
WEB SERIES
உலகம் முழுவதும் உள்ள காடுகளில் வாழும் புலிகளின் எண்ணிக்கையைவிட, அமெரிக்காவில் ‘செல்லப்பிராணிகளாக’ வளர்க்கப்படும் புலிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகம் என்பதை நம்ப முடிகிறதா?
புலி, சிங்கம், கருஞ்சிறுத்தை முதலான விலங்குகளைச் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்கு அமெரிக்காவில் மிகப்பெரிய கள்ளச் சந்தை இருக்கிறது. அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் இந்த விலங்குகளை வளர்க்கும் மனிதர்களுள் முக்கியமானவர் ஜோ எக்ஸாடிக். தன்னை எதிர்த்த பெண் ஒருவரைக் கொலை செய்வதற்குக் கூலிப்படையை ஏவியது, புலிகளைக் கொன்றது முதலான வழக்குகளில் தண்டிக்கப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார் ஜோ.
ஜோ எக்ஸாடிக் மீதான குற்றச்சாட்டுகளின் வழியாக, அமெரிக்காவின் எக்ஸாடிக் விலங்குகளை வளர்க்கும் நெட்வொர்க் மீது உலகத்தின் கவனத்தைத் திருப்பியிருக்கிறது ‘டைகர் கிங்’ என்ற ஆவணப்படத் தொடர். நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ள இந்தத் தொடர், க்வாரன்டீன் காலத்தில் அமெரிக்கா முழுவதும் அதிகம் பேரால் பார்க்கப்படும் தொடராக சாதனை புரிந்திருக்கிறது.

எக்ஸாடிக் விலங்குகள் வளர்ப்புமீது வெறிகொண்ட மனிதராக அறிமுகமாகும் ஜோவுக்கு புதுமையும், வித்தியாசமும்தான் வாழ்க்கை. பால்புதுமையினரான ஜோ, ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களைத் திருமணம் செய்துகொண்டார். கௌபாய் ஸ்டைலில் ஆடை அணிந்துகொண்டு, இடுப்பில் துப்பாக்கியுடன் புலிகளுடனும் சிங்கங்களுடனும் விளையாடும் ஜோ, எதிலும் தன்னை முன்னிலைப்படுத்துபவர். அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் இருக்கிறது ஜோவின் பூங்கா. தனது செல்லப்பிராணிகளையும், தனது வாழ்க்கையையும் பற்றி ஆன்லைனில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்திவரும் ஜோவுக்குப் பரம எதிரி கரோல் பேஸ்கின்ஸ் என்ற பெண்.
கரோல் பாஸ்கின்ஸ் விலங்குகள் நல ஆர்வலர். ஜோவைப் போன்ற மனிதர்கள் புலிக்குட்டிகளையும், சிங்கக் குட்டிகளையும் வைத்து சுற்றுலா வருபவர்களுக்கு போட்டோ எடுப்பது, எக்ஸாடிக் விலங்குகளை இனப்பெருக்கம் செய்து குட்டிகளைக் கள்ளச் சந்தையில் விற்பது, வளர்ந்த புலிகளைக் கொல்வது முதலானவற்றில் ஈடுபடுவதாகவும், அதற்காகவே அவர்களை எதிர்ப்பதாகவும் கூறுகிறார் கரோல். ஜோ எக்ஸாடிக், கரோல் பாஸ்கின்ஸ் ஆகியோருக்கிடையிலான இந்தச் சண்டையில் பல்வேறு எக்ஸாடிக் விலங்குகள் உரிமையாளர்கள் இருக்கின்றனர். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் வெவ்வேறு வகையில் விநோதமாக அமைந்திருக்கின்றன. தனது விலங்குகளைப் பார்வையிட வந்த டீனேஜ் பெண்கள் பலரைப் பல்வேறு காலங்களில் திருமணம் செய்து, தனது பூங்காவில் பணியாற்ற வைத்திருக்கும் ‘பகவான்’ டாக் ஆண்டில், லாஸ் வேகாஸ் நகரத்தில் இளம்பெண்களைக் கவர்வதற்காக சூட்கேஸில் புலிக்குட்டிகளை வைத்து, எடுத்துச் செல்லும் ஜெஃப் லோவ், லாரன் தம்பதி என சினிமாவை மிஞ்சிய நிஜ கதாபாத்திரங்களால் நிரம்பியிருக்கிறது இந்த ஆவணப்படத் தொடர்.
ஜோ எக்ஸாடிக் கடந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தலிலும், ஓக்லஹோமாவுக்கான ஆளுநர் தேர்தலிலும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர். `டைகர் கிங்’ தொடரின் மையக் கதாபாத்திரங்களான ஜோ - கரோல் பகையை, ட்ரம்ப் - ஹிலாரி ஆகியோருடன் இணைத்து ட்ரோல் செய்துகொண்டிருக்கின்றனர் அமெரிக்காவின் நெட்டிசன்கள். இதை ஏற்கும் விதமாக, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோ எக்ஸாடிக் கெட்டப்பில் ட்ரம்ப்பை போட்டோஷாப் செய்து பதிவேற்றியுள்ளார்.

முழுக்க முழுக்க விநோதமான மனிதர்களிடையே சிக்கித் தவிக்கும் எக்ஸாடிக் விலங்குகளின் நிலை குறித்துப் பெரிய அளவில் தொட்டுச் செல்லாதது இந்த ஆவணப்படத் தொடரில் குறையாகத் தென்படுகிறது. எனினும், எக்ஸாடிக் விலங்குகளை வளர்க்கும் மனிதர்களின் மனங்களில் நிரம்பியிருக்கும் பகைமையையும், குரோதத்தையும் அவர்களிடம் இருந்தே வாக்குமூலமாகப் பதிவுசெய்திருக்கிறது ‘டைகர் கிங்.’ வில்லன்களையும், விநோத வாழ்க்கைகளையும் ரசிக்க விரும்புவோருக்கு ‘டைகர் கிங்’ நிச்சயம் பெரும் ஆச்சர்யங்களைத் தரும்.