மிகத்தரமான மேக்கிங்கில், தேர்ந்த நடிகர்களின் நடிப்பில், பிரமாதமான சஸ்பென்ஸ் த்ரில்லராக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி வெற்றிடத்தை நிரப்பியிருக்கிறது ‘நவம்பர் ஸ்டோரி'. ஏழு எபிசோடுகள் கொண்ட ‘Whodunnit' வகை கதையான ‘நவம்பர் ஸ்டோரி' எப்படியிருக்கிறது?
க்ரைம் எழுத்தாளர் கணேசனுக்கு அல்சைமர்ஸ் பாதிப்பு. நினைவுகளை இழக்கும் அப்பாவைக் குணப்படுத்த பூர்வீக வீட்டை விற்க நினைக்கிறார் மகள் அனுராதா. விற்க நினைக்கும் வீட்டிலேயே ஒரு கொலை நிகழ்கிறது. கொலையான பெண்ணின் பக்கத்தில், அது தொடர்பான நினைவுகள் ஏதுமின்றி அமர்ந்திருக்கிறார் கணேசன். அப்பாவைக் காப்பாற்ற, உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய எந்த எல்லைக்கும் சென்று போராடத் தயாராகிறார் அனுராதா. போலீஸ் ஒருபுறம் துப்புத் துலக்க, மென்பொருள் பொறியாளர் அனுராதா ஒருபுறம் டெக்னிக்கலாக ஆராய, யார் கொலையாளியை நெருங்குகிறார்கள் என்பதே ‘நவம்பர் ஸ்டோரி’.

அனுராதாவாக தமன்னா. நேர்த்தியான பாத்திர வார்ப்பு. உடல்நலம் சரியில்லாத அப்பா, அவரின் மருத்துவச் செலவுக்கு தேவையாக இருக்கும் பணம், பழங்கால வீட்டை விற்கப் போராட்டம், இதற்கு நடுவில் தன் வேலை என ஒரு மிடில் கிளாஸ் இளம்பெண்ணின் பிரச்னைகளை நம் கண் முன் நிறுத்துகிறார். பிரச்னைகள்தான் என்றாலும், அவற்றைத் துணிந்து எதிர்கொண்டு போராடும்போது நமக்கும் நம்பிக்கை கொடுக்கிறார் தமன்னா. குறிப்பாக, ஹேக்கிங் தொடர்பாக வரும் சவால்களை தன் டெக்னிக்கல் மூளை மூலம் சமாளிப்பது, விடை தெரியாத மர்மங்களுக்கு பல கோணங்களில் யோசித்து அவற்றின் பின்னால் இருக்கும் லாஜிக்கைப் பிடிப்பது என அட்டகாசப்படுத்தியிருக்கிறார் தமன்னா. காட்சிகளும் ஆக்ஷனும் மாறினாலும் தமன்னாவின் முக ரியாக்ஷன்களில் பெரிய மாற்றமில்லை என்பது மைனஸ்.
க்ரைம் எழுத்தாளராக, அல்சைமர்ஸ் பாதிப்புள்ளவராக ஜி.எம்.குமார். ‘‘குற்றவாளிக்கும், க்ரைம் எழுத்தாளருக்கும் ஒரு வித்தியாசம்தான். க்ரைம் எழுத்தாளன் யோசிக்கறதோட நிறுத்திடுவான். குற்றவாளி அதை செஞ்சிடுவான்’’ என அவர் தொடக்கத்தில் உதிர்க்கும் வசனம், இந்தக் கதைக்கும் பல இடங்களில் பொருந்திப் போகிறது. வீட்டில் யாருக்கும் அடங்காத குழந்தையாக அவர் செய்யும் சேட்டைகள் கலவரப்படுத்துகின்றன.

