ஆங்கில மொழிக்குப் பதிலாக இந்தியை இணைப்பு மொழியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், இந்தியை அலுவல் மொழியான நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது பேசுபொருளானது. இதையடுத்து இந்தி தொடர்பான இந்த விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. குறிப்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முதல் பல பிரபலங்கள் வரை இதுகுறித்துப் பேசி வந்தனர். இந்நிலையில் பிரபல முன்னணி இயக்குநர் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி மணிரத்னம், 'இந்தி நல்ல மொழி, அதைக் கற்றுக் கொள்ளவேண்டும். இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள், அவர்களுடன் பேச வேண்டுமென்றால் இந்தி கற்றுக் கொள்ளவேண்டும்’ என்று பேசியுள்ளார்.

இன்று சென்னையில் நகைக்கடை நிகழ்ச்சி ஒன்றில் சுஹாசினி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் "எல்லா மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் வீட்டில் காலையில் சமைப்பவர்கள் தெலுங்கு பேசுவார்கள், இரவு நேரத்தில் சமைப்பவர்கள் இந்தி பேசுவார்கள். இந்த மொழிதான் புடிக்கும் அந்த மொழிதான் புடிக்கும் என்று கூறினால் சாப்பாடு கிடைக்குமா? எனவே எல்லா மொழியையும் தெரிந்துகொள்ள வேண்டும். எல்லா மொழியையும் சமமாக நடத்த வேண்டும்" என்று கூறினார். மேலும், "இந்தி நல்ல மொழி, முக்கியமான மொழி, எனவே இந்தியைக் கற்றுக் கொள்ளவேண்டும். இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள், அவர்களுடன் பேச வேண்டுமென்றால் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். அதே போன்று தமிழர்களும் நல்லவர்கள்தான். அவர்கள்(இந்தி பேசுபவர்கள்) தமிழில் பேசினால் தமிழர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். எவ்வளவு மொழி கற்றுக்கொள்கிறோமோ அவ்வளவு நல்லது" என்றார்.