Published:Updated:

‘’இப்போ ‘கே.ஜி.எஃப் 2'வை நினைச்சாத்தான் கொஞ்சம் பயமா இருக்கு ..!’’ - அன்பறிவ்

அன்பறிவ்
அன்பறிவ்

இந்த ஆண்டு 'கே.ஜி.எஃப்' படத்துக்கு சிறந்த சண்டைப் பயிற்சிக்கான தேசிய விருது பெற்ற அன்பறிவ் பேட்டி

தேசிய விருது கொடுப்பதில் சண்டைப் பயிற்சி இயக்கத்தை போன வருடம்தான் சேர்த்தார்கள். அதன் முதல் விருதாக 'புலி முருகன்' படத்துக்கு பீட்டர் ஹெய்ன் பெற்றார். இந்த முறை 'கே.ஜி.எஃப்' படத்துக்காக அன்பறிவ் பெற்றுள்ளனர். கன்னட மொழியில் உருவான இப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்றது. குறிப்பாக, இதன் ஆக்‌ஷன் சீக்வென்ஸுக்கும் வசனத்துக்கும் மக்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பிஸியாக இருக்கும் இந்த இரட்டையர்களை சந்தித்துப் பேசினோம்.

'கே.ஜி.எஃப்' படத்துக்குள்ள நீங்க எப்படி வந்தீங்க?

" 'மெட்ராஸ்' படம் பார்த்துட்டுதான் இந்தப் படத்துல வொர்க் பண்ண கூப்பிட்டாங்க. இதுக்கு முன்னாடி கன்னட படம் நாங்க பண்ணதில்லை. அதனால, நிறைய கன்னட படங்களில் ஸ்டன்ஸ் எப்படி இருக்கும்னு பார்த்துட்டு பிரஷாந்த் நீல் சாரை பார்க்க 'கே.ஜி.எஃப்' ஸ்பாட்டுக்குப் போனோம். அங்க நாங்க அவருக்கு ஒரு சாம்பிள் சொன்னோம். அவருக்கு அது ரொம்ப பிடிச்சிருந்தது. அந்தப் படம் முடியுற வரைக்கும் எங்களுக்கான முழு சுதந்திரம் கொடுத்தார். `பெரிய பட்ஜெட்ல இந்தப் படம் தயாராகுது. ஸ்கிரிப்ட்ல டைரக்டர் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கார். அதனால, அஞ்சு மொழியிலும் இந்தப் படம் பேசப்படும்’னு நினைச்சோம். ஆனா, வசனம், ஸ்டன்ட், மியூசிக்னு ஒவ்வொரு விஷயமும் இந்தளவுக்கு கவனிக்கப்பட்டு தேசிய விருது வரைக்கும் போகும்னு நினைக்கலை."

'மெட்ராஸ்' படத்துல வொர்க் பண்ண எப்படி வாய்ப்பு கிடைச்சது?

அன்பறிவ்
அன்பறிவ்

"மலையாளத்துல நிறைய படங்கள் மாஸ்டரா வொர்க் பண்ணிட்டோம். தமிழ்ல நம்ம பண்ற முதல் படம் சரியா அமையணும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தோம். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா சாரை அப்ரோச் பண்ணோம். ஏற்கெனவே நாங்க 'நான் மகான் அல்ல' படத்துல கடைசி ஃபைட் கம்போஸ் பண்ணது அவருக்குப் பிடிச்சிருந்தது. அதனால எங்களை அவருக்கு நல்லா தெரியும். 'அட்டக்கத்தி' பண்ண பா.இரஞ்சித்தான் இந்தப் படத்தை இயக்குறார். அவரைப் பாருங்க'னு சொன்னார். ரஞ்சித் சார் எங்களுக்கு படத்துடைய ஸ்கிரிப்ட்டை கொடுத்தார். அன்னைக்கு நைட்டே ரெண்டு பேரும் ஸ்கிரிப்ட்டை முழுக்க படிச்சுட்டு, அதுல எங்களுக்கு இருக்கிற சந்தேகங்களைக் குறிச்சுக்கிட்டு, மறுநாள் அவரை பார்க்கப்போனோம். `இதுல சில சந்தேகமெல்லாம் இருக்கு சார்’னு சொன்னவுடன், உடனே தயாரிப்பாளருக்குப் போன் பண்ணி, `இந்தப் படத்துக்கு இவங்கதான் ஸ்டன்ட் மாஸ்டர்'னு சொன்னார். எங்களுக்கு என்ன நடக்குதுனே புரியலை. 'இந்த ஆர்வம்தான் இந்தப் படத்துக்குத் தேவை, நம்ம கலக்கலாம்'னு சொன்னார். அப்படிதான் 'மெட்ராஸ்' வாய்ப்பு கிடைச்சது."

