Published:Updated:

OTT கார்னர்

Ayali - Web series
பிரீமியம் ஸ்டோரி
News
Ayali - Web series

ஓர் அரசியல் கதையை சுவாரஸ்யமான வெப்சீரிஸாகத் தர முடியும் என்று நிரூபித்த இயக்குநர் முத்துக்குமாருக்கு வாழ்த்துகள்

Ayali - Web series

கடவுளின் பெயராலும் சாதியக்கட்டுப்பாடு, பண்பாட்டுப் பெருமிதம், பாரம்பர்யம் ஆகியவற்றின் பெயராலும் பெண்களின் சுயம் எப்படி ஒடுக்கப்படுகிறது, பெண்கல்வி எப்படித் தடுக்கப்படுகிறது என்பதை உயிரோட்டமுள்ள காட்சிகள் வழியாகவும் அழுத்தமான வசனங்கள் மூலமும் உரக்கப் பேசுகிறது Zee5 தளத்தில் வெளியாகியுள்ள ‘அயலி' வெப்சீரிஸ்.

இதுவரை தமிழில் வந்துள்ள பெரும்பாலான வெப்சீரிஸ்கள் த்ரில்லர் கதைகளையே அடிப்படையாகக் கொண்டவை. அவற்றிலிருந்து முற்றிலும் விலகி, சமூகத்துக்குத் தேவையான ஒரு கதைப்பொருளை அடிப்படையாகக் கொண்ட ‘அயலி'யைத் தமிழின் முதல் அரசியல் வெப்சீரிஸ் என்று சொல்லலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

1990-களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வீரப்பண்ணை என்னும் கிராமத்தில் வாழும் ஓர் இனக்குழுவினர், அயலி என்னும் பெண் தெய்வத்தை வணங்கிவருகிறார்கள். அயலியின் கோயிலில் ஆண்களும் வயதுக்கு வந்த பெண்களும் நுழையக்கூடாது. பெண்கள் வயதுக்கு வந்தவுடனே திருமணம் செய்துவைத்துவிடுகிறார்கள். இதனால் ஒரு பெண்கூட பத்தாம் வகுப்பைத் தொடாத நிலையில், தமிழ்ச்செல்வி என்னும் சிறுமிக்குப் படித்து மருத்துவராக வேண்டும் என்னும் ஆசை துளிர்க்கிறது. அதனால் தான் வயதுக்கு வந்ததையே மறைக்கிறாள். இதனால் ஏற்படும் விளைவுகள், பெண்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்ந்ததா, பெண்கள் தங்களுக்கான சுயத்தை உறுதிசெய்ய முடிந்ததா என்பதை 8 எபிசோடுகளில் சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

கண்களில் கனவையும் இதயத்தில் விடுதலைக்கான உறுதியையும் ஏந்திய தமிழ்ச்செல்வியாக அபி நட்சத்திரா, தன் மகள் வயதுக்கு வந்தபிறகு அதைச் சொல்வதா, வேண்டாமா என்னும் தவிப்பில் மருகும் தாயாக அனுமோள், தந்தைப்பாசமா, ஊர்க்கட்டுப்பாடா என்று பரிதவிக்கும் தகப்பனாக ‘அருவி’ மதன் மூவரும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். சிங்கம்புலி, லிங்கா, டி.எஸ்.ஆர்.தர்மராஜ் மூவரும் ஆணாதிக்க மனநிலையை அப்படியே பிரதிபலிக்கிறார்கள். சில காட்சிகளே வந்தாலும் பிரகதீஸ்வரனும் ஜென்சனும் நகைச்சுவையில் அசத்துகிறார்கள்.

ஓர் அரசியல் கதையை சுவாரஸ்யமான வெப்சீரிஸாகத் தர முடியும் என்று நிரூபித்த இயக்குநர் முத்துக்குமாருக்கு வாழ்த்துகள். சோர்வடையச் செய்யாத திரைக்கதையிலும் ‘‘யார் என்ன சொன்னாலும் உன் அறிவுக்கு சரின்னு பட்டதைச் செய்'’, ‘‘உங்க குடும்ப கௌரவத்தை ஏன் பொம்பளைங்க காலுக்கு இடையில தேடுறீங்க?’’ என்று அழுத்தமான வசனங்களிலும் முத்திரை பதிக்கிறார்கள் வீணை மைந்தன் - சச்சின் - முத்துக்குமார் கூட்டணி. படத்தின் ஜீவனுக்குப் பக்கபலம் சேர்க்கிறது ரேவாவின் இசை, ராம்ஜியின் ஒளிப்பதிவு, கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு.

