கட்டுரைகள்
Published:Updated:

மனிதர்களுக்கு மரணம் இல்லாவிட்டால்?

வெப்சீரிஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
வெப்சீரிஸ்

Web Series

சாகாவரம் மனிதத்தின் நீண்டகாலத் தேடல். இந்தத் தேடலுக்கான விடை தொழில்நுட்பத்திடம் இருந்தால்?

2384-ம் ஆண்டு, பூமியைக் காலி செய்துவிட்டு வேறு வேறு கிரகங்களுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறான் மனிதன். செயற்கை நுண்ணறிவுக்கு மனிதத் தன்மை வந்துவிட்ட காலம். விர்ச்சுவல் ரியாலிட்டி, ரியாலிட்டியை மிஞ்சிவிட்டது. மனிதனும் மரணமில்லாதவனாக மாறிவிட்டான். ஆம், ஒரு மனிதனின் மொத்த சுய நினைவையும் ஸ்டோர் செய்யும் வசதி வந்துவிட்டது. இந்த சுயநினைவு கொண்டு உருவாகும் மொத்த டேட்டாவை DHF (Digital Human Freight) என்கிறார்கள். இந்த டேட்டா தண்டுவடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ‘கார்ட்டிகல் ஸ்டேக்’ (Cortical Stack) என்ற கருவியில் சேமிக்கப்படுகிறது. இந்த ஸ்டேக் அழிந்தால் மட்டுமே ஒருவர் மரணமடைந்ததாகக் கருதப்படும். இல்லையென்றால் வேறொரு உடலில் (இதை ஸ்லீவ் என்கிறார்கள்!) இந்த ஸ்டேக்கைப் பொருத்தி மீண்டும் அவரை உயிர்ப்பித்துவிடலாம். இப்படியான ஒரு எதிர்கால உலகில் நடப்பதுதான் ‘ஆல்ட்டர்டு கார்பன்’(Altered Carbon) வெப்சீரிஸின் கதை.

வெப்சீரிஸ்
வெப்சீரிஸ்

சயின்ஸ் ஃபிக்‌ஷன் பார்வையாளர்களைப் பெருமளவில் கவர்ந்த இந்த தொடரின் இரண்டாவது சீசனை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். 2002-ல் இதே பெயரில் வெளிவந்த ரிச்சர்ட் கே மார்கனின் நாவலை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது.

வெப்சீரிஸ்
வெப்சீரிஸ்

உலகில் எல்லாம் மாறிவிட்டாலும் உயர்வு, தாழ்வு மட்டும் அப்படியே இருக்கிறது. பணம் படைத்தவர்களால் தங்களது சுயநினைவு டேட்டாவை இணையத்தில் பேக்-அப் எடுக்கமுடியும். இந்த பேக்-அப் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நடந்துகொண்டே இருக்கும். அப்படியான ஒரு பணக்காரன்தான் லாரன்ஸ் பேன்கிராஃப்ட். அன்றாட பேக்-அப் எடுக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கொல்லப்படுகிறான் இவன். இந்த சம்பவத்திற்கு முன் எடுக்கப்பட்ட பழைய பேக்-அப்பைக் கொண்டு உயிர்ப்பிக்கும் இவன் தன்னைக் கொன்றது யார், அப்போது என்ன நடந்தது என்பதைக் கண்டறிய 300 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த வீரர் ஒருவரை உயிர்ப்பித்து மீண்டும் உலகிற்கு அழைத்துவருகிறான். அவன்தான் டகேஷி கோவாச்ஸ், கதையின் நாயகன். தொழில்நுட்பம் நிறைந்த அந்த உலகில் இந்தப் புதிருக்கு விடை கிடைக்கிறதா? மரணமில்லாத உலகம் எவ்வளவு இருண்டதாக இருக்கும்? இவைதாம் முதல் சீசனின் கதை.

