
பள்ளி மாணவனான வியோமுக்கு தாராமீது காதல். திடீரென ஒரு நாள் ஏரியில் தாரா பிணமாக மிதக்க, கொலையாளி யார் என்பதை தன் நண்பர்கள் உதவியுடன் கண்டுபிடிக்க முயல்கிறான் வியோம்.


Mrs.Undercover - Movie
‘காமன் மேன்’ என்கிற பெயரில் பெண் ஆளுமைகளைக் கண்டுபிடித்துக் கொலை செய்யும் சீரியல் கில்லர் ஒருவன் உலவுகிறான். ‘பழைய பன்னீர்செல்வியா வரணும்' என்பதுபோல் முன்னாள் சீக்ரெட் ஏஜென்ட் ராதிகா ஆப்தேவை நியமித்து கொலையாளியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். ராதிகா ஆப்தே கில்லரைக் கண்டுபிடித்தாரா, அண்டர்கவர் ஆபரேஷனில் அவர் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன என்ற காமெடி த்ரில்லர் கலாட்டாதான் இந்தப் படம். ராதிகா ஆப்தேவைத் தவிர இந்தக் கதாபாத்திரத்துக்கு வேறு யாரும் பொருந்த மாட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு காமெடி, காமன் வுமன், ஃபைட்டர் என மொத்தத் திரைக்கதையையும் சுமந்து செல்கிறார். சீக்ரெட் ஏஜென்ட் என்பதால் திடீர் திடீரென்று மாறு வேடங்களில் வந்து சிரிப்பு ஏஜென்டாக நடிப்பில் கவனம் ஈர்க்கிறார் உயரதிகாரியாக நடித்துள்ள ராஜேஷ் சர்மா. சீரியல் கில்லரின் தொடர் கொலைகளுக்குப் பின்னணிக் காரணம் அழுத்தமாக இல்லாததுதான் திரைக்கதையின் கில்லராகிவிடுகிறது. ராதிகா ஆப்தேவின் ஆல் எமோஷன்ஸ் நடிப்புக்காக நிச்சயமாகப் பார்க்கலாம்.


Aka - Movie
ரத்தம் தெறிக்கும் வன்முறை படம் நெடுக இருந்தாலும் அதையும் ரசிக்கும் ஒரு பட்டாளம் இருக்கத்தான் செய்கிறது. ‘John Wick', ‘The Equalizer' படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவருவதே இதற்குச் சாட்சி. அப்படியான ஜானரில் பிரெஞ்சு மொழியின் பங்களிப்பு இந்தப் படம். அண்டர்கவர் ஆபீஸராக ஒரு மாபியா கூட்டத்தில் நுழைகிறார் ஹீரோ ஆடம் ஃபிராங்கோ. பதுங்கியிருக்கும் தீவிரவாதியை அந்த மாபியா தயவில் பிடிப்பதுதான் திட்டம். அப்போது அங்கிருக்கும் தலைவனின் இளைய மகனுக்கும் நாயகனுக்கும் பாசப் பிணைப்பு ஒன்று உருவாகிறது. இதைத் தாண்டி நாயகன் வந்த காரியம் நடந்ததா என்பதைக் கொஞ்சம் அரசியல் கலந்து, அதே சமயம் பரபரப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆக்ஷன் காட்சிகள் படத்தை வேகமாக நகர்த்தினாலும், யூகிக்க முடிந்த கதை மொத்தப் படத்தையும் பின்னோக்கி இழுக்கிறது. லாஜிக் எல்லாம் பார்க்காமல் ஒரு முழுநீள ஆக்ஷன் சினிமா வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும் நெட்ப்ளிக்ஸில் இந்தப் படத்தை கிளிக் செய்யலாம்.


Save the Tigers - Web Series
நண்பனைத் தனது அப்பார்ட்மென்ட்டுக்கே குடியிருக்க வரவழைக்கும் எழுத்தாளரின் மனைவி, பழக்கவழக்கங்கள் மாறவேண்டும் என்றால் ஹைஃபையான இடத்துக்கு வீட்டை மாற்றவேண்டும் என நச்சரிக்கும் பால் வியாபாரியின் மனைவி, ‘ஆண்கள் என்றாலே இப்படித்தான்’ என்று செம்ம ஸ்ட்ரிக்டாக இருக்கும் ஐ.டி ஊழியரின் பெண்ணியவாதி மனைவி என மூன்று பெண்களின் கணவர்கள், ஒரே பள்ளியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளைக் கொண்டுவந்து விடும்போது சந்தித்துக்கொள்கிறார்கள். மூன்று பேரும் இணைந்து, தங்கள் மனைவிகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை நகைச்சுவை நாடகமாகச் சொல்ல முயன்றிருக்கிறது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் இந்த வெப் சீரிஸ். காமெடி பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை. அடுத்தடுத்த, எபிசோடுகளில் என்ன நடக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகள் இல்லாமல் திரைக்கதையை அமைத்திருப்பதும் சிக்கல். புலிபோல் ஆரம்பித்து பூனையாக முடிகிறது சீரிஸ்.


ஒரு கோடை Murder Mystery - Web Series
பள்ளி மாணவனான வியோமுக்கு தாராமீது காதல். திடீரென ஒரு நாள் ஏரியில் தாரா பிணமாக மிதக்க, கொலையாளி யார் என்பதை தன் நண்பர்கள் உதவியுடன் கண்டுபிடிக்க முயல்கிறான் வியோம். சந்தேகப் பார்வைகள், சில பல ட்விஸ்ட்ஸ் போன்றவற்றைக் கடந்து கொலை செய்தது யார் என்பதை வியோம் படை கண்டறிந்ததா என்பதே கதை. பத்மகுமார் எழுதிய கதை, திரைக்கதைக்கு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்' விஷால் வெங்கட் இயக்குநராக உயிர் கொடுத்திருக்கிறார். அத்தனை பெரிய நடிகர் பட்டாளத்துக்கு இடையே முதிர்ச்சியான நடிப்பை வெளிக்காட்டி நம்மை ஈர்க்கிறார் அபிராமி. சிறுவர், சிறுமியர்களில் ஒரு சிலர் நன்றாக நடித்திருந்தாலும் மற்றவர்களுக்கு இன்னும் பயிற்சி வேண்டும், நாயகன் வியோமாக வரும் ஆகாஷ் உட்பட.
‘Whodunit' த்ரில்லர் என்றாலும் எல்லாரையும் சுற்றிச் சுற்றி வந்து திரைக்கதை ஏமாற்றுவதால், இறுதியில் மிஞ்சுவது அயர்ச்சி மட்டுமே. குழந்தைகளை மையப்படுத்திய கதை என்றாலும் நிச்சயம் இது அவர்களுக்கான சீரிஸ் இல்லை.