Published:Updated:

"மீனா மிரட்டினாங்க... ரோஜா, குஷ்பு பயம் காட்டிட்டாங்க!" - பார்த்திபன் தொடர் - 19

பார்த்திபன்

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 11.

"மீனா மிரட்டினாங்க... ரோஜா, குஷ்பு பயம் காட்டிட்டாங்க!" - பார்த்திபன் தொடர் - 19

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 11.

Published:Updated:
பார்த்திபன்

''பார்த்திபன் அவர்களே... உங்களுடன் நடித்த மீனா, ரோஜா போன்ற தென்னிந்திய பேரழகிகளை, திறமை வாய்ந்த நடிகைகளைப் பற்றி ஒரு வார்த்தை கூட நீங்கள் ஏன் குறிப்பிடுவதில்லை... வட இந்திய கதாநாயகிகளை மட்டுமே கொண்டாடும் கூட்டத்தில் நீங்களும் ஒருவரா? அவர்கள் அடைந்த வெற்றிகளை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வது போல் நீங்களுமா?''

கிருஷ்ணகுமார், மேட்டுப்பாளையம்

Parthiban, Meena
Parthiban, Meena

''என்ன கிருஷ்ணகுமார் இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டீங்க. நான் எப்ப வட இந்திய நடிகைகள் பத்தியோ, பஜ்ஜி இந்திய நடிகளை பத்தியோ, அல்லது போண்டா இந்திய நடிகைகள் பத்தியோ பாராட்டி பேசி நீங்க பார்த்தீங்க. நம்மூர் நடிகைகள் மிகவும் திறமையானவங்க. மொழிவாரியா பார்க்காமல் சொல்லணும்னா கர்நாடகாவுல இருந்துவந்த செளந்தர்யாவை நிறைய பாராட்டி பேசியிருக்கேன். அவங்க என்கூட 'இவன்' படத்துல நடிச்சாங்க. அதேப்போல அந்தப்படத்துல நடிச்சதுக்காக மீனாவுக்கு சிறந்த நடிகை விருது கிடைச்சது. சின்னக்குழந்தைல இருந்து மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினவங்க நடிகை மீனா. அவங்க சிறந்த நடிகைன்னு உலகத்துக்கேத் தெரியும். அவங்க நடிப்பை நேர்ல பார்த்து மிரண்டுபோயிருக்கேன். அதேமாதிரி ரோஜா 'சரிகமபதநி'ல என்கூட நடிச்சிருக்காங்க. அப்புறம் இப்ப ஆந்திர அரசியல்ல அவங்க செயல்பாடுகளைப் பார்த்து பயந்துபோய் மெசேஜ் அனுப்புவேன். 'என்ன மிரட்டல் மிரட்டுறீங்க. சந்திரபாபு நாயுடுவே உங்கப் பேச்சைப்பார்த்து தடதடன்னு நடுங்குறாரே'ன்னு சொல்லுவேன். அதேமதிரி குஷ்பு. வட இந்தியால இருந்து வந்திருந்தாலும் தமிழ் கத்துக்கிட்டு அவங்க பேசுற தமிழ் அவ்ளோ நல்லாயிருக்கு. அவங்க கொடுக்கிற அரசியல் விளக்கங்கள், அரசியல் சார்ந்த அறிவு எல்லாமே பார்த்து ஆச்சரியப்படுவேன். ரோஜாவோ, குஷ்புவோ போன இடத்துக்கு என்னால ஏன் போகமுடியலைன்னு தோணும். அரசியல் வாழ்க்கைல அவங்களோட தைரியத்தைப் பார்த்து உண்மையிலேயே பயந்திருக்கேன். வாழ்க்கைல அடுத்து நிலைக்குப்போயிருக்க அவங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பெண் இல்லாத வீடு - இருக்கும் வீடு வித்தியாசம் சொல்லியிருக்கீங்க. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி இருக்கிறதை எப்படி உணர்கிறீர்கள். இன்னும் கிராமப்புறங்களில் நடக்கும் அராஜகங்கள் வெளிவருவதில்லையே, ஏன்?''

