
Web Series
இந்திய உளவுத்துறை நிறுவனமான ‘ரா’வைச் சேர்ந்த அதிகாரி ஹிம்மத் சிங், ஒரு விசாரணைக்காகக் காத்திருக்கிறார். ரகசியப் பிரிவின் செலவினங்களுக்காக 11 வருடங்களில் 28 கோடி ஹிம்மத் சிங் செலவுக்கணக்கு காட்டியிருக்கிறார்.
அவற்றில் பெரும்பாலானவை ‘இதர செலவுகள்’ என்ற ரகம். “எல்லா கணக்கையும் எழுதிட்டு கடைசில ஒரு சின்னத்தொகை இதர செலவுன்னு இருக்கும். நீ என்னடான்னா எல்லாமே அப்படித்தான் காட்டியிருக்க!” என்று விசாரணை அதிகாரிகள் நரேஷ் சட்டாவும், டி.கே. பானர்ஜியும் விசாரணையை ஆரம்பிக்கிறார்கள். ஒவ்வொரு கேள்வியும் அதற்குப் பதிலாக விரியும் ஹிம்மத் சிங்கின் 19 வருட ஆபரேஷனும்தான் Special OPS. ஹாட்ஸ்டாரில் சென்ற மாதம் வெளியான சீரிஸ். மொத்தம் எட்டு எபிசோடுகள்.
2001 டிசம்பர் 13-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தாக்குதலின்போது ஐந்து தீவிரவாதிகள் இறக்கிறார்கள். இந்த உண்மைச்சம்பவத்தை வைத்துக்கொண்டு ‘ஆறாவதாக ஒருவன் இருந்தால்?’ என உண்மையோடு கொஞ்சம் புனைவைக் கலந்து ஒரு நல்ல உளவுக்கதையைத் தந்திருக்கிறார்கள்.

அப்போது இளம் அதிகாரியாக இருக்கும் ஹிம்மத் சிங், இறந்த ஐவருக்கும் ஆணையிட்ட, ஆறாவதாக ஒரு நபர் இருந்தான் என்று கண்டுபிடிக்கிறார். ஆனால் டெல்லி காவல்துறை அதை மொத்தமாக மறுக்கிறது. ‘உளவுத்துறை இந்தத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கத் தவறிவிட்டது. அதைச் சமாளிக்கவே உளவுப்பிரிவின் ரகசியப் பிரிவைச் சேர்ந்த ஹிம்மத் சிங் ஆறாவதாக ஒரு கேரக்டரைக் கொண்டு வருகிறார்’ என்கிறது டெல்லி போலீஸ்.
இக்லாக் கான் எனும் அந்த ஆறாவது கேரக்டரைக் கண்டுபிடிக்க ஐந்து நாடுகளில் தனக்குக் கீழ் ஐந்து ரகசிய ஏஜென்டுகளை நியமிக்கிறார் ஹிம்மத். அவர்களுக்கான செலவுதான் இந்த 28 கோடி என்பதை விசாரணைக்கு நடுவே கொஞ்சம் கொஞ்சமாக விளக்க விளக்க, அவை காட்சிகளாகவும் விரிகின்றன. ஆனால் எந்த இடத்திலும் அவர்கள் யார், என்ன செய்கிறார்கள் என்பதை நேரடியாக விசாரணை அதிகாரிகளிடம் சொல்வ தில்லை ஹிம்மத் சிங். விசாரணை நடந்து கொண்டி ருக்கும் சமயத்திலேயே இவரது ஏஜென்டுகள் இக்லாக் கானை நெருங்குகின்றனர். அதே சமயம் டெல்லிக்கு வருகை தரும் பாகிஸ்தானின் முக்கிய அமைச்சர் கலந்துகொள்ளும் மீட்டிங்கில் மனித வெடி குண்டை ஏற்பாடு செய்கிறான் இக்லாக் கான். இரண்டையும் ஹிம்மத் சிங் கையாளும் த்ரில்தான் இந்த வெப்சீரீஸ் நமக்குத் தரும் என்டெர் டெயின்மென்ட்.

நீரஜ் பாண்டேவின் மூளையில் உதித்த கருதான் இது. அவரும் ஷிவம் நாயரும் சேர்ந்து, ஆளுக்கு நான்கு எபிசோடுகளை இயக்கியிருக் கிறார்கள். இவர்களுக்கு இணையாகப் பாராட்டப்பட வேண்டியவர் காஸ்டிங்குக்குப் பொறுப்பான கவிதா சச்தேவா. ஐந்து ஏஜென்ட்கள், இக்லாக் கான், ஹிம்மத் சிங்கின் குடும்பம், டெல்லி காவல்துறை அதிகாரி என்று ஒவ்வொருவரும் அவ்வளவு பொருத்தம்.
‘நீ பொறந்ததே இதுக்குத்தான்’ என்பார்களே... அப்படி ஒரு லைஃப் டைம் கதாபாத்திரம் ஹிம்மத் சிங் பாத்திரத்தில் நடித்திருக்கும் கே.கே.மேனனுக்கு. மொத்தமாக 6.50 மணி நேரம் இருக்கும் இந்த சீரிஸில் 90 சதவிகிதம் அவரது ஆக்ரமிப்புதான். ஏஜென்ட் ஃபாருக்காக வரும் கரண் தாக்கர், காவல் அதிகாரி அப்பாஸ் ஷேக்காக வரும் வினய் பதக் இருவரும் அடுத்து குறிப்பிட வேண்டியவர்கள்.
உளவுப்பிரிவின் கீழ் வந்தாலும், உளவுப்பிரிவுக்கும் ரகசியப்பிரிவுக்கும் இடையேயான வேறுபாட்டை நேர்த்தியாகக் காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார்கள். எல்லா நாடுகளிலும் இவர்கள் நியமிக்கும் ஏஜென்டின் குறிப்பிட்ட நடவடிக்கைகளை சிசிடிவியில் இங்கிருந்தே இவர்கள் பார்ப்பதெல்லாம் காட்சி சுவாரஸ்யம் என்று எடுத்துக்கொண்டு கடக்கலாம்.
முதல் எபிசோடிலேயே கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் இக்லாக் கான் யாரென்று கடைசி எபிசோடில்தான் ஹிம்மத் சிங்குக்குத் தெரியவருகிறது. அதுவரை அந்த ரகசியம் அவிழாத வண்ணம் எழுதப்பட்டிருப்பதே இந்தத் திரைக்கதையின் சிறப்பு.

இதுபோன்ற சீரிஸ்களின் எழுதப்படாத விதியாக இதிலும் ஹிம்மத் சிங்கின் குடும்பமும் காட்சிப்படுத்தப் படுகிறது. சுவாரஸ்யத்தைத் தாண்டி கதையின் போக்கை ஒரு இன்ச் கூட மாற்றவில்லை அந்தப் பகுதிகள். அரசியல் தலையீடு, பணமதிப்பிழப்பு என்று எல்லாவற்றையும் கதையில் சேர்த்துக் கையாண்டிருக்கிறார்கள்.
இசை அத்வைத். மிரட்டுகிறது. ஒளிப்பதிவு தரம்! பாகிஸ்தான் வெர்சஸ் இந்தியா என்ற அரதப்பழைய, ஆல்டைம் கான்செப்டை சீரிஸ் தரத்துக்குச் செதுக்கியிருக்கிறது மொத்தக்குழுவும்.