நகைச்சுவைக் காட்சிகள் ரசிக்கவைத்தாலும் காட்சிகளின் சீரியஸ்னஸுக்கு சில சமயங்களில் தடை போடுகின்றன. தமிழ்ச்செல்வி மாட்டப்போகிறாளோ என்று தொடங்கி வேறொரு விஷயத்தில் முடியும் காட்சிகள் தொடர்ந்து வருவது சின்ன சலிப்பை ஏற்படுத்துகின்றன என்றபோதும், சமரசம் இல்லாமல் முற்போக்குக் கருத்துகளை ஓங்கி ஒலிக்கும் ‘அயலி', அனைவரும் பார்க்க வேண்டிய வெப்சீரிஸ்.

OTT கார்னர்
OTT கார்னர்

Chhatriwali - Movie

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா ஜானர் படங்கள் எப்போதுமே சக்கை போடு போடும். வெகுஜன படங்கள் தொடாத அல்லது தொடத் தயங்கும் விஷயங்களை காமெடி கலந்து பேசி, ஒரு மெசேஜ் சொல்வதுதான் இதன் சாராம்சம். இந்தக் கதைகளின் தொடர் வெற்றிகளால் இப்போது பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்தும் அப்படியான படங்கள் அதிகமாக வெளியாகின்றன. அதில் லேட்டஸ்ட் வரவு Zee5-ல் வெளியாகியுள்ள ‘சத்ரிவாளி.' ஆணுறை தயாரிக்கும் கம்பெனியில் தரக் கட்டுப்பாட்டு அதிகாரியாக வேலை பார்க்கிறார் ரகுல் ப்ரீத் சிங். வெளியே சொன்னால் தர்மசங்கடம் என நினைத்து வேறொரு பன்னாட்டுக் கம்பெனியில் வேலை பார்ப்பதாகத் தன் வீட்டிலும் தன் காதலன் வீட்டிலும் பொய் சொல்கிறார். உண்மை ஒருநாள் வெளிவர, அதன்பின் நடக்கும் களேபரங்கள்தான் கதை. திரைக்கதை போரடிக்காமல் நகர்ந்தாலும், சொல்ல வரும் கருத்தில் போதாமைகளும் நிறையவே இருக்கின்றன. ஆனால் ஜாலியாய் ஒரு டைம்பாஸ் படம் பார்க்க நினைப்பவர்களுக்கு ஏற்ற சாய்ஸ் இது. கண்டிப்பாக அடல்ட்ஸ் ஒன்லி!

OTT கார்னர்
OTT கார்னர்

Mission Majnu - Movie

1970களில் ரகசிய அணு ஆயுத சோதனை நடத்த முயற்சி செய்யும் பாகிஸ்தானின் திட்டத்தை இந்திய ‘ரா’ உளவாளிகள் எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் சாந்தனு பக்சி இயக்கத்தில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள ‘மிஷன் மஜ்னு.’ ஆனால், அணு ஆயுத சோதனையா, நமக்கே சோதனையா என்னும் அளவுக்கு கமர்ஷியல் கற்பனைகளை அள்ளி வீசிச் சோதிக்கிறது இந்தப் புனையப்பட்ட வரலாற்றுக் கதை. ரா உளவாளியாக சித்தார்த் மல்ஹோத்ராவின் நடிப்பு ஓகேவாக இருந்தாலும் உண்மையைக் கண்டறிய அவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சிறுபிள்ளைத்தனம். ராஷ்மிகா மந்தனா பார்வை தெரியாதவராக நடித்திருப்பது மட்டுமே புதிது. இந்திய உளவாளிக்கு அதிபுத்திசாலி என்று பில்டப் கொடுத்துவிட்டு, பாகிஸ்தான் ராணுவத்தை ஒன்றும் தெரியாத முட்டாள்கள் போலச் சித்திரித்திருப்பது ஏன் எனப் புரியவில்லை. பலமான இரு தரப்புகள் மோதிக்கொள்ளும்போதுதான் சுவாரஸ்யம். ஆனால் ஒரு தரப்பைப் பலவீனமாக்கிவிட்டதால் திரைக்கதையும் அதோடு சேர்ந்து பலவீனமாகிவிடுகிறது. உடம்பை முறுக்கேற்ற வைக்கும் தேசபக்திப் படங்களின் பட்டியலில் மற்றுமொரு படம், அவ்வளவே!