Published:Updated:

அவர்களுக்குள் உறங்கும் மிருகம்!

WEB SERIES
பிரீமியம் ஸ்டோரி
News
WEB SERIES

WEB SERIES

மாயாஜாலங்களும் அமானுஷ்யங்களும் எப்போதும் சுவாரஸ்யமானவை.

வெவ்வேறு உலகங்கள், ஆன்மாவுக்கெனத் தனித்தனி மிருகம் கொண்ட மனிதர்கள், குழந்தைகளை வேட்டையாடத் துடிக்கும் அதிகார வர்க்கம் என வேற்று உலகில் மாற்று அரசியல் பேசுகிறது ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கும் HBO-வின் ‘ஹிஸ் டார்க் மெட்டீரியல்ஸ்’ (His dark materials)

வேற்றுலகில் இருக்கும் ஆக்ஸ்ஃபோர்டில் வளர்கிறாள் சிறுமி லைரா. அவளின் ஆன்மா ‘பேன்’ என்னும் மிருகத்துக்குள் இருக்கிறது. ஆக்ஸ்ஃபோர்டில் தாய், தந்தை ஆதரவின்றி, அங்கிருக்கும் ஆசிரியர்களின் அரவணைப்பிலும், சிறுவன் ரோகரின் பாசத்திலும் வளர்கிறாள் லைரா. அங்கிருக்கும் சூழல் அவளுக்கு எதிராய் மாற, மரிஸா கோல்டர் என்னும் பெண்மணிக்கு உதவியாளராய் இருக்க லண்டனுக்கு அனுப்பப்படுகிறாள். ரோகர் கடத்தப்படுகிறான். தொடர்ந்து, அந்த உலகில் வாழும் ஜிப்திய குழந்தைகளும் காணாமற்போகிறார்கள்.

WEB SERIES
WEB SERIES

குழந்தைகளுக்குள் இருக்கும் ‘குழந்தைமை’ எனும் ஆன்மா அந்த மிருகங்கள்தாம். அந்த மிருகங்களுடன் கலந்தாலோசித்துதான் அந்த உலகில் இருக்கும் எல்லா மனிதர்களும் இயங்குகிறார்கள். அந்த மிருகங்களைக் கொன்றால் மனிதர்கள் இறந்துவிடுவார்கள்; மனிதர்கள் இறந்தால் மிருகங்கள் மறைந்துபோய்விடும். மனிதத்தன்மையற்றவர்கள் அந்த விலங்குகளை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. இதுதான் அந்த உலகின் வாழ்க்கைச் சூழல். ஆனால், மரிஸா கோல்டருக்குக் கீழ் இயங்கும் குழு குழந்தைகளையும் மிருகங்களையும் பிரிக்க முயல்கிறார்கள். `போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்ற `உயரிய’ லட்சியத்துடன் குழந்தைகளைப் பிணக்குவியலாக்குகிறார்கள். இது எதுவும் அறியாத வேறொரு உலகம் இயங்குகிறது. இந்த இணைப் பிரபஞ்சங்களை இணைக்கும் கருவிதான் பிரபஞ்சத் துகள்கள். இப்படியான விநோத உலகில் வாழும் லைரா மற்றும் நம்மைப்போன்றதொரு உலகில் வாழும் வில், இந்த இரண்டு சிறார்களும் பிரபஞ்சத் துகள்கள் மூலம் மற்ற இணைப் பிரபஞ்சங்களுக்குச் செல்வதுதான் தொடரின் ஒன்லைன்.

இதுதான் அந்த உலகின் வாழ்க்கைச் சூழல்.

‘லோகன்’ படத்தில் பலரது பாராட்டைப் பெற்ற 15 வயது `டஃப்னீ கீன்’தான் லைரா. தான் நேசிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் தனக்கு துரோகம் இழைக்கும்போது கண்கலங்கும் காட்சிகளில் அசரடிக்கிறார். கோபக்கார அம்மா, கொடூர தலைவி என மரிஸ்ஸா கோல்டராக வரும் ரூத் வில்சன் திகில் கிளப்புகிறார். தன் ஆன்மாவான குரங்கை அவர் படுத்தும்பாட்டில் அந்தக் குரங்கே தற்கொலை செய்துகொள்கிறது, லார்டு அஸ்ரியலாக வரும் ‘எக்ஸ் மென்’ புகழ் ஜேம்ஸ் மெக்காய்க்குப் பெரிய வேலையில்லை.

WEB SERIES
WEB SERIES

HBO வெளியிடும் எந்தத் தொடரிலும் பிரமாண்டத்துக்குக் குறைவிருக்காது. பனிக்காடுகள், பேசும் மிருகங்கள், கரடி ராஜாக்கள், அழகிய சூனியக்காரிகள், பறக்கும் தட்டுகள் என ஒவ்வொரு விஷயத்திலும் பிரமாண்டம். லோர்னே பால்ஃபின் பின்னணி இசை, நாம் ஒரு திரைப்படத்தைத்தான் சீரிஸாகப் பார்க்கிறோம் என்கிற உணர்வைத் தருகிறது. 1995-ல் பிலிப் புல்மேன் எழுதிய ஹிட் நாவலை அடிப்படையாக வைத்துத் திரைக்கதை எழுதியிருக்கிறார் ஜேக் தோர்ன். 2007-ம் ஆண்டு ‘தி கோல்டன் காம்பஸ்’ என்னும் பெயரில் இதே நாவல் டேனியல் கிரெய்க், நிக்கோல் கிட்மேன் நடிப்பில் திரைப்படமாகவும் வெளியாகியிருக்கிறது. ஆனால், அந்தப் படத்தைவிடவும் இந்தத் தொடர், புத்தகத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

யாராலும் படிக்க முடியாத அலித்தியோமீட்டர் என்னும் கருவியை, லைரா படிப்பதும், `எட்டு எபிசோடு இருக்கே’ எனக் காடுகளில் நடப்பதையே அடிக்கடி காட்டுவதும்தான் கடுப்பேற்றுகின்றன. ஆனால், மாயாஜால உலகின் சர்வ வல்லமை படைத்திருக்கும் கல்லூரிகளும், மத ரீதியான கட்டமைப்புகளும் நல்லவர்கள் என்னும் போர்வைக்குள் செய்யும் விஷமங்களையும் துகிலுரித்துக் காட்டுகிறது இந்தத் தொடர். மனிதத்தைத் தொலைத்துவிட்டு மனிதர்கள் எதை அடைய இவ்வளவு போராடுகிறார்கள் என்பதை வெவ்வேறு கதைகளின் மூலம் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள். தொடரில் பிற்பாதியில் ஆன்மா பிரிக்கப்பட்ட குழந்தைகளின் பார்வை நம்மை அச்சமூட்டுவது இதனால்தான்.

மாயாஜாலத் தொடர்களை இழந்து வாடும் ‘90ஸ் கிட்ஸ்’களுக்கு, கரடிகளுடன் கூடிய அறிவியல் கதை சொல்கிறது இந்த ‘ஹிஸ் டார்க் மெட்டிரீயல்ஸ்.’