முன்னாள் ஃபாரன்சிக் எக்ஸ்பர்ட்டாக, தன்னுள் ரகசியங்கள் பலவற்றைப் புதைத்துக்கொண்டு உலவும் டாக்டர் ஏசுவாக பசுபதி. மொத்தக் கதையின் ஆணிவேர். அவரின் ஃப்ளாஷ்பேக் இதுவரை தமிழ்த் திரையில் நாம் காணாத ஒன்று. தான் நினைத்ததைச் செய்ய முடியாமல், அதற்காகக் கடைசிவரை போராடி, விரக்தியின் விளிம்புக்குச் செல்லும் ஒருவனின் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதற்கு அவரின் கதையே சாட்சி! அந்த ஃப்ளாஷ்பேக்கிலும் க்ளைமாக்ஸிலும் தன் நடிப்பு மூலம் தனிக்கவனம் பெற்று தனி ஒருவனாக ‘நவம்பர் ஸ்டோரி' தொடரைத் தாங்கி நிற்கிறார் பசுபதி. உண்மையில் டைட்டில் கார்டில் தமன்னாவின் ‘நவம்பர் ஸ்டோரி' என்பதற்கு பதில் தமன்னா & பசுபதியின் என்றே போட்டிருக்கவேண்டும் எனத் தோன்றும் அளவுக்கு மிகத் தேர்ந்த நடிப்பு.
காவல்துறை ஆய்வாளராக வரும் அருள்தாஸ் அற்புதமான கதாபாத்திரத் தேர்வு. கண்டிப்பும் நையாண்டியும் கலந்த போலீஸாக பின்னி எடுத்திருக்கிறார். நேர்மையான அதிகாரியாக, உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற துடிப்பு உள்ளவராக, ஒரு சிறு கோணம் கிடைத்தாலும் அதில் நூல் பிடித்துக் கொண்டு முன்னேறும் போலீசாக பவர் காட்டியிருக்கும் அருள்தாஸுக்கு சல்யூட் அடிக்கலாம்.
மலர் மன்னனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா கதைக்குப் பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்தாமல் கடந்துபோகிறார். மைனா நந்தினி, மதியாக நடித்திருக்கும் நமிதா கிருஷ்ணமூர்த்தி இருவரும் கதைக்கு பக்கபலம்.
ஏழு எபிசோடுகளுக்கு ஒரு கொலை வழக்கையும் அதன் பின்கதையையும் இறுக்கிப் பிடிக்கவேண்டும், அதே சமயம் அதன் டெம்போ குறையவே கூடாது என சற்றே சவாலான ஒரு கயிற்றின் மேல் நடந்திருக்கிறார் இயக்குநர் இந்திரா சுப்ரமணியன். சவாலை மிகச்சிறப்பாக சமாளித்து தரமான த்ரில்லரை ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

நவம்பர் ஸ்டோரியின் பெரும்பலம் அதன் மேக்கிங். மிரள வைக்கும் கேமரா கோணங்கள், ஒளிக்கோர்வைகள், த்ரில் காட்சிகளுக்கு ஏற்ற இசை சேர்ப்பு, மார்ச்சுவரி போன்ற செட்டப்களுக்கு உழைத்த ஆர்ட் டிபார்ட்மென்ட் என அனைத்துமே டாப் கிளாஸ். குறிப்பாக அந்தச் சிறுவன் தோன்றும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் ஒருவித அமானுஷ்யம் இழையோடுகிறது. சரண் ராகவனின் பின்னணி இசை பல இடங்களில் த்ரில் அறிந்து உழைத்திருக்கிறது. விது அய்யண்ணாவின் ஒளிப்பதிவு அதற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
ஆரம்ப எபிசோடுகள் கொஞ்சம் மெதுவாக நகர்வதும், கொலைக்கான காரணம் வலுவாக இல்லாததும் கொஞ்சம் உறுத்தல். ஆனால், புதிர் போடும் திரைக்கதைக்காகவும், அந்த த்ரில் அனுபவத்துக்காகவும் நிச்சயம் பார்க்க வேண்டிய வெப் சீரிஸ், ‘நவம்பர் ஸ்டோரி'.