பி.வித்யா, கள்ளக்குறிச்சி

''ஹாஸ்பிட்டலுக்குபோனோம்னா அவசர சிகிச்சைப்பிரிவு இருக்கும். அதுமாதிரி நீதிமன்றங்கள்லகூட அவசர நீதிமன்றம் ஆரம்பிக்கணும்கிறது என்னோட அபிப்ராயமா இருக்கு. நீதி தாமதமா கிடைக்கிறதுல எந்த பயனும் இருக்கிறதா தெரியல. குற்றவாளி விடுதலை ஆனாலும் பரவாயில்ல, நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னு சொல்லிட்டு, குற்றவாளிகள் தப்பிக்கிறதுக்கான அவ்ளோ ஓட்டைகள் சட்டத்துல இருக்கு. உத்திரபிரதேசத்துல சமீபத்துல நடந்த கொடுமைகளைக் கேட்கவே பயங்கரமா இருக்கு. ஆனா, உத்திரப்பிரதேசத்துல நடந்ததுக்கு இங்க போராட்டங்கள் நடக்கிறது வேடிக்கையா இருக்கு. நம்ம ஊர்லயே பெண்களுக்கு எதிரா அவ்ளோ கொடுமைகள் நடக்குது. ரேப் குற்றதுக்காக சில நாடுகள்ல கல்லை எடுத்து அடிச்சே கொல்ற வீடியோக்களைப் பார்த்திருக்கேன். அப்படி அடிக்கும்போது அடிவாங்குறவர் மேல நமக்கு எந்த பரிதாபமும் வராது. இப்படிப்பட்ட தண்டனைகள்தான் வேணுமா, இல்ல நமக்குள்ள ஒரு சமூகக் கட்டுப்பாடுகள் வரவே வராதான்னு தோணுது. சீக்கிரமா இதுக்கான விடிவுகாலம் வரணும். அதனால உடனடியா தீர்வு சொல்லக்கூடிய நீதிமன்றங்கள் அமைக்கப்படணும். அதுதான் சரியான வழியா இருக்கமுடியும்னு நினைக்கிறேன்.''

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''இந்த டெக்னாலஜி அதிகமா இருக்க ஜெனரேஷன்ல நிம்மதி மற்றும் சந்தோஷம் இருக்கா... இதனால் நீங்க மிஸ் பன்றது என்ன?''

கோபி.எஸ். காஞ்சிபுரம்

பார்த்திபன்
பார்த்திபன்

''இந்த டெக்னாலஜி, ஸ்மார்ட்போனால மனிதர்கள் தனித்தனியா ஒரு குரங்கு மாதிரி, அதையே சுரண்டிக்கிட்டு, அதுக்குள்ளயே ஒரு உலகத்தைப் பார்த்து ரசிச்சிக்கிட்டு, அடுத்த மனிதனை சுத்தமா கவனிக்காம, ரொம்ப அந்நியப்பட்டுபோன மாதிரி இருக்கு இந்த வாழ்க்கை. ஆனா, எனக்கு காஞ்சிபுரம் ரொம்ப பிடிக்கும். காலங்காத்தால எழுந்திருச்சு கோலம்போட்டு, சாணிக்கு நடுவுல பூசனிப்பூ வைக்கிற அழகுபிடிக்கும். தஞ்சாவூர் கோயில் பக்கத்துலதான் பாட்டி வீடு. படிச்சது திருவல்லிக்கேணி இந்து ஹை ஸ்கூல். பார்த்தசாரதி கோயில் சொக்கவாசல் திறக்குறது, பட்டுப்பாவாடை போட்டுக்கிட்டு சலசலன்னு கொலுசோட பெண்கள் ஓடுறதுன்னு அவ்ளோ விஷயங்கள் பிடிக்கும். கடவுள் இருக்காரா, இல்லையான்றது வேற விஷயம். அப்ப, ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க்கை சுவாரஸ்யமாகவும், எதார்த்தமாகவும் இருந்ததாகவும் எனக்கு தோணுது. இப்ப இருக்கிற வாழ்க்கையில அதெல்லாம் மிஸ் ஆகுது. பெரிய மெச்சூரிட்டி வந்துட்டா எதையுமே ரசிக்க முடியாது. மழையை ரசிக்கிறவங்க, கடலை ரசிக்கிறவங்களாம் இப்ப குறைஞ்சிட்டாங்க. இந்த டெக்னாலஜி வளர்ச்சியைத் தடுக்கமுடியாது. ஆனா, அந்த வாழ்க்கை, இந்த வாழ்க்கைன்னு ரெண்டையும் பார்த்ததால அந்த வாழ்க்கைக்குள்ள இருக்கிற எளிமை எனக்குப் பிடிச்சிருக்கு.''

