்களம். பிலிம் ரோல், செட், ஷூட்டிங், தியேட்டர் என 1947-க்குப் பிறகான படங்கள் எப்படி உருவாக்கப்பட்டன உள்ளிட்டவற்றைத் தத்ரூபமாகக் கண்முன் நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரதீக் ஷா. அதற்கு வரைகலையும் பக்கபலமாகக் கைகொடுத்திருக்கிறது. நடிகர்கள் எப்படித் தங்களின் சொந்தப் பெயரை விடுத்து, பெரும்பான்மை மக்கள் பெயர் ஒன்றை வைத்துக்கொண்டு சினிமாவில் நடிக்க வைக்கப்படுகிறார்கள் என்ற மதவாத அரசியலையும் பேசிய இயக்குநருக்குப் பாராட்டுகள். 10 எபிசோடுகள், 10 மணி நேரம் என்றாலும் பெரிதாக போர் அடிக்காமல், எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது திரைக்கதை. தலைப்புக்கேற்றாற்போல் ஜூப்ளி கொண்டாட்டமாகவே இருக்கிறது இந்தத் தொடர்.

Tiny Beautiful Things - Web Series
எழுத்தாளரான கிளேர் பியர்ஸுக்கு வாழ்க்கையே பிரச்னைதான். சோதனையான இந்தக் காலகட்டத்தில் வேறு வழியின்றி ஒரு புதிய வேலையை ஏற்கிறார். அதில் அடுத்தவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்து அதற்குத் தீர்வு சொல்லவேண்டும். ‘சுகர்’ என்ற புனைபெயரில் தன்னால் முடிந்த ஆறுதலையும் ஆலோசனையையும் வழங்குகிறார். இது அவரின் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றியது என்பதுதான் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் எட்டு எபிசோடுகளாக வெளியாகியிருக்கும் இந்த வெப் சீரிஸ். கிளேராக வரும் கேத்ரின் ஹான் மொத்த சீரிஸையும் தனது சிறப்பான நடிப்பால் தாங்குகிறார். உடைந்த மனத்தின் யதார்த்த பிம்பத்தைக் கச்சிதமாக வெளிப்படுத்தி அவர் பக்கம் நம்மை இழுத்துக்கொள்கிறார். உணர்வுபூர்வமான கதை என்றாலும் அதில் கோடை மழையாக வசீகரிக்கிறது இயல்பான நகைச்சுவை. வாழ்க்கையை நம் பார்வையிலிருந்து மட்டும் அணுகாமல் சம்பந்தப்பட்டவர்களையும் இணைத்துப் பார்க்கக் கற்றுக்கொடுக்கிறது இந்த ஃபீல் குட் டிராமா.

Obsession - Web Series
பிரபல மருத்துவரான வில்லியம் ஃபேரோ (ரிச்சர்ட் ஆர்மிடேஜ்) தன் மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணையே காதலிக்கிறார். திருமணமாகவுள்ள சூழலில் அவர்களின் காதல் எல்லை மீறுகிறது. இது அவரின் மனைவி, மகனுக்குத் தெரிந்ததா, மகன் என்ன முடிவு எடுத்தார் என்பதுதான் இந்த வெப் சீரிஸின் ஒன்லைன். காதலுக்கு இலக்கணமோ வரையறையோ பார்க்க முடியாதுதான். ஆனால், மகனைக் காதலிப்பதாகச் சொல்லிக்கொண்டு அதேநேரத்தில் அவனின் தந்தையைக் காதலிப்பது, அவரிடம் அதீத நெருக்கம் காட்டுவது எனப் படுகுழப்பமாக எழுதப்பட்டிருக்கிறது நாயகி சார்லி மர்ஃபியின் கதாபாத்திரம். நான்கு எபிசோடுகள் கொண்ட வெப் சீரிஸ் என்றாலும் அதில் சஸ்பென்ஸ், த்ரில், ட்விஸ்ட், குறைந்தபட்சம் எமோஷனைக்கூட கடத்தாமல் தொடர்ச்சியாக வெறும் ரொமான்ஸ் காட்சிகளை மட்டுமே அடுக்கியிருக்கின்றனர். ஒவ்வொரு எபிசோடிலும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நம் மனத்திரையிலேயே ட்ரெய்லராக ஓட்டிப் பார்த்துவிடும் அளவிற்கு பலவீனமாக இருக்கிறது திரைக்கதை. சர்ச்சையான உறவுமுறை சிக்கலையும் அது குறித்து உளவியல் பார்வையையும் இன்னும் சற்று முதிர்ச்சியாகக் கையாண்டிருக்கலாம்.

Hunger - Movie
உணவை வைத்து ஆடம்பரமான சீரிஸ்களும் படங்களும் எக்கச்சக்கமாய் வெளியாகியிருக்கின்றன. ஆனால் அதன் பின்னாலிருக்கும் அரசியலை, உழைப்புச் சுரண்டலை சமீப காலங்களில்தான் படைப்புகள் பேசுகின்றன. அதில் லேட்டஸ்ட் வரவு, நெட்ப்ளிக்சில் வெளியாகியுள்ள தாய்லாந்துப் படமான ‘ஹங்கர்' (Hunger). புகழ்பெற்ற செஃப் ஒருவரின் அணியில் கனவுகளோடு இணைகிறார் இருபதுகளில் இருக்கும் நாயகி. நாள்கள் செல்லச் செல்ல, இது வெளியே இருந்து பார்ப்பதுபோன்ற கலர்ஃபுல் உலகமில்லை என அவருக்குத் தெரிகிறது. பிம்பங்கள் உடைய, வன்முறையும் வஞ்சமும் வெளிப்பட, பளபள மேஜைகளுக்கும் சுவையான உணவுகளுக்கும் பின்னிருக்கும் அழுக்கு அரசியலைச் சமரசமின்றிப் பேசுகிறது படம். வெவ்வேறு கதாபாத்திரங்களின் உளவியலை அட்டகாசமாக வெளிப்படுத்துகிறது இதன் திரைமொழி. நாயகியாக வரும் Chutimon Chuengcharoensukying மற்றும் செஃப் பாலாக வரும் Nopachai Chaiyanam ஆகியோரின் நடிப்பு படத்துக்கு பலம். சைக்கலாஜிக்கல் த்ரில்லர் பட விரும்பிகள் பார்க்க வேண்டிய படம் இது.