Published:Updated:

சபிக்கப்பட்ட வீடு!

WEB SERIES
பிரீமியம் ஸ்டோரி
News
WEB SERIES

WEB SERIES

கதை என்னன்னா?

ஒரு சபிக்கப்பட்ட வீடு; அதில் வெவ்வேறு காலகட்டங்களில் கால் வைக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் நிகழும் அமானுஷ்யங்கள்... இதுதான் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் ‘Ju-On - Origins’ வெப் சிரீஸின் ஒன்லைன்.

ஒரு லைவ் ரியாலிட்டி ஷோவில் நடிகை ஒருவர் தன் வீட்டில் கேட்கும் விநோத சத்தங்களைப் பற்றி விவரிக்கிறார். அமானுஷ்ய விஷயங்களை ஆராயும் எழுத்தாளர் ஒருவர் அவருக்கு உதவ வருகிறார். அப்படியான சத்தங்கள் கேட்பதற்குக் காரணம் அந்த நடிகையின் காதலன் சென்று வந்த ஒரு பழைய வீடுதான் என்றும், அதன் சாபம்தான் விடாமல் துரத்துகிறது என்றும் கண்டறிகிறார்கள். அந்த வீடு எங்கிருக்கிறது என்பதைச் சொல்லாமலே மர்மமான முறையில் இறந்துவிடுகிறான் காதலன். மற்றொரு உபகதையில், பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், சக மாணவிகளின் மிரட்டலுக்கு உள்ளாகி அவர்களின் நண்பன் ஒருவனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார். அதே பழைய வீட்டில் நடக்கும் இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட பெண் அந்த வீட்டில் இருக்கும் ‘Woman In White’ ஆவியை நேருக்கு நேராகப் பார்க்கிறார். இது அவரின் வாழ்க்கையையே புரட்டிப்போடும் ஓர் அமானுஷ்யத் தாக்கமாக மாறுகிறது. இந்த இரண்டு முக்கியக் கதைகளையும் இணைக்க நிறைய துணைக் கதாபாத்திரங்கள்... அவை அனைத்துக்கும் மையமாக இந்தப் பழைய சபிக்கப்பட்ட வீடு... இதனுடன் வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் காட்சிகளின் கோவை... இவை அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையைப் பின்னியிருக்கிறார்கள்.

சபிக்கப்பட்ட வீடு!

கொஞ்சம் ஹிஸ்டரி

ஹாலிவுட் ஹாரர் படங்கள் உலகெங்கும் கல்லா கட்டும் நிகழ்வுகள் 2000-த்துக்குப் பிறகே அரங்கேறத் தொடங்கின. ஹாலிவுட்டின் ஒரிஜினல் ஹாரர் அலையைத் தாண்டி அங்கு வியாபாரரீதியாகப் பெரும் வெற்றிகளை வாங்கிக்கொடுத்தது ஜப்பானிய ஹாரர் படங்களின் ரீமேக்குகள் எனலாம். குறிப்பாக டகாஸி ஷிமிஸு-வின் ‘Ju-On’ படத்தொடர் ஹாலிவுட்டில் ‘தி க்ரட்ஜ்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வசூலை வாரிக் குவித்தது. இந்த வருடம்கூட மீண்டும் ‘தி க்ரட்ஜ்’ கதை ரீ-பூட் செய்யப்பட்டு வெளியானது. ஒரிஜினல் ‘Ju-On’ படத்தொடரில் டஜன் கணக்கில் படங்கள், குறும்படங்கள், அதன் பெயரில் நாவல்கள், காமிக்ஸ், வீடியோ கேம்ஸ் என நிறைய வெளிவந்துள்ளன. இப்போது நெட்ஃப்ளிக்ஸ் இந்த ‘Ju-On’ தொடரின் மூலக்கதையை வெப் சிரீஸாகச் சொல்கிறேன் எனக் கையில் எடுத்திருக்கிறது.

