சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இருட்டு வாழ்க்கையின் வெளிச்சக்கீற்றுகள்

இருட்டு வாழ்க்கையின் வெளிச்சக்கீற்றுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
இருட்டு வாழ்க்கையின் வெளிச்சக்கீற்றுகள்

WEB SERIES

சினிமாவில் முன்பு ஓர் உத்தி உண்டு. ஒளியில்லாத இரவுக் காட்சிகளைப் பெரும்பாலும் பகலிலேயே எடுத்துவிடுவார்கள். ஏனென்றால், இருளில் நம் கண்களால் பார்க்க முடிந்த காட்சிகளை கேமராக்களால் பதிவுசெய்ய முடியாது. இதனால் நல்ல காலை ஒளியில் படம்பிடித்து, சிறிது நீல நிறத்தைச் சேர்த்து எக்ஸ்போஸரை சற்றே குறைத்துவிடுவார்கள். இப்படிச் செய்தால் அந்தக் காட்சி நமக்கு இரவுபோல் காட்சியளிக்கும். இப்போ எதுக்கு இந்த பிளாஷ்பேக்னு யோசிக்கிறீர்களா? காரணம் இருக்கு.

இப்படி இரவு என்ற மாயையை உருவாக்கிக்கொண்டிருந்த காட்சி ஊடகங்கள் இன்று இரவையே ஆட்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. இதற்குக் காரணம் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்தாம். இந்த வளர்ச்சியினால் இன்று நாம் இருளில் பார்க்க முடியாததைக்கூட துல்லியமாகப் படமாக்கக்கூடிய திறனுடன் கேமராக்கள் வந்துவிட்டன. இவற்றை நேர்த்தியாகப் பயன்படுத்தியிருக்கும் ஒரு தொடர்தான் ‘நைட் ஆன் எர்த்’ (Night on Earth).

நெட்ஃப்ளிக்ஸில் வெளிவந்திருக்கும் இதுவும் ஒரு வைல்டுலைஃப் சீரிஸ்தான். ஆனால், சற்றே வித்தியாசமானது. இன்னும் வெறும் விலங்குகள், அவற்றின் வாழ்வியல் எனக் காட்டிக்கொண்டிருந்தால் மக்களுக்குப் போரடித்துவிடும் என்பது புரிந்துவிட்டது நெட்ஃப்ளிக்ஸுக்கு. அதனால் உயிரினங்களின் இதுவரை பார்க்கப்படாத இரவு வாழ்க்கையைப் பதிவுசெய்ய முழுவதும் இரவிலேயே படமாக்கப்பட்டிருக்கும் தொடர்தான் இந்த ‘நைட் ஆன் எர்த்.’

இந்த மினி சீரிஸில் மொத்தம் ஆறு எபிசோடுகள். சமவெளிகள், நகரங்கள், அடர்ந்த காடுகள், உறைபனிப் பிரதேசங்கள், கடல் என உயிரினங்கள் தழைக்கும் உலகின் முக்கியப் பகுதிகளில் சூரியன் மறைந்தபின் என்னவெல்லாம் நடக்கின்றன என்பதை நம் கண்களுக்கு ‘வெளிச்சம்’ போட்டுக்காட்டுகிறது இந்தத் தொடர். ‘சூரியன் இல்லை என்றால் இந்த பூமி இல்லை’ எனச் சொல்லுவார்கள், ஆனால் நிலவும் எவ்வளவு முக்கியம் என்பது இந்தத் தொடரைப் பார்த்தால் உங்களுக்கு நிச்சயம் புரியும். சூரிய ஒளியில் ஒரு மிகச்சிறிய பங்கை மட்டுமே கொடுத்தாலும் அந்த நிலவொளிதான் பல உயிரினங்களின் வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கிறது. இதனால் அமாவாசை தொடங்கி பௌர்ணமி வரை ஒவ்வொரு இரவும் உயிரினங்களின் வாழ்க்கையில் அதற்கேயான சவால்களைக் கொண்டுவருகிறது. இரவில் சிறுத்தைகளைவிட சிங்கத்திற்குப் பார்வைத் திறன் அதிகம் என்பதால் நிலவொளியில் சிறுத்தைகளுக்கே ஸ்கெட்ச் போடுகின்றன சிங்கங்கள். மக்கள் நிறைந்த மும்பைப் பெருநகரில் சிறுத்தைகள் நாய்களுக்கு ஸ்கெட்ச் போடுகின்றன. தேள்களைக் கொல்லும் எலிகள் இருக்கின்றன. இப்படி காலையில் நடக்காத பல விசித்திர நிகழ்வுகள் இரவில் அரங்கேறுகின்றன. இவற்றில் பலவும் முதல்முறையாக இந்தத் தொடரில்தான் பதிவாகியிருக்கிறது. இதை மறக்காமல் வர்ணனையாளரும் குறிப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்.

இந்தத் தொடரை முடிந்தளவு நிலவின் ஒளியுடன் மட்டும் இன்றைய மேம்பட்ட கேமராக்களில் படம்பிடித்திருக்கின்றனர். ஆனால், நிலவும் ஒளி தராமல் ஏமாற்றும் அமாவாசைப் பொழுதுகளில் தெர்மல் இமேஜிங் மூலம் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தியிருக் கின்றனர். வைல்டுலைஃப் தொடர்களில் இது முதல் முயற்சி. இது எப்படிச் சாத்தியமானது என்பதைக் காட்டும் ‘Night On Earth: Shot in Dark’ என்ற ஒரு மணிநேர ஆவணப் பதிவும் நெட்ஃப்ளிக்ஸில் இத்துடன் வெளியிடப் பட்டுள்ளது. தொடரைப் பார்த்த பிறகு இதையும் நிச்சயம் மிஸ்பண்ணாமல் பார்த்துவிட வேண்டும்.