நிறைய மொழியில் படங்கள் பண்றீங்க; ஒரு படத்துல வொர்க் பண்றதுக்கு உங்களை எப்படித் தயார்படுத்திக்கிறீங்க..?

"எந்த மொழியா இருந்தாலும் அந்தப் படத்துடைய கதை என்னனு நமக்குத் தெரியணும். அந்தக் கதையில ஹீரோவுக்கான கேரக்டர் எப்படிப்பட்டதுனு தெரிஞ்சுக்கணும். அந்த ஹீரோவுடைய பழைய படங்கள் பார்த்து, இப்போ அந்த ஹீரோகிட்ட ஆடியன்ஸ் என்ன எதிர்பார்க்குறாங்கனு புரிஞ்சுக்குவோம். வேற மொழிப் படங்கள் பண்ணும்போது அந்த ஊர்ல பல ஸ்டன்ட் மாஸ்டர்கள் இருக்கும்போது எங்களைக் கூப்பிடுறாங்கன்னா, அதுக்கு ஸ்பெஷலா எங்களுக்கான ஸ்டைல்ல புதுசா ரியாலிட்டியோட பண்ணணும்னு டிஸ்கஸ் பண்ணிட்டுப் போவோம்."

எந்த ஹீரோவாவது இன்னும் கொஞ்சம் மாஸ், பில்டப் இருந்தா நல்லா இருக்குமேனு சொல்லியிருக்காங்களா?

அன்பறிவ்
அன்பறிவ்

"இதுவரை நாங்க வொர்க் பண்ணதுல, ரஜினி சார் உட்பட எந்த ஹீரோவும் அப்படிக் கேட்டதில்லை. கதைதான் மாஸ் வேணுமா வேண்டாமானு முடிவு பண்ணும். 'கே.ஜி.எஃப்' படம் முழுக்க மாஸ்தான். ஏன்னா, அந்தக் கதைக்கு அதுதான் தேவை. ஆனா, யஷ் சார் இந்த சீன்ல கொஞ்சம் மாஸ் பில்டப் இருக்கலாமேனு ஒருமுறைகூட சொன்னதில்லை. கார்த்தி சாரும் அப்படித்தான். மார்கெட்ல ஒரு ஃபைட் நடக்குதுனா, அந்த ஹீரோவுக்கு மாஸ் பில்டப் கொடுக்கணும்னு கத்திரிக்காய், தக்காளில இருந்து க்ளோஸ் அப் வெச்சு அதுல இருந்து ஹீரோ வெளியே வர மாதிரி வெச்சா நல்லா இருக்காது. அடுத்து 'கே.ஜி.எஃப் 2' பண்றோம். அந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு ரொம்ப அதிகமா இருக்கு. அதுக்கு கண்டிப்பா மாஸ் பில்டப் பண்ணிதான் ஆகணும். தேவையில்லாத இடத்துல மாஸ் பில்டப் கொடுக்கிறதுல எங்களுக்கு உடன்பாடில்லை. இப்போ பண்ணப்போற 'கே.ஜி.எஃப் 2'வை நினைச்சாதான் கொஞ்சம் பயமா இருக்கு."

நீங்க இரட்டையர்களா இருக்கிறதுனால, சின்ன வயசுல நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் என்ன?

