பேட்டி - கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

அங்கேயும் போர் ஆரம்பம்!

ஹாலிவுட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹாலிவுட்

இவர்கள் ஒருபுறம் என்றால், டிவி உலகில் கொடிகட்டிப்பறக்கும் HBO-வும் ஸ்ட்ரீமிங்கில் பெரிய என்ட்ரி கொடுக்கத் தயாராக இருக்கிறது.

போர்... ஆமாம், போர். உடனே மூன்றாம் உலகப்போர் அளவுக்கெல்லாம் யோசிக்க வேண்டாம். இது பொழுதுபோக்குப் போர். மக்களைக் கவர்வதற்காகப் பெரு நிறுவனங்கள் தற்போது ஸ்ட்ரீமிங் சந்தையில் கடும் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. இதைத்தான் அமெரிக்க ஊடகங்கள் ‘Streaming wars’ என்கிறார்கள்.

அங்கேயும் போர் ஆரம்பம்!
அங்கேயும் போர் ஆரம்பம்!

இன்று கைப்பேசித் திரையிலேயே அனைத்தும் கிடைத்துவிடுவதால் பொழுதுபோக்குக்குத் திரையரங்குக்குப் போகத்தான் வேண்டுமா என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் மக்கள். அதனால்தான் டிஸ்னி, வார்னர் மீடியா, ஆப்பிள் போன்ற பெரு நிறுவனங்கள் அனைத்தும் சின்னத்திரையைக் கைப்பற்றப் போட்டிபோடத் தொடங்கியுள்ளன.

திரைத்துறையில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யமே கட்டிவைத்திருக்கும் நிறுவனம் டிஸ்னி. சொல்லப்போனால் பாதி ஹாலிவுட்டே டிஸ்னியிடம்தான் இருக்கிறது. இப்படியான ஒரு நிறுவனம் ‘நாங்களும் போட்டிக்கு வரலாமா?’ என சந்தைக்குள் நுழைந்தால் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும்? அதுதான் கடந்த மாதம் டிஸ்னி+ அறிமுகமானதும் அமெரிக்க ஸ்ட்ரீமிங் சந்தையில் நிகழத்தொடங்கியிருக்கிறது. டிஸ்னி மட்டுமல்லாமல் மார்வெல், ஸ்டார்வார்ஸ் போன்ற முன்னணி ஃப்ரான்ச்சைஸ்கள் இவர்கள் கைவசம் என்பதால் ‘அவெஞ்சர்ஸ்: எண்டுகேம்’ முதல் ‘ஸ்டார்வார்ஸ்: எபிசோடு IX’ வரை அனைத்தையும் இந்தத் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யமுடியும். மற்ற எந்த ஸ்ட்ரீமிங் தளத்தை விடவும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் அதிகம் கொண்ட ஸ்ட்ரீமிங் தளமாகவும் டிஸ்னி+ இருக்கும். இதனால்தான் முதல் நாளிலேயே அமெரிக்காவில் ஒரு கோடிக்கும் மேலான சந்தாதாரர்களைப் பெற்றிருக்கிறது டிஸ்னி+.

இவர்கள் ஒருபுறம் என்றால், டிவி உலகில் கொடிகட்டிப்பறக்கும் HBO-வும் ஸ்ட்ரீமிங்கில் பெரிய என்ட்ரி கொடுக்கத் தயாராக இருக்கிறது. பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் மீடியா (AT&T நிறுவனத்துக்குச் சொந்தமானது) உதவியுடன் HBO Max என்ற ஸ்ட்ரீமிங் சேவையை அடுத்த வருட மே மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது HBO.

‘தி சப்ரனோஸ்’ தொடங்கி ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ வரை HBO தயாரித்தது எல்லாமே புதிய டிரெண்டை ஆரம்பித்துவைத்த தொடர்கள். டிவி என்றாலும் கதைசொல்லல் தொடங்கி நடிகர்கள் தேர்வு வரை அனைத்திலும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கான அதே தரத்தை முடிந்தளவு கொண்டுவரும் நிறுவனம் HBO. இதனால் விருதுகளை வாங்கிக் குவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. இருந்தும் நெட்ஃபிளிக்ஸ் போன்று இன்றைய தலைமுறைக்கு நேரடியாக ஆன்லைனில் முழு விருந்து வைக்கமுடியாமல் சில காலமாகத் திணறிவந்தது. அதைச் சரிசெய்யவே வருகிறது HBO Max. வார்னர் மீடியா துணை நிற்பதால் இதிலும் பார்ப்பதற்கு ஏராளமான தொடர்களும், திரைப்படங்களும் இருக்கும்.

