
Web Series
“நான் ஓர் இருள் படர்ந்த வீடு. என் உணர்வுநிலை மட்டுமே அதன் ஒற்றை வெளிச்சம். அதுவும் காற்றிலாடும் மெழுகுவத்தியின் ஒற்றைச் சுடர்போல! மற்றவை அனைத்தும் இருளில் இருக்கின்றன.
வீட்டில் எல்லாமே இருக்கின்றன. எண்ணற்ற கதவுகள், அறைகள், படிக்கட்டுகள், நடைபாதை வெளிகள், எல்லாமும்! கூடவே அதே இருளில், அந்தந்த இடங்களில் நாம் மட்டுப்படுத்தி வைத்திருக்கும் துர் எண்ணங்களும், வெளிச்சத்தில் பார்க்க விரும்பாத நினைவுகளும் இருக்கின்றன. நம்மைச் சுற்றி இருளில் அவை நடனமாடுகின்றன. நம்மை பயமுறுத்தி நம் காதுகளில் முணுமுணுக்கின்றன. இவைதான் நம்மை நோயுறச் செய்கின்றன. இவைதான் நம்மை வெறிபிடிக்கச் செய்கின்றன.”

நெட்ஃப்ளிக்ஸின் ‘ஃப்ராய்டு’ தொடரில் வரும் இந்த வசனம், நம் மனத்தின், கணிக்கமுடியாத அகநிலையின் தன்மையை நமக்கு வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. ஆம், இந்த ‘ஃப்ராய்டு’ தொடரின் ஹீரோ சிக்மண்ட் ஃப்ராய்டுதான். ஆஸ்திரிய நரம்பியலாளரான ஃப்ராய்டின் வியன்னா நகர வாழ்க்கையில் அதீத புனைவைச் சேர்த்து ஒரு ரிவிசனிஸ்ட் (Revisionist) க்ரைம் டிராமாவாக இந்தத் தொடரை நகர்த்தியிருக்கிறார்கள். ரிவிசனிஸ்ட் வகைக் கதைகள் திரைக்குப் புதிதல்ல. ஒரு வரலாற்றுச் சம்பவத்தையோ, ஒருவரின் நிஜ வாழ்க்கையையோ எடுத்துக்கொண்டு அதில் மிகு புனைவைப் புகுத்தி, இப்படியெல்லாம் நிஜத்திலும் நடந்திருக்கலாம் என நம்பும்படியான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதே இவற்றின் அடிப்படை.
19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஃப்ராய்ட் வியன்னா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே அங்கிருக்கும் வியன்னா பொது மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது அவர் முன்வைத்த சைக்கோ அனாலிசிஸ், ஹிப்னாசிஸ் போன்றவற்றைச் சுற்றி, தொடர் கொலைகள், நரமாமிசம் உண்ணுதல், ஆவிகள், போதைப் பழக்கம், அரசியல் பழிவாங்கல்கள் எனப் பல அடல்ட் ப்ளஸ் விஷயங்களைச் சேர்த்திருக்கிறார்கள்.

ஃப்ராய்டின் இளமைக்காலத்தில் நடக்கும் இந்தக் கதையில் அறிவியலை மட்டுமே நம்பும் அவரின் மனம், இப்படி இயற்கைக்கு மீறிய விஷயங்களை ஏற்க மறுக்கிறது. இதன் பின்னிருக்கும் உண்மைகளைக் கண்டறிய கிட்டத்தட்ட ஒரு ஷெர்லாக் ஹோம்ஸ் போல இதில் அவர் துப்பறிகிறார். ஒரு கொலை, அதைத் தொடரும் ஒரு காவல் அதிகாரி, காணாமற்போகும் சிறுமி, ஆவிகளுடன் பேச முடியும் என ஊரைக்கூட்டி வேடிக்கை காட்டும் ஹங்கேரியக் குடும்பம், அதன் உறுப்பினரான ஆவிகளுடன் பேசக்கூடிய ஃப்ளர் சலாமி எனும் பெண், அவள் மீது ஃப்ராய்டுக்கு வரும் நேசம் என்பதாகக் கதை விரிகிறது. ஒவ்வொரு முறை ஏதேனும் தவறு நடக்கையில் அதை முன்கூட்டியே உணர்ந்து ஃப்ராய்டிடம் சொல்கிறாள் ஃப்ளர். இது ஒரு மாய மந்திர வேலையாக அனைவருக்கும் தோன்றினாலும் அதன் பின்னிருக்கும் உண்மையை தன்னுடைய ஹிப்னாசிஸ் தெரபி மூலம் கண்டறிகிறார். அப்போது அவர் புரிந்துகொள்ளும் ஓர் உண்மை பின்னாளில் உளவியல் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ஒரு விஷயம் - மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸ்ஸார்டர்!
அந்தக் காலகட்டத்தில் மன அழுத்தம் போன்றவற்றை நடிப்பு என நம்பினர். பல கொடுமைகளை அனுபவித்த பெண்களுக்கு ஹிஸ்டீரியா என்ற மன அழுத்தம் ஏற்படுவது சகஜமான ஒன்று. இதை அந்தக் கால மருத்துவர்கள், ஏன் ஃப்ராய்டின் தலைமை மருத்துவரே நடிப்பாகத்தான் பார்த்தார். ஆனால், இது உண்மையான வெளிப்பாடு என்பதில் ஃப்ராய்டு தீர்க்கமாக இருந்தார். இப்படியான நோயாளிகளிடம் சைக்கோ அனாலிசிஸ் தெரபி மூலம் மருத்துவர் ஒருவர் நேரடியாக உரையாடி அகநிலைப் பிரச்னைகளைச் சரிசெய்ய முடியும் என நம்பினார்.

இப்படியான ஒரு சீரியஸான விஷயத்தை ஒரு துணைக்கதையாக மட்டுமே வைத்துக்கொண்டு, ஃப்ராய்டு கதாபாத்திரத்தையும் இரண்டாம் கட்டத்துக்குத் தள்ளி, மாய மந்திரங்கள், கொலை, அரசியல் சூழ்ச்சிகள் போன்றவற்றை மட்டுமே பிரதானப்படுத்துகிறது திரைக்கதை. வியன்னாவின் இருள்படர்ந்த தெருக்கள், எரியும் நெருப்பு விளக்குகள், கதைக்களத்தின் மாந்தர்கள், அந்தக் கலாசாரத்தைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் கலை இயக்கம் மற்றும் உடைகள் போன்றவற்றின் நேர்த்தியில் வழக்கம்போல ஸ்கோர் செய்கிறது நெட்ஃப்ளிக்ஸ். அதிலும் ஒவ்வொரு எபிசோடுக்கும் ஃப்ராய்டின் ஆராய்ச்சித் தலைப்புகளையே டைட்டிலாக வைத்து அதற்கேற்ப அனிமேஷனையும் செய்தது சிறப்பு. ஒரே நெருடல், பின்னாளில் ஃப்ராய்டே புறந்தள்ளிய, அறிவியலால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத ஹிப்னாசிஸை இப்போது தூக்கிப்பிடித்திருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை. ஜெர்மானிய சீரிஸான இதில் அடுத்த சீசன் என்று ஒன்று வருமாயின் அதிலாவது ஃப்ராய்டின் ஆக்கபூர்வ கோட்பாடுகளையும் அவரின் நிஜ வாழ்க்கையையும் பேசலாமே!