''வணக்கம் பார்த்தி சார் உங்க பொண்ணுங்க அப்பா செல்லமா... ஒரு சிங்கிள் ஃபாதரா உங்களுக்கு முன்பிருந்த சவால்கள் எது?''

ஸ்வாதிப்பிரியா, திருப்பூர்

மகளுடன் பார்த்திபன்
மகளுடன் பார்த்திபன்

''உங்கப்பேர்ல இருக்கிற பிரியத்தைத்தான் நான் குழந்தைகள் மேல காட்டினேன். அவங்க பிறந்தபோது மாடமாளிகை, அஞ்சாறு கார்லாம் நின்னுட்டு இருக்கும். ஆறாவது படிக்கிறவரைக்கும் அவங்க வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. ஆனால், 2004-ல எல்லாமே அப்படியே மாறிடுச்சு. திடீர்னு வாடகை வீட்டுக்குப் போறோம், வசதியின்மையோட எல்லா வலிகளையும் அவங்க பார்க்குறாங்க. நான் பெரிய பெரிய கடன்லாம் வாங்கிட்டு, ஆடம்பரமான வாழ்க்கை வாழல. என்ன மாதிரியான சினிமா கிரியேட்டரோட வாழ்க்கை இப்படியாகுறதுக்கான வாய்ப்பிருக்கு. அதை அவங்க பார்த்தாங்க. லயோலா-ல கொண்டுபோய் கீர்த்தனாவை சேர்க்கும்போது 'உங்களை நான் நல்லா படிக்க வெச்சுடுவேம்மா. ஆனா, காலேஜுக்குப்போனாலே றெக்கை முளைச்சி வேற எங்கேயோ போற மாதிரின்னு நினைச்சிட்டு உங்க கவனம் படிப்புல இருந்து மாறிடக்கூடாது. அப்படி எந்த விஷயத்துக்கும் நீங்க இடம் கொடுக்கக்கூடாது. அதுக்கான சூழல்ல நான் இல்லை. இங்க முழுக்க படிப்பு'ன்னு சொல்லி சொல்லி வளர்த்தேன். குழந்தைகளுக்கும் காலேஜ் போறப்ப பல குழப்பங்கள் இருக்கும். மனம் முழுக்க உடல் நிரம்பியிருக்கும். உடல் மட்டுமே நிரம்பியிருக்கும். உடல்ல ஏற்படுற மாற்றங்கள், அதுக்கான கேள்விகள்னு நிறைய குழப்பங்கள், கஷ்டங்கள் இருக்கும். அப்ப யார் சப்போர்ட்டா இருகிறதுன்னு ஒரு விஷயம் இருக்கும். கூட தாய்மார்கள் இருக்கும்போது சில விஷயங்களை சொல்லி புரியவெச்சிடுவாங்க. ஆனா, சிங்கிள் ஃபாதரா இருக்கும்போது சில கஷ்டங்கள் இருக்கும். சினிமால நடிச்சவங்கன்றதால, எல்லோருக்கும் தெரியும்ன்றதால நான் இங்க கீர்த்தனா பற்றி மட்டும் சொல்றேன். மணிரத்னம் சார் படத்துல நடிச்சதுக்குப்பிறகு அவங்களுக்கு 10 படங்கள்ல நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனா, அவங்க அதையெல்லாம் ஒத்துக்கல. அந்த வயசுல ஸ்கூலை கட் அடிச்சிட்டு, சினிமா, ஷூட்டிங்னு போக குழந்தைகளுக்குப் பிடிக்கும். ஆனா, கீர்த்தனா ரொம்ப தெளிவா சரியான முடிவுகள் எடுத்தாங்க. மணிரத்னம் சார் கிட்ட அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ணாங்க. தனியா படம் பண்ண தொடங்கும்போதுதான் ஒருத்தரை விரும்புறேன்னு சொன்னாங்க. அதுக்கு நான் தடையாவே இல்ல. அதனால எல்லா பேரன்ட்ஸுக்கும் குழந்தைகள் வளர்ப்புல சில சிரமங்கள் இருக்கும். நாம அந்த வயசுல என்னலாம் பண்ணிணோம்னு யோசிச்சாலே போதும். சில விஷயங்களை கண்டுக்காம விட்டுரணும். முன்னாடிலாம் கெட்ட விஷயத்தை தேடிப்போவோம். ஆனா, இப்ப எல்லாமே அவங்க கைக்குள்ளவே இருக்கு. தாயோட சென்ட்டிமென்ட்டும், தந்தையோட கண்டிப்பும் கலந்து கொடுக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்.''