திரைத் தயாரிப்பில் எந்த முன்னனுபவமும் இல்லாத ஆப்பிளும் ஸ்ட்ரீமிங் பக்கம் திரும்பியிருக்கிறது. ஏற்கெனவே `ஆப்பிள் டிவி+’ சேவை கடந்த மாதம் தொடங்கிவிட்டது. ஆப்பிள் தயாரிப்புகளை மட்டுமே கொண்ட இந்தச் சேவையை ஆப்பிள் சாதனங்களிலிருந்து ஸ்ட்ரீம் செய்யமுடியும். தற்போது மட்டும் உலகில் 140 கோடி ஆப்பிள் சாதனங்கள் இருக்கின்றன.

இந்நிலையில் கடும் நெருக்கடியில் இருப்பது நெட்ஃபிளிக்ஸ்தான். நெட்ஃபிளிக்ஸில் இருக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் பலவும் டிஸ்னி, வார்னர் மீடியா ஆகிய நிறுவனங்களுடையவைதான். இவற்றில் பலவும் 2020-ல் ஒப்பந்தம் முடிவதால் மேலே குறிப்பிட்ட நிறுவனங்களின் சேவைகளுக்கே கைமாறுகின்றன. இதனால் வாடிக்கையாளர்களை எப்படிக் கைக்குள் வைத்திருப்பது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறது நெட்ஃபிளிக்ஸ். இதற்கு தற்போது அவர்கள் கையிலிருக்கும் ஒரே ஆயுதம் ஒரிஜினல்ஸ்தான். அதாவது சொந்தமாகத் தயாரிக்கும் நிகழ்ச்சிகள். ஏற்கெனவே ஹிட்டடித்த ஒரிஜினல் தொடர்களின் அடுத்த சீசன்கள் மட்டுமல்லாமல் பல புதிய தொடர்களையும் தயாரிக்க முடிவெடுத்துள்ளது நெட்ஃபிளிக்ஸ்.

அங்கேயும் போர் ஆரம்பம்!

ஒரிஜினல்ஸ் தயாரிப்புதான் மக்களைக் கவரும் என்பதே டிஸ்னி+, HBO Max-ன் யுக்தியும். இதனால் HBO Max-ல் HBO-வின் அதே அக்மார்க் தரத்துடன் கூடுதல் தொடர்கள் நமக்குக் கிடைக்கப்போகின்றன. டிஸ்னியின் ஒரிஜினல் நிகழ்ச்சிகளில் அவெஞ்சர்ஸ் படங்களில் இடம்பெற்ற வின்டர் சோல்ஜர், லோக்கி, ஸ்கார்லெட் விட்ச் போன்ற கதாபாத்திரங் களுக்கான தனித்தனித் தொடர்களும் அடங்கும். ஆப்பிளும் தொடர்ந்து தொடர்கள் தயாரிப்பதில் முனைப்பு காட்டுகிறது. இவற்றில் சிலவற்றின் பட்ஜெட்டையெல்லாம் கேட்டால் வாயடைத்துப் போய்விடும். அவ்வளவு தொகையை ஸ்ட்ரீமிங் ஸ்பெஷல் நிகழ்ச்சிகளுக்காகச் செலவழிக்கவுள்ளன இந்த நிறுவனங்கள்.

இந்தியாவிலும் இதே அளவிலான முதலீடு நடப்பதைப் பார்க்கமுடிகிறது. ஏற்கெனவே தமிழிலும் பல தயாரிப்புகள் வந்துவிட்டாலும் இப்போதுதான் வெற்றிமாறன், கௌதம் வாசுதேவ் மேனன் என முக்கிய தமிழ்த் திரையுலகக் கலைஞர்கள் ஸ்ட்ரீமிங் பக்கம் திரும்பியிருக்கின்றனர். விகடனும் தமன்னா நடிப்பில் ‘The November’s Story’ என்ற வெப்சீரிஸை ஹாட்ஸ்டாருக்காகத் தயாரித்துவருகிறது. இதனால் இந்த மாற்றம் தமிழகம் வரையிலும் வந்துவிட்டது எனத் தைரியமாகச் சொல்லலாம்.

டிஸ்னி+ மற்றும் HBO Max போன்ற பெரும் நிறுவனங்களின் வருகையால் இந்தியாவில் எந்த மாதிரியான தாக்கம் இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. டிஸ்னி+ விரைவில் இந்தியா வந்துசேரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. HBO Max பற்றித் தெரியவில்லை. ஆனால், நிச்சயம் உலக மக்கள் அனைவரையும் சென்றுசேர வேண்டும் என்றே இந்தப் பெருமுதலீட்டை இந்த நிறுவனங்கள் செய்திருக்கின்றன. அதனால் இவர்கள் தயாரிக்கும் அனைத்துமே ஏதேனும் ஒரு வடிவத்தில் நம்மை வந்துசேரும் என்பது மட்டும் உறுதி.