சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

OTT கார்னர்

Sweet Tooth - Web Series
பிரீமியம் ஸ்டோரி
News
Sweet Tooth - Web Series

ஐ.ஏ.எஸ் கனவில் முன்னணிப் பல்கலைக்கழகம் ஒன்றில் படிக்க வருகிறார் அரவிந்த் சுக்லா. ஆனால், கல்லூரிச் சூழலோ சாதியவாதத்தாலும் மதவாதத்தாலும் கலவர பூமியாகக் காட்சியளிக்கிறது.

Sweet Tooth - Web Series
Sweet Tooth - Web Series
OTT கார்னர்

Sweet Tooth - Web Series

உலகமே வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுப் பாதி அழிந்துவிட, மனிதர்களும் மிருகங்களும் கலந்த விநோத உயிர்கள் பிறக்க ஆரம்பிக்கின்றன. அப்படி மான் - மனிதக் கலவையாகப் பிறக்கும் சிறுவன் கஸ்ஸின் கதையைச் சொல்கிறது டி.சி காமிக்ஸை அடிப்படையாகக் கொண்ட இந்த நெட்ப்ளிக்ஸ் தொடர். இரண்டாவது சீசனில் வைரஸ் பரவல் தீவிரமாக இருக்க, வில்லனான ஜெனரல் அப்பாட், கலவை இனக் குழந்தைகளைச் சிறைபிடித்து வைத்திருக்கிறான். அதிலிருந்து தப்பிக்க கஸ் போராட, அவனுக்கு உதவப் பல கைகள் முன்வர, யுத்தம் என்னவானது என்பதே கதை. கடந்த சீசன் போலவே சுவாரஸ்யமாக நகரும் கதை பெரும்பலம் என்றால், வித்தியாசமான கலவை இனக் குழந்தைகள் க்யூட்டான மேக்கப், நடிப்பு போன்றவற்றால் ஈர்க்கின்றனர். அடுத்தடுத்த நிகழ்வுகள் திரைக்கதையின் பரபரப்பைக் கூட்டினாலும் வேகத்தடைகளும் அவ்வப்போது எட்டிப்பார்க்கின்றன. இருந்தும் சிலிர்ப்பூட்டும் ஆத்மார்த்தமான காட்சிகள், உணர்வுபூர்வமான நடிப்பு, வரைகலை போன்றவை கைகொடுப்பதால் பெயரைப் போலவே இனிக்கிறது தொடர்.

Garmi - Web Series
Garmi - Web Series
OTT கார்னர்

Garmi - Web Series

ஐ.ஏ.எஸ் கனவில் முன்னணிப் பல்கலைக்கழகம் ஒன்றில் படிக்க வருகிறார் அரவிந்த் சுக்லா. ஆனால், கல்லூரிச் சூழலோ சாதியவாதத்தாலும் மதவாதத்தாலும் கலவர பூமியாகக் காட்சியளிக்கிறது. மாணவர் தலைவர்களை எப்படி அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள், சாதி - மதவெறி சமூகத்தை எப்படியெல்லாம் கடித்துக் குதறுகிறது, இதில் அரவிந்த் சுக்லாவின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆனது உள்ளிட்ட கேள்விகளுக்கான விடைதான் சோனி லைவ்வில் வெளியாகியிருக்கும் இந்த வெப் சீரிஸின் மையக்கரு. அரவிந்த் சுக்லாவாக நடித்துள்ள வியோம் யாதவ் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தாலும் முரட்டுத்தனமான பாத்திரம் அவரின் உடல்மொழிக்குப் பொருந்திப்போகவில்லை. மாணவத் தலைவர்கள் போட்டி போட்டுக்கொண்டு செய்யும் அரசியல் சதிகள் திரைக்கதைக்கு த்ரில்லைக் கூட்டுகின்றன. முதல் இரண்டு எபிசோடுகள் மெதுவாக நகர்ந்தாலும் மற்ற ஏழு எபிசோடுகளில் சுவாரஸ்யமும் வேகமும் கூடுகின்றன. பல்கலைக்கழகங்களில் திட்டமிட்டு உருவாக்கப்படும் சாதிய, மதவாத அரசியலைச் சமரசமின்றிக் காட்சிப்படுத்தியுள்ள வெப் சீரிஸ் இது.

