பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

மோசடி கிராமம்!

மோசடி கிராமம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மோசடி கிராமம்!

WEB SERIES

“ஹலோ, நாங்க பேங்க்ல இருந்து பேசுறோம். உங்க ஏடிஎம் கார்டு எக்ஸ்பையர் ஆகப் போகுது. அதைப் புதுப்பிக்கத்தான் போன் பண்ணியிருக்கோம். உங்க கார்டுல பதினாறு டிஜிட் நம்பர் ஒண்ணு இருக்கும். அதையும் பின்னாடி இருக்குற மூணு டிஜிட் நம்பரையும் சொல்லுங்க திரும்ப ஆக்டிவேட் பண்ணிடலாம்”

இப்படி சிலரைக் குறிவைத்து போன் வழியாக டெபிட்/கிரெடிட் கார்டு தகவல்களைப் பெற்று, அதை வைத்து பணத்தை வளைத்துப் போடுவது இன்றைய திருடர்களின் ஸ்டைல். இதை ‘பிஷிங்’ (phishing) என்று அழைப்பர். இந்தியா, இப்போது டிஜிட்டல் இந்தியாவாக வேறு ஆகிவிட்டதால் இப்படியான மோசடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டேதான் இருக்கிறது. வட இந்தியாவில் இதை மட்டுமே முக்கியத் தொழிலாகக் கொண்டு இயங்கும் கிராமங்கள் சில உள்ளன. அப்படியான ஒரு கிராமத்தின் கதையைக் கொஞ்சம் உண்மை, நிறைய கற்பனை எனப் பரபர வெப்-சீரிஸாக ‘ஜம்தாரா: சப்கா நம்பர் ஆயேகா’வை நமக்குப் படைத்திருக்கிறது நெட்ஃபிளிக்ஸ்.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தது ஜம்தாரா கிராமம். யாருக்கும் பெரிதும் தெரியாத இந்தக் கிராமத்தை இந்தியாவின் முக்கிய டிஜிட்டல் கிரைம் லேண்ட்மார்க் ஆக்குகிறது பிஷிங் மோசடியில் கில்லாடியான ஒரு சிறார் கேங். இவர்கள் சாமான்யனாக இருந்தாலும் சரி நீதிபதியாக இருந்தாலும் சரி அழகிய குரலில் ஆசைவார்த்தைகள் பேசி தங்கள் வலையில் விழ வைத்துவிடுவார்கள்.

WEB SERIES
WEB SERIES

இந்தக் கூட்டத்தில் நேர்த்தியான வேலைதெரிந்தவன் சன்னி. அவனின் அத்தை மகன் ராக்கி. ஒரே தொழில் என்றாலும் இவர்களின் பாதைகள் வேறு வேறு. ஜம்தாராவின் மிகப்பெரிய பணக்காரனாக வேண்டும் என்று நினைக்கிறான் சன்னி. அரசியல் அதிகாரத்தை நோக்கி ஓடுகிறான் ராக்கி. பணம் அதிகம் இருக்கும் இடத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் எப்படி இருக்கமுடியும்? அப்படி இவர்களுக்குப் பாதுகாப்பு தருவதாக வருமானத்தில் பாதிப் பங்கு கேட்டு மொத்தமாக இந்தத் தொழிலையும், இந்த கேங்கையும் கைக்குள் வைக்க நினைக்கும் அரசியல்புள்ளி ஒருவர், இந்த மோசடிகளுக்கு முடிவுகட்ட நினைக்கும் இளம் பெண் எஸ்.பி என ஜம்தாராவின் கதை நம்முன் விரிகிறது.

இந்தத் தொடரை இயக்கியிருக்கும் சௌமேந்திர பதி, இதற்குமுன் இயக்கிய ‘பூதியா சிங்: பார்ன் டூ ரன்’, சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. பெரும்பாலும் புதுமுகங்கள்தான் என்றாலும் அந்தக் கிராமத்து இளைஞர்களுக்குச் சரியாகப் பொருந்திப்போயிருக்கிறது நடிகர் தேர்வு. நடிப்பிலும் எந்தக் குறையும் இல்லை.

WEB SERIES
WEB SERIES

ஏற்கெனவே பரிச்சயமான முகங்களான திபியெந்த் பட்டாச்சார்யா, அமித் சியால் போன்றவர்களும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். கறார் பெண் எஸ்.பியாக வரும் அக்ஷா பர்தாசனி, தொடரின் முக்கிய பலம். இவரை `சலீம்’ படத்தில் கதாநாயகியாகப் பார்த்திருப்போம். டெக்னிக்கலாகவும் ஏ கிரேடு பெறுகிறது ‘ஜம்தாரா’. பெரும்பாலும் ரியல் ஜம்தாராவிலேயே ஷூட் செய்துள்ளதால் புழுதிபடிந்த அந்தக் கிராமத்தை அப்படியே நம் கண்முன் எடுத்துவந்திருக்கிறது இந்தக் குழு.

இந்த மோசடிகளின் தலைநகரமாக ஜம்தாரா உருவெடுத்தது ஏன், மோசடி செய்ய மக்களின் போன் நம்பர்போன்ற தகவல்கள் இவர்களுக்குக் கிடைப்பது எப்படி? இந்த இளைஞர்கள் எப்படி இதற்குள் வந்தார்கள் போன்ற விஷயங்களுக்குள் செல்லாமல், இந்த மோசடியின் விளைவாக நடக்கும் விஷயங்களை மட்டுமே நமக்குச் சொல்கிறது இந்தத் தொடர். இதில் லாஜிக் மீறல்களும் அதிகம். இந்த பிஷிங் மோசடிதான் களம் என்றதுமே நுணுக்கமான விவரங்கள் வரை இறங்கி சிக்ஸர் அடித்திருக்கலாம். ஆனால் அதிகபட்சமாக “போன் பண்றாங்க, கார்டு நம்பர் வாங்குறாங்க” என்று டொக் வைத்து சிங்கிள் மட்டுமே ஓடுகின்றனர். பேராசை அரசியல்வாதி, சின்சியர் போலீஸ் என கதாபாத்திரங்களும் டெம்ப்ளேட் ரகம்.

WEB SERIES
WEB SERIES

இப்படிக் குறிப்பிட்டுச்சொல்லக் குறைகள் இருந்தாலும் ஒவ்வொரு எபிசோடையும் பரபரவெனக் கொண்டுசென்று ஒரு உச்சப்புள்ளியில் முடிப்பதால், ‘Next Episode’ பட்டனை அநாயாசமாக க்ளிக் செய்ய வைத்துவிடுகிறது இந்த ‘ஜம்தாரா.’