ப்ளஸ்

ஜப்பானிய ஹாரர் சினிமா இலக்கணங்களில் ஹாலிவுட் பாணியில் பின்னணி இசையுடன் திடுக்கிட வைக்கும் ‘Jump Scare’ காட்சிகளோ அல்லது நம் தமிழ் சினிமா பாணியில் காமெடி கலந்து ஹாரர் செய்யும் மசாலாவோ பெரிதாக இருக்காது. முழுக்க முழுக்க கதையை மட்டுமே நம்பி, அதில் நிகழும் சம்பவங்களை வைத்து, அதை ஒரு குரூர அழகியலுடன் சித்திரித்து நம்மைத் தூங்கவிடாமல் செய்வதுதான் ஜப்பான் ஸ்டைல். இந்தத் தொடரும் அதே பாணியில்தான் பயணிக்கிறது. திடுக்கிட வைக்கும் காட்சியமைப்புகள் இல்லை என்றாலும் அமைதியாகக் கடக்கும் சில திகில் காட்சிகளும், அதன் ஃப்ரேம்களுமே நமக்கு பாதிப்பைக் கடத்துகின்றன. முழுக்க முழுக்க பின்னணி இசையை மட்டும் நம்பிக் களமிறங்காமல், கதையிலேயே பல்வேறு குரூரங்களைப் புதைத்துப் படமாக்கியிருப்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வெளிறிப்போன தேகத்துடன் மிக அமைதியாகப் பேய்கள் தோன்றினாலும் திகிலுக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லை எனலாம்.

சபிக்கப்பட்ட வீடு!

ஒரு சபிக்கப்பட்ட வீட்டில் பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை என்றாலும், அதைக் குழப்பியடிக்காமல் அதே சமயம் முழுமையான ட்விஸ்டை வெளிப்படையாகச் சொல்லாமல் நகரும் திரைக்கதை மிகப்பெரிய பலம். இறுதியில் அனைத்து டைம்லைன்கள் மற்றும் கிளைக்கதைகளை அந்த வீட்டிற்குள்ளேயே அடக்கி, ஒன்றோடு ஒன்று சம்பந்தப்படுத்தி ப்ளாக் அண்டு ஒயிட் மற்றும் கலரில் மாறி மாறி விரியும் அந்த ஹாரர் காட்சிகள் ஒரு தேர்ந்த திரைக்கதை அமைப்பின் அழுத்தமான அடையாளம். 30 நிமிடங்களுக்கும் குறைவாக ஓடும் 6 எபிசோடுகளுக்குள் அடக்கப்பட்ட கதை என்பது கூடுதல் ப்ளஸ்!

சபிக்கப்பட்ட வீடு!

மைனஸ்

ஹாரர் என்றாலே கண்களைச் சுருக்கிக்கொண்டு காதை மூடிக்கொண்டு பின்னணி இசையால் பயப்பட வைக்கவேண்டும் என்று இதில் உட்கார்ந்தால் ஏமாற்றமே மிஞ்சும். நல்ல கதைக்கரு, முடிச்சுகளுடன் கூடிய நல்ல திரைக்கதை என்றாலும் பல்வேறு துணைக் கதாபாத்திரங்கள் இருப்பதால் அவர்கள் யார் யார் என்று கனெக்ட் செய்யவே சற்றுத் தடுமாற வேண்டியிருக்கிறது. சில கதாபாத்திரங்களைக் குறைத்திருந்தாலும் கதையை இன்னும் சிறப்பாகச் சொல்லியிருக்கமுடியும். அதிலும் ஒரு சில பாத்திரங்களின் வாழ்வில் நடக்கும் மென்சோக மெலோடிராமாக்கள் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தியேட்டராக இருந்திருந்தால் ‘பேய் எங்கடா?’ குரல்கள் ஒலித்திருக்கலாம். குடும்பத்தினுள் நிகழும் வன்முறைகள்தான் கதைக்களம், அதை எதிர்ப்பதுதான் மெசேஜ் என்றாலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இத்தனை குரூரமான காட்சியமைப்புகள் அவசியமா? சென்சார் இல்லை என்பதற்காக அவற்றை சிரத்தையுடன் நிஜத்துக்கு அருகில் காட்சிப்படுத்துகிறேன் என விடாப்பிடியாகக் காட்டியிருப்பது எதற்காக?

யாரெல்லாம் பார்க்கலாம்?

நிச்சயமாக 18+ | அதீத வன்முறை

டோன்ட் மிஸ் லிஸ்ட்!

‘Ju-On’ படத்தொடரின் மற்ற படங்கள் | ‘தி க்ரட்ஜ்’ படத்தொடர் | இதனுடன் நிறைய ஒற்றுமைகள் மற்றும் சம்பந்தங்கள் கொண்ட ‘தி ரிங்க்’ படத்தொடர் | ‘ஒன் மிஸ்டு கால்’ படம்.