Published:Updated:

Mad Company விமர்சனம்: பிரிந்த உறவுகளுக்கான நாடகம் - வெப் சீரிஸ் களத்தில் ஜெயித்தாரா பிரசன்னா?

Mad Company

ஹீரோ ‘ஏகே’-வாக வரும் பிரசன்னா க்ளைமாக்ஸ்வரை அஞ்சவைக்கும் நடிப்பையும் முகபாவங்களையும் அள்ளி வீசியிருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு சைக்கலாஜிகல் ட்ரீட்மென்ட்டாகத்தான் அமைந்திருக்கிறது இந்த வெப் சீரிஸின் திரைக்கதை.

Published:Updated:

Mad Company விமர்சனம்: பிரிந்த உறவுகளுக்கான நாடகம் - வெப் சீரிஸ் களத்தில் ஜெயித்தாரா பிரசன்னா?

ஹீரோ ‘ஏகே’-வாக வரும் பிரசன்னா க்ளைமாக்ஸ்வரை அஞ்சவைக்கும் நடிப்பையும் முகபாவங்களையும் அள்ளி வீசியிருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு சைக்கலாஜிகல் ட்ரீட்மென்ட்டாகத்தான் அமைந்திருக்கிறது இந்த வெப் சீரிஸின் திரைக்கதை.

Mad Company
’உங்க வாழ்க்கையில தவறவிட்ட ஏதோ ஒரு உறவுக்காக இன்னமும் ஏங்கிக்கிட்டிருக்கீங்களா? அதே உறவாக வந்து நடிக்கிறதுக்கு நாங்க இருக்கோம்’ என்கிற சைக்கலாஜிக்கல் கதைக்களம்தான் பிரசன்னா, கனிகா, எஸ்.பி.பி சரண், தன்யா பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் நடிப்பில் ஆஹா ஓ.டி.டியில்  வெளியாகியிருக்கும் ’Mad Company’ வெப் சீரிஸின் ஒன்லைன்.

பிரபல நடிகர் ஏ.கே-வாக வரும் பிரசன்னாவுக்கும் ஊடகவியலாளராக வரும் எஸ்.பி.பி சரணுக்கும் ஒரு மோதல் வெடிக்கிறது. இதனால், செய்தி சேனலிலிருந்து நீக்கப்படும் சரண், தனியாக சேனல் தொடங்கிவிடுகிறார். படத்தில் நடிப்பதற்கு ரெட் கார்டு விதிக்கப்படும் பிரசன்னா, ஒரு டீமை வைத்துக்கொண்டு, ரியல் லைஃபில் யார் யாருக்கு என்னென்ன உறவுகள் தேவைப்படுகின்றனவோ, அந்த உறவுகளாகவே போய் நடிக்க ’Mad Company’ என்ற நிறுவனத்தை ஆரம்பிக்கிறார். பிரசன்னாவின் வித்தியாசமான ஐடியா மக்கள் மத்தியில் ஒர்க் அவுட் ஆகிறதா, பிரசன்னாவை அழிக்க நினைக்கும் எஸ்.பி.பி சரண் என்னவெல்லாம் திட்டம் போடுகிறார், அதையெல்லாம் பிரசன்னா முறியடித்தாரா என்பதுதான் மீதிக்கதை.

Mad Company
Mad Company

’அஞ்சாதே’ பட வில்லன்போல் த்ரில் கிளப்பி க்ளைமாக்ஸ்வரை ரசிகர்களை அஞ்சவைக்கும் நடிப்பையும் முகபாவங்களையும் அள்ளி வீசியிருக்கிறார் பிரசன்னா. நடிகர் ஏ.கே-வாக பிரசன்னாவின் என்ட்ரி, கெட் அப், சீரிஸ் முழுக்க அவர் கொடுக்கும் சீரியஸ் மாடுலேஷன், பாடி லாங்வேஜ் எல்லாமே ட்ரிபுள் ஓகே சொல்லவைக்கின்றன. 'Mad Company' டீம் லீடர் பிரசன்னா என்பதால் கதை முழுக்க பெரும்பாலும் பிரசன்னாவையே பின்னிக்கொண்டிருக்கிறது.