''உங்களோட நிறைய படங்கள்ல வித்தியாசமான நடிப்பை பார்த்திருக்கேன். But Real Life பார்த்திபன் என்ன மாதிரி Character?''

ஏஞ்சலின் எஸ்தர், சென்னை

''ஏஞ்சலின் எஸ்தர்... ரொம்ப அழகானப் பேர். பார்த்திபன் என்ன கேரெக்டர்னா, இப்ப ஏஞ்சலின் எஸ்தர்ன்னு பேரைக்கேட்டதுமே ஒரு கற்பனை விரியும். விவரம் தெரிஞ்சகாலத்தில் இருந்தே ஒரு கிறிஸ்தவ பெண், பால்கனில ஸ்டார்லாம் கட்டியிருக்கும். நிறைய கேண்டில்ஸ் அந்த வீட்ல இருக்கும். அந்தப்பெண்ணுக்கும், எனக்கும் யாருக்கும் தெரியாத, ஊருக்கே தெரியாத ஒரு உறவு இருக்கும். இப்படி ரொம்ப நாளா எனக்குள்ள ஒரு கனவு, கற்பனையிருக்கு. இந்த கற்பனை, கனவுகள்தான் நான். என்ன விஷயம் வந்தாலும், நடந்தாலும் உடனே நான் கற்பனைக்குள்ள நகர்ந்து போயிடுவேன். ஒவ்வொரு செகண்டையும், செகண்ட் தாட்டே இல்லாமல் உள்ள போய் வாழணும்னு நினைக்கிறேன். சினிமா நடிகனா வளர்ந்துவரும்போது இந்தியாவோட பெரிய அரங்குல விருது வாங்குவேன்னு கற்பனை பண்ணேன். அது நிஜமாச்சு. தேசிய விருது வாங்கினேன். இப்ப அந்த கற்பனை இன்னும் விரிஞ்சு ஆஸ்கர் வரைக்கும் போயிட்டிருக்கு. அதுக்கு ஒத்திகையா இந்த 'ஒத்த செருப்பு' வந்திருக்கு. உங்கள் எண்ணங்கள் அழகானதாக இருந்தால், அதற்கான உழைப்பை முழுமையாகக் கொடுத்தால் கற்பனைகள் நிஜமாகும். நிலவைத் தொடணும்னு ஆசைப்பட்டா நிச்சயமா தொட்டுடலாம். நம்பிக்கையின் அடிப்படையில் முயற்சிகள் நடக்கும்போது எல்லாமே சாத்தியமாகும். வாழ்க்கைல நிறைய காதல் முக்கியம்னு நினைக்கிறேன். ஒவ்வொரு கனப்பொழுதையும் எப்படி அனுபவிச்சி வாழ்றோம்கிறது முக்கியம். அதுல முக்கியமானது மனிதத்தன்மை. என்னுடைய எல்லா படங்களிலும் ஒரு சாரசரி மனிதனோட வாழ்க்கைக்குள்ள அவனுடைய தேவைகள் கிடைக்காதப்போ அவன் என்னவா மாறுறான்றதுதான் கதையா இருக்கும். அன்பைவிட பெருசா இந்த உலகத்துல எதுவும் இல்லை. 'இரவின் நிழல்'ல எப்பவோ கற்பனை பண்ண விஷயங்களை எல்லாம் கொண்டு வந்து சேர்த்திருக்கேன். என் வாழ்க்கைக்குள்ள நிறைய பைத்தியக்காரத்தனங்களும் இருக்கு. இந்த பார்த்திபன் அப்படித்தான்.''