முதல் சீசனின் கதைக்குப் பிறகு பல உடல்கள் மாறி 30 வருடங்களாக, 300 வருடங்களுக்கு முன்பு பிரிந்த காதலியான குவேல்க்வெஸ்ட் ஃபால்கனரை தேடிக்கொண்டிருக்கிறான் டகேஷி கோவாச்ஸ். ‘ஸ்டேக்’ தொழில்நுட்பத்தையே கண்டுபிடித்தது அவள்தான். இறுதியாக அவள் எங்கு இருக்கிறாள் என்பது பற்றி டகேஷி கோவாச்ஸுக்கு தெரியவருகிறது. அந்தப் புள்ளியில் ஆரம்பமாகிறது இரண்டாம் சீசன். இந்த சீசனில் இறுதியாக நாயகனின் சொந்த கிரகமான ஹார்லன்ஸ் உலகிற்கு நகர்கிறது கதை. இதற்கு மேல் கதையைக் கிளறினால் சுவாரஸ்யம் கெட்டுவிடும் என்பதால் ஸ்கிப் பட்டன் அழுத்தி நகர்வோம்.

வெப்சீரிஸ்
வெப்சீரிஸ்

உடல்கள் மாறிக்கொண்டே இருப்பதால் நம்மூர் சீரியல்களில் போடுவது போல ‘இனி இவர்தான் டகேஷி கோவாச்ஸ்’ என்று ஒவ்வொரு சீசனும் போடவேண்டிய அவசியம் இவர்களுக்கு இல்லை. ஒவ்வொரு சீசனும் ஒவ்வொரு நடிகரைக் களமிறக்கலாம். இந்த சீசனில் டகேஷி கோவாச்ஸ் கதாபாத்திரத்தின் உடல் அந்தோணி மேக்கியுடையது. இவரை மார்வெல் சூப்பர்ஹீரோ படங்களில் ஃபால்கனாகப் பார்த்திருப்பீர்கள். உடல் மாறினாலும், உடல்மொழி மற்றும் நடிப்பால் இது டகேஷி கோவாச்ஸ்தான் என ரசிகர்களை நம்பவைத்துவிடுகிறார். சென்ற சீசனில் செயற்கை நுண்ணறிவு ‘போ’வாகக் கலக்கிய கிறிஸ் கானர் இந்த சீசனிலும் டகேஷி கோவாச்ஸின் துணை கதாபாத்திரமாக தொடர் முழுக்க உடன் வருகிறார். தொடரின் மற்ற புதுவரவுகளான லீலா லோரன் மற்றும் டினா சிஹாபி தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

முதல் சீசனைவிட எபிசோடுகள் குறைவு என்றாலும், இம்முறை மேக்கிங்கில் தரமான சம்பவம் செய்திருக்கிறார்கள். திட்டமிடப்பட்ட தெளிவான கலை இயக்கமும் விஷுவல் எஃபெக்ட்ஸும் காட்டும் எதிர்கால உலகம் அவ்வளவு சுவாரஸ்யம். ‘சயின்ஸ் ஃபிக்‌ஷனில் எல்லாம் பெரிய இன்ட்ரஸ்ட் இல்லை’ என்பவர்களைக்கூட இதன் ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கையின் நுனியில் அமரவைக்கும். கதாபாத்திரங்களுக்கும் உயிர்பயம் குறைவு என்பதால் புல்லட்டுகள் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் அனைத்துமே அனல் பறக்கின்றன.

வெப்சீரிஸ்
வெப்சீரிஸ்

இந்தக் கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கும்போதே, ஒரு கட்டத்தில் என்ன ஸ்டேக், DHF, செயற்கை நுண்ணறிவு, விர்ச்சுவல் ரியாலிட்டி, ஹார்லன்ஸ் லேண்ட் என ஏதேதோ அடுக்கிக்கொண்டே போகிறார்களே என்று தோன்றியிருக்கலாம். இதுதான் தொடரின் மைனஸும்கூட. எந்த முன்னறிமுகமும் இல்லாமல் எதிர்கால உலகில் திடீரென இறக்கிவிட்டது போல்தான் முதல் சில எபிசோடுகள் இருக்கும். ஆனால் தொடரின் விறுவிறுப்பான காட்சியமைப்பு நம்மை சில எபிசோடுகள் கடந்து கூட்டிவந்துவிடும். அதற்குள் ஓரளவு எல்லாம் புரிந்துவிடும் என்பதால் இதைப் பெரிய குறையாகச் சொல்லமுடியாது.

இந்த க்வாரன்டீன் நேரத்தில் எதிர்காலத்துக்கு ட்ரிப் அடிக்கத் தயார் என்றால் உங்களுக்கான சரியான டிக்கெட் இந்த ஆல்ட்டர்டு கார்பன்.