’ஃபைவ் ஸ்டார்’ படத்தில் பிரசன்னாவுடன் நடித்த கனிகா, தற்போது வெப் சீரிஸில் கூட்டு சேர்ந்திருக்கிறார். இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார்.

ஆனால், இவரைவிட அதிக ஸ்கோர் செய்கிறவர் தன்யா பாலகிருஷ்ணாதான். ஓப்பனிங் காட்சியிலேயே கதையின் கருவை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக ’ஓ’ போடவைத்துவிடுகிறார்.

எஸ்.பி.பி சரணின் வில்லத்தனம் ரசிக்கவைக்கிறது. மற்ற நடிகர்களும் அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.

ஷிவாவின் ஒளிப்பதிவு கதையை கலர்ஃபுல்லாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

காதலன், காதலி, கணவன், மனைவி, அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், தோழன், தோழி இப்படி வாழ்க்கையில தவறவிட்ட ஏதோ ஒரு உறவுக்காக ஏங்காதவர்களே இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் விதத்தில் கட்டணம் வாங்கிக்கொண்டு, சிலமணிநேரம் அவர்கள் விரும்பும் உறவைப்போல் நடிப்பது என்பது பிற்காலத்தில் தேவைப்படும் என்று சொல்லவருகிறார் இயக்குநர் விக்னேஷ் விஜயகுமார்.

Mad Company
Mad Company

அதனால்தான், உஷாராக கொரோனாவுக்குப்பிறகு 2025-ம் ஆண்டில் கதை நடப்பதுபோல் கூறிவிடுகிறார். கிட்டத்தட்ட ஒரு சைக்கலாஜிகல் ட்ரீட்மென்ட்டாகத்தான் அமைந்திருக்கிறது ’Mad Company’ வெப் சீரிஸின் திரைக்கதை. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஓர் உறவை குறித்த எதிர்பார்ப்பு ஏங்கிக்கொண்டிருக்கிறது. அதுவே மன அழுத்தத்தை அதிகப்படுத்தி இயல்பு வாழ்க்கையிலிருந்து அந்நியப்படுத்திவிடுகிறது. அவர்கள் எதிர்பார்த்த உறவைப்போல் ஒரு உறவு கிடைக்கும்போது, அந்த ஏக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்து இயல்பு வாழ்க்கைக்கு மாற ஆரம்பிக்கிறார்கள். இதை மையப்படுத்தி ஒரு வெப் சீரிஸை இயக்கிய விக்னேஷை பாராட்டி வரவேற்கலாம்.

குறிப்பாக, போதை பொருளுக்கு அடிமையான இளைஞனுக்காக பிரசன்னாவின் நடிப்பு பார்வையாளர்களை அடிக்ட் ஆக்கிவிடுகிறது. அதேபோல், 'காதல்ன்னா என்ன?' என்று தன்யா பாலகிருஷ்ணாவிடம் பேசும் வசனங்கள் வில்லத்தனமாக இருந்தாலும் அதுதான் எதார்த்தம். பூமர் அங்கிளாக பிரசன்னாவை அட்வைஸ் செய்யவைத்து, தொடரை இழு இழு என்று இழுத்துக்கொண்டிருக்காமல் ஜில்லென்ற ஐஸ்க்ரீமாய் நமக்குள் கரைத்துவிடுகிறார் இயக்குநர்.

பிரேக் அப் ஆன காதலனையே அந்தக் கதாபாத்திரத்திற்காக நடிக்க அழைக்கும் காதலியின் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

எச்சரிக்கை… சென்சார் போர்டுக்குள் அடங்காத வெப் சீரிஸ்களுக்கே உரித்தான ஆபாச வசனங்கள் திடீர் திடீரென்று வந்து தாக்குதல் நடத்தும். குறிப்பாக, பிரசன்னாவுக்கும் எஸ்.பி.பி சரணுக்குமான வசனங்கள் அப்படியானவைதான்.

