பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஏரோ என்னும் ஹீரோ!

Arrow
பிரீமியம் ஸ்டோரி
News
Arrow

WEB SERIES

பேட்மேனின் கதை 90ஸ் கிட்ஸ் முதல் இன்றைய கிட்ஸ் வரை அனைவரும் அறிந்து வைத்திருக்கும் கதைதான். ஒரு சாதாரண மனிதன் தன் பெற்றோரின் மரணத்துக்கு நீதி கேட்கும் முகமூடி மனிதனாக மாறி அதன் பின்னர் நிரந்தரமாக அநியாயங்களைத் தடுக்கும் சூப்பர்ஹீரோ ஆகிவிடுவான். இதே கதையை கொஞ்சம் அட்லி பாணியில் ரீமேக் செய்தால் ‘கிரீன் ஏரோ’வின் கதை. 1940-களின் தொடக்கத்திலேயே காமிக்ஸாக எழுதப்பட்டு விட்டது என்பதால் ஆங்காங்கே எம்.ஜி.ஆர் பட டெம்ப்ளேட்டும் நினைவுக்கு வந்தால் DC கம்பெனி பொறுப்பில்லை!

தனது சொகுசுக் கப்பல் விபத்துக்குள்ளானதில், யாருமற்ற தீவில் ஐந்தாண்டுகள் தனித்து வாழ்கிறான் ஆலிவர் குயின். கப்பல் விபத்தில் தன் மகனிடம் குறிப்பு ஒன்றைக் கொடுக்கும் ஆலிவரின் தந்தை, அந்தப் பட்டியலில் இருக்கும் நபர்கள்தான் அவர்களின் நகரத்து வீழ்ச்சிக்குக் காரணமானவர்கள் எனச் சொல்லி இறந்துவிடுகிறார். ஐந்தாண்டு களுக்குப் பின்னர் சொந்த ஊரான ஸ்டார் சிட்டிக்கு வருகிறான் ஆலிவர் குயின். பகலில் பணக்கார குயின், இரவில் போதை மருந்து, கடத்தல், மாஃபியா என எல்லாத் தீய செயல்கள் செய்பவர்களையும் வேட்டையாடும் `கிரீன் ஏரோ.’ நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என இரு ஸ்டீரிமிங் தளங்களிலும் இத்தொடரைப் பார்க்க முடியும் என்பது கூடுதல் ப்ளஸ்.

ஏரோவின் ஒரே ஆயுதம் `ஏரோ’தான். ஆம், டஜன் கணக்கில் முதுகில் அம்புகள், கையில் ஒரு வில். தலையிலொரு மாஸ்க்.

Arrow
Arrow

வில்லன் படை ஏற ஏற, ஏரோவின் படையிலும் ஸ்பார்ட்டன், பிளாக் கனேரி, ஒயிட் கனேரி, ஸ்பீடி, வொயில்டு டாக் என நபர்கள் இணைகிறார்கள். டெக்னாலஜி வளர வளர அம்புகளின் வீரியமும் அதிகமாகிறது. எட்டாகப் பிரியும் அம்பு, கொக்கியாக மாறிப் பறக்கும் அம்பு, வெடிக்கும் அம்பு என ஒவ்வொன்றும் ஒரு விதம். ‘துப்பாக்கில டப்புன்னு சுட்டா பொட்டுன்னு போயிடமாட்டானா’ போன்ற கேள்விகளுக் கெல்லாம் காமிக்ஸ் கதைகளில் இடமில்லை என்பதால், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். `அஞ்சு வருசம் தீவுல முதலை சூப் குடிச்சுட்டு இருந்தேன்னு நினைச்சியா?’ எனச் செல்கிறது ஃபிளாஷ்பேக் கதை. நிகழ்காலமும் கடந்த காலமும் சமமான விகிதத்தில் கலந்துகட்டி நான் லீனியர் கதைசொல்லலில்தான் ரசிகர்கள் முதலில் ஏரோ பக்கம் வந்தார்கள். ஃபிளாஷ்பேக் கதை முடிந்துவிட, புதுவித முயற்சியாய் ஃபிளாஷ்பார்வர்டு என 2040-ல் ஆலிவர் குயினின் மகள் மியா, மகன் வில்லியம் இணைந்து எதிரிகளை வீழ்த்தும் கதை, நிகழ்காலக் கதையுடன் இணைத்துச் சொல்லப்பட்டது.

டிசி காமிக்ஸில் வரும் கிரீன் ஏரோ கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஆண்டுக்கு 22 எபிசோடுகள் என ஹிட் அடித்தது இந்தத் தொடர். எட்டு ஆண்டுகளில் பல்வேறு விருதுகளைப் பெற்று, வெற்றிகரமாக ஓடிய `ஏரோ’ இந்த மாதத்துடன் முடிவடைந்திருக்கிறது. அவெஞ்சர்ஸ் சினிமாவில் அயர்ன் மேன் முடிவுக்கு உலகமே திரையரங்கில் கண்ணீர் வடித்தது போல், ஏரோவின் முடிவுக்கு உலகமே சின்னத்திரையில், `லாலி லாலோ’ எனக் கண்ணீர் வடித்தது. டிசி யுனிவெர்ஸுக்கு அதன் திரைப்படங்கள் பெரிய அளவில் வசூல் ஈட்டாத சூழலிலும், தொடர்ச்சியாகத் தொலைக்காட்சிகளில் ஹிட் மேல் ஹிட் அடிக்க வைத்தது ஏரோவின் கிளைக்கதைகள். ஏரோ ஹிட் அடிக்க, அதைத் தொடர்ந்து `தி ஃபிளாஷ்’ , ‘டிசி லெஜெண்ட்ஸ் ஆஃப் டுமாரோ’ , `சூப்பர்கேர்ள்’, `பேட்வுமன்’ என அடுத்தடுத்து ஏரோவின் வழியில் தொடர்களை வாரத்தின் வெவ்வேறு நாள்களில் வெளியிட்டு வருகிறது டிசி. இந்தத் தொடர்களில் வரும் நடிகர்களை எல்லாம் `கிராஸ் ஓவர்’ என தமிழில் வெளியான சுயம்வரம் திரைப்படம் போல் தனியாகவும் கல்லா கட்டுகிறது டிசி.

அதிரடி சண்டைக் காட்சிகள் , சுவாரஸ்யமான கதைசொல்லல் போன்றவற்றுக்காக இந்த ஆண்டு முடியும் வரை நீங்கள் `ஏரோ’வை வைத்து வைத்துப் பார்க்கலாம்.