"ஸ்கூல் படிக்கும்போது பஸ் பாஸ்ல ஆரம்பிச்சு, இப்போ ஏர்போர்ட்ல ஐடி ப்ரூஃப் வரைக்கும் நிறைய இடங்கள்ல ஒரு ஐடியை வெச்சு எஸ்கேப் ஆகியிருக்கோம். ஸ்கூல்ல படிக்கும்போது க்ளாஸ்ல ரெண்டு பேரும் பக்கத்துல உட்கார மாட்டோம். ஏதாவது பிரச்னை வந்தா, 'நான் இல்லை அவன்தான்'னு ரெண்டு பேருக்குள்ள சண்டை போட்டுக்குவோம். எங்களைத் திட்ட வந்தவங்க, எங்க சண்டையை நிறுத்துறதுக்குள்ள டயர்டாகிடுவாங்க. 'ரெண்டு பேருல ஒருத்தன் நல்லவனா இருக்கான்; ஒருத்தன் மோசமா இருக்கான். ஆனா, யாருனுதான் தெரியலை'னு சொல்லி எங்களைத் திட்டுறதையே மறந்திடுவாங்க. நாங்க ஃபைட்டர்களா இருக்கும்போது ஹீரோ ஒருத்தனை அடிச்சுட்டு இந்தப் பக்கம் வந்தா, அவனும் அதே மாதிரியே இருப்பான். அது சரிவராதுனு நாங்க வெவ்வேற மாஸ்டர்கள்கிட்ட வொர்க் பண்ண ஆரம்பிச்சோம். அப்படி பல பேர்கிட்ட நாங்க கத்துக்கிட்ட விஷயங்களை இப்போ சரியா செஞ்சுக்கிட்டு இருக்கோம்."

யார் அன்பு, அறிவுனு தெரியாமல் நிறைய பேர் குழம்பியிருப்பாங்களா..?

அன்பறிவ்
அன்பறிவ்

"ஸ்கூல் ஃபுட் பால் டீம்ல இருந்தபோது ஒரு சில நேரங்கள்ல நான் சோர்ந்து போயிட்டேன்னா, அப்படியே தண்ணி குடிக்கிற மாதிரி வெளியே வந்திடுவேன். ரெஃப்ரீக்குத் தெரியாம அன்பு உள்ளே போயிடுவான். அவனும் ரொம்பநேரம் விளையாண்ட மாதிரி ரியாக்‌ஷன் கொடுத்துட்டு எனக்குப் பதிலா உள்ளே ஆடிட்டு இருப்பான். மேட்ச் முடிஞ்சு வந்து, நாங்க சிரிச்சுக்குவோம். செம ஜாலியா இருக்கும். ஒருமுறை அறிவுக்கு ஆப்ரேஷன் நடந்துச்சு. அவனைப் பார்க்க ஹாஸ்பிட்டல் போய்ருந்தேன். அவன் பாத்ரூம் போயிருந்தான். கொஞ்சம் டயர்டா இருந்துச்சுன்னு, அவன் இருந்த பெட்ல நான் படுத்திருந்தேன். டாக்டர் வந்து பர்த்துட்டு ஷாக்காகி, ’எங்க தையல்; மெடிக்கல் மிராக்கிள்’னு சொல்ல ஆரம்பிச்சுட்டார். அப்புறம் நாங்க ட்வின்ஸ்னு சொன்ன பிறகுதான், அவர் நார்மல் மோடுக்கு வந்தார். ரஜினி சார், 'கே.ஜி.எஃப்' யஷ் சார்னு ஸ்பாட்ல நிறைய பேர் குழம்பியிருக்காங்க."

இரட்டையர்களா இருக்கிறது உங்களுக்கான ப்ளஸ்னு நினைக்கிறீங்களா?

"இரட்டையர்களா இருக்கிறது எங்களுக்கான வரமா பார்க்கிறோம். எங்க பிரச்னைகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்திருக்கிறோம். எப்போவும் நம்மகூட நம்மளை மாதிரியே ஒருவர் இருக்கார்ன்னு தைரியம் இருக்கும். எங்களுக்கு எத்தனை நண்பர்கள் இருந்தாலும் நாங்க ரெண்டு பேரும்தான் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்."

அடுத்த கட்டுரைக்கு