
சுற்றுலாத் துறையில் பயணங்களை நிர்வாகம் செய்யும் பணியில் இருக்கிறார் அமேண்டா. அவரின் காதல் தோல்வியடைய, அதிலிருந்து மீள்வதற்காக வியட்நாம் சுற்றுலாத் துறை குறித்து ரகசியமாக ஆய்வு செய்யும் பணியை ஏற்கிறாள்


Tooth Pari: When Love Bites - Web Series
மனிதர்களின் ரத்தம் குடிக்கும் ரத்தக் காட்டேரி நாயகிக்கும் பல் டாக்டரான நாயகனுக்கும் காதல். பேயும் மனிதனும் காதலித்து இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள இந்த திகில் வெப் சீரிஸின் ஒன்லைன். அழகிய பேய் ரூமியாக தன்யா மாணிக்தலா நடிப்பில் மிரட்டல். ரத்தம் குடிக்கும் பேயைக்கூட உருகி உருகிக் காதலிக்க வைத்துவிடுகிறார், அப்பாவி டாக்டர் ராயாக நடித்திருக்கும் ஷாந்தனு மகேஸ்வரி. யார் அந்த ரத்தக் காட்டேரி என்பது தெரியாமல் குழம்புவது, பின்பு கண்டுபிடிப்பது என காமெடி களியாட்டம் ஆடியிருக்கிறார் எஸ்.ஐ-யாக நடித்திருக்கும் சிக்கந்தர் கேர். ரத்தக் காட்டேரிகளிடமிருந்து காப்பாற்ற முயலும் காட்சிகளில் டெரர் காட்டியிருக்கிறார் ரேவதி. படுத்த படுக்கையாகக் கிடக்கும் மனைவியிடம் அன்பு, ரத்தக் காட்டேரிகளை அடைத்து வைத்து ரத்த வியாபாரம் என்று மிரட்டியிருக்கிறார் அடில் ஹுசைன். முதல் இரண்டு எபிசோடுகள் மெதுவாக நகர்ந்தாலும் திகில், த்ரில்லிங் என சுவாரஸ்யமாகப் பயணிக்கிறது எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ்.


A Tourist's Guide to Love - Movie
சுற்றுலாத் துறையில் பயணங்களை நிர்வாகம் செய்யும் பணியில் இருக்கிறார் அமேண்டா. அவரின் காதல் தோல்வியடைய, அதிலிருந்து மீள்வதற்காக வியட்நாம் சுற்றுலாத் துறை குறித்து ரகசியமாக ஆய்வு செய்யும் பணியை ஏற்கிறாள். அங்கே டூரிஸ்ட் கைடாக வரும் சின்ஹ் இவருடன் நட்பாக, கூடவே காதலும் எட்டிப் பார்க்கிறது. நாயகியின் பழைய காதல் என்ன ஆனது, அந்நாட்டின் சுற்றுலா குறித்து அறிந்துகொள்ள வந்த அவரின் அலுவல் என்னவானது என்பதே இந்த ஃபீல்குட் படத்தின் ஒன்லைன். ரகசிய டூரிஸ்ட்டாக வரும் நாயகி ரேச்சல் லீ குக்கின் முகபாவங்கள் ரசிக்கவைக்கின்றன. டூரிஸ்ட் கைடாக வரும் நாயகன் ஸ்காட் லை, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். கிராமங்கள், அவற்றின் அழகான அமைதியான வாழ்க்கை போன்றவற்றை அழகாகச் சுற்றிக்காண்பிக்கிறது படம். ஆனால், வழக்கமான காதல் கதை, திருப்பங்கள் என எல்லாமே வழக்கமானதாகவே இருப்பது திரைக்கதையின் சறுக்கல். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்தை ஒருமுறை சுற்றிப் பார்க்கலாம்.


Peter Pan & Wendy - Movie
இது டிஸ்னியின் 100வது ஆண்டு என்பதால் தன் கிளாசிக் கதைகளை லைவ் ஆக்ஷன் படங்களாக மாற்றி ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில்’ ரிலீஸ் செய்துவருகிறது அந்நிறுவனம். அதில் லேட்டஸ்ட் வரவு இது. மேடை நாடகம், அனிமேஷன் படம் எனப் பல வடிவங்களில் வெளியான இந்த பேண்டஸி கதையில் வளராமலே இருக்கும் பீட்டர் பேன், வெண்டி மற்றும் அவளின் சகோதரர்களை தன் கனவுலகமான நெவர்லேண்டுக்குக் கூட்டிப்போகிறான். அங்கே அவன் எதிரியான கேப்டன் ஹூக் மல்லுக்கு நிற்கிறார். அவர்களின் மோதல் எதற்காக, வெண்டி தன் சகோதரர்களுடன் மீண்டும் நிஜ உலகத்துக்குத் திரும்பினாளா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை. வில்லன் என்றதும் கொடூரமான ஆளாக மட்டும் காட்சிப்படுத்தாமல் ஹீரோவுக்கு என எப்படியொரு நியாயம் இருக்கிறதோ அதேபோல அவருக்கும் ஒன்று இருக்கிறது என்று சமநிலையில் அந்தப் பாத்திரத்தை அணுகியது சிறப்பு. சீனியர் ஜூட் லா அதை உணர்ந்து நடித்திருக்கிறார். எனினும், பிடித்த கார்ட்டூன் கதையை லைவ் ஆக்ஷனில் பார்த்த திருப்தி மட்டுமே கிடைக்கிறது.


Chokehold - Movie
போதிய அவகாசம் எடுத்து பின்னர் சூடுபிடித்து எரியும் திரைக்கதை அமைப்பு கொண்ட ‘ஸ்லோபர்னர்’ வகை திரைப்படங்களுக்கு எனத் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அவர்களுக்குத் தீனி போடவே அவ்வப்போது அந்த ஜானர் படங்களை இறக்கிவருகிறது நெட்ப்ளிக்ஸ். அப்படிச் சமீபத்தில் களமிறங்கியிருப்பதுதான் இந்த துருக்கியத் திரைப்படம். அந்த நாட்டு மக்கள் ஒரு பண மோசடியில் சிக்கிக் கோடிக்கணக்கில் பணம் இழக்கிறார்கள். அந்தத் திட்டத்தின் மூளையான யாலின், சிறைக்காலம் முடிந்து தன் மனைவியோடு ஒரு சின்ன கிராமத்தில் குடியேறுகிறார். தங்கள் பணத்தை ஏமாற்றிய யாலினை அந்த ஊர் மக்கள் மொத்தமாகப் பழிவாங்கக் காத்திருக்கிறார்கள். இதனால் நிகழும் அடுத்தடுத்த சம்பவங்கள்தான் கதை. யூகிக்க முடிந்த கதை என்றாலும் அந்த க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் திடுக் ரகம். த்ரில்லர் பட விரும்பிகள், பழகிய கதை என்றாலும் புதியதொரு வெளியில் அதைக் காண விரும்புபவர்கள் ஆகியோர் இந்தப் படத்தை க்ளிக் செய்யலாம். பரபர திரைக்கதையும் ஆக்ஷனும் மட்டுமே விருப்பம் என்பவர்கள் தவிர்த்துவிடலாம்.