பிரசன்னா - கனிகா
பிரசன்னா - கனிகா

18 வயதுக்குட்பட்ட சிறுவர் - சிறுமியர்கள் காதலித்தாலும் அது சட்டப்படி நட்புதான். அப்படியிருக்க, 13 வயது சிறுவனிடம் 'சிகரெட் பிடிக்கறியா? சிகரெட் பிடிக்கமாட்ட, ஆனா, லவ் பண்ணுவியா' என்று சிறுவனைப் பார்த்து பிரசன்னா பேசும் வசனங்கள் அரசியல் புரிதல்லற்றவை.

மூன்று பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டிற்கு அண்ணனாக நடிக்கச் செல்லும் கதாபாத்திரம் எதார்த்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக கொஞ்சம் ஏடாகூடமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அண்ணனாகச் செல்லும்போதே, அந்த வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகளை பிக் -செய்யும் நோக்கத்தில் செல்வது சுவாரஸ்யமாக இருந்தாலும் ரசிக்கமுடியவில்லை.

பிரசன்னாவின் காதல் விவகாரத்தில் மட்டும்தான் எஸ்.பி.பி சரணைக் காரணப்படுத்தவில்லை. மற்றபடி, பிரசன்னாவுக்கு நிகழும் அத்தனைக்கும் சரணே காரணமாக இருக்கிறார் என்பது நம்பும்படியாக இல்லை. தனிமனித தாக்குதல் நடத்தும் ஊடகவியலாளர்கள் குறித்து சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர். அதை, இன்னும் கொஞ்சம் எதார்த்தமாகச் சொல்லி அம்பலப்படுத்தியிருக்கலாம்.

பிரசன்னாவின் டீமிலுள்ள ஒருவரின் காதல்கூட ஈர்க்கிறது. ஆனால், பிரசன்னாவின் காதல் ஃப்ளாஷ்பேக் கொஞ்சம்கூட ஈர்க்கவில்லை. பிரேக் அப்பிற்கான காரணத்தையும் இன்னும் கொஞ்சம் அழுத்தமாகக் காண்பித்திருக்கலாம். ஒரு படமோ, தொடரோ முடியும்வரை அதில் வரும் கதாபாத்திரம் நல்லவரா, கெட்டவரா என்ற குழப்பத்தோடு கதையை நகர்த்துவது ஓகே. ஆனால், முடிந்தபிறகும் அந்தக் குழப்பம் தொடர்ந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான், பிரசன்னாவின் கதாபாத்திரமும். திடீரென்று, மக்களுக்காக இந்தச் சேவையை தொடங்கியிருக்கிறேன் என்கிறார். பிறகு, பணத்துக்காகத்தான் என்கிறார். திடீரென்று காதலியை நினைத்து உருகுகிறார். திடீரென்று காதலைக் குறித்து பாடம் எடுக்கிறார்.

Mad Company
Mad Company

போலீஸ்காரரின் அழைப்பை ஏற்று மகள், மருமகனாக நடிக்கச் செல்வது, பேய் கான்செப்டை உருவாக்கி பீதியூட்டுவது போன்ற காட்சிகளில் சிரிக்கவைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். கண்கலங்க வைக்கவேண்டிய பல இடங்களில் காமெடி, எதார்த்தம் என்கிற பெயரில் கதிகலங்க வைத்துவிடுகிறார்கள். இப்படி, சின்ன சின்ன குழப்பங்கள் தொடர்கின்றன.

'சந்திரமுகி' அரண்மனையை வாங்கி பெயிண்ட் அடிப்பதுபோல், பிரசன்னாவின் குழந்தை ட்விஸ்ட், எஸ்.பி.பி சரண் அனுப்பிவைத்த உளவாளி ட்விஸ்ட் என பண்டைய கால கதைகளில் வந்த ட்விஸ்ட்கள் எல்லாம் தோண்டி எடுத்து கதைக்குள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

எட்டு எபிசோடுகளைக் கொண்ட இந்த வெப் சீரிஸின் திரைக்கதையில் கலவையான கருத்துகள் இருந்தாலும் ’Mad Company’ சொல்ல வரும் மையக்கருத்து உளவியல் ரீதியாக கொஞ்சம் யோசிக்க வைத்துவிடுகிறது. அதற்காக, இதை ரசிக்கலாம்.