Missing: Dead or Alive - Docuseries
Missing: Dead or Alive - Docuseries
OTT கார்னர்

Missing: Dead or Alive - Docuseries

தென் கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் (ஷெரிப்), காணாமல்போனவர்களைப் பற்றித் துப்பு துலக்குகிறார்கள். அந்தச் செயல்முறையை அருகிலிருந்து படம் பிடித்துக்காட்டி, நம்மையும் அதில் ஓர் அங்கமாக்க முயற்சி செய்கிறது நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் நான்கு எபிசோடுகள் கொண்ட இந்த ஆவணத்தொடர். பிரதானமாக விக்கி ரெய்ன்ஸ், ஜே.பி.ஸ்மித் என இரு அதிகாரிகளின் பின்னாலேயே கேமரா பயணிக்கிறது. முக்கியமாக நான்கு கேஸ்கள், இடையே சில வழக்குகள் எனக் கலந்துகட்டி அடித்திருக்கிறார்கள். நிஜமான அதிகாரிகளுக்கு ஸ்க்ரிப்ட் கொடுத்து நடிக்க வைத்து, அதை ஒரு டிராமாவாகப் படமாக்கி ஆவணப்படங்களுக்குப் புதிய பரிமாணம் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் அலெக்ஸாண்டர் இர்வின் - காக்ஸ். இந்த விநோத முயற்சியே ஒரு கட்டத்தில் ஆவணப்படுத்துதலின் நம்பகத்தன்மையைக் காலி செய்துவிடுகிறது. காரணம், இது முழுநீள க்ரைம் டிராமாவா, ஆவணப்படமா எனக் குழப்பத்தில் தடுமாறுகிறது திரைமொழி. காணாமல்போனவர்கள் பற்றிய தரவுகள் மிரட்டும் அளவுக்கு இந்த சீரிஸ் மிரட்டவில்லை.

U-Turn - Movie
U-Turn - Movie
OTT கார்னர்

U-Turn - Movie

கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘யூ-டர்ன்’, ஏற்கெனவே சமந்தா நடிப்பில் தமிழிலும் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. அதே படத்தின் அதிகாரபூர்வ இந்தித் தழுவல்தான் ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ள ‘யூ-டர்ன்’ திரைப்படம். ஒரு செய்தி நிறுவனத்தில் பயிற்சிப் பத்திரிகையாளராகப் பணியாற்றும் ஆலயா, அம்மாநிலத்தின் முக்கிய மேம்பாலத்தில் நடுவில் உள்ள தடுப்புகளை அகற்றிவிட்டு வாகன ஓட்டிகள் யூ-டர்ன் எடுப்பதால் ஏற்படும் பிரச்னைகளைச் செய்தி சேகரிக்கச் செல்கிறார். ஆனால், எதிர்பாராதவிதமாக யூ-டர்ன் எடுப்பவர்கள் ஒவ்வொருவராக இறக்கிறார்கள். யூ-டர்ன் எடுப்பவர்கள் ஏன் இறக்கிறார்கள் என்ற மர்மத்தை அவர் கண்டறிந்தாரா என்பதே கதை. துடிப்பான பத்திரிகையாளராக ஆலயா. அவருக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி நேர்த்தியாக நடித்திருக்கிறார். ரீமேக் என்றாலும் இதில் நிறையவே மாற்றங்கள், அதிலும் க்ளைமாக்ஸில் மொத்தமாக யூ-டர்ன் அடித்துக் கதையையே மாற்றியிருக்கிறார்கள். ஒரிஜினல் படத்தைப் பார்க்காதவர்களுக்குப் புதிதாக இருக்கும். ஆனால், பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் உண்டாகலாம்.