Published:Updated:

''வெப்சீரிஸ் வேலை ஸ்பீடா நடந்துட்டு இருக்கு... மொத பேட்டி விகடனுக்குத்தான்!'' - வடிவேலு சர்ப்ரைஸ்!

வடிவேலு
வடிவேலு

நீங்கள்லாம் வீட்டுலயே இருக்கீங்களே எப்படி உங்களுக்கு பொழுதுபோகுது... ரொம்ப போரடிக்குமே. எனக்கு அப்படி இல்லை... ஏன்னா ஏற்கெனவே ரெண்டு வருஷம் வீட்டுலேயே இருந்து பழகிக்கிட்டேன்.

தமிழ் சினிமா நடிகர்களில் எப்போது போன் செய்தாலும் மிஸ் ஆகாமல் போனை எடுப்பவர் நடிகர் வடிவேலு. சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் நடிகர்கள் யாருக்காவது போன் செய்து பேசினால் விரக்தியில் ஏதேதோ பேசி நம்மையும் கவலையில் ஆழ்த்திவிடுவார்கள். ஆனால் வடிவேலு இதற்கெல்லாம் விதிவிலக்கு. தன் நகைச்சுவையால் நம்மைக் குளிப்பாட்டி, குஷியாக்கிவிடுவார் மனிதர்.

vadivelu
vadivelu

கொரோனா சீசனில் எப்படியிருக்கிறார் என போன் அடித்தேன். ``ஏம்பா கொரோனோ வைரஸ் என்ன சொல்லுது. சீனாக்காரன் ஆரம்பிச்சு வெச்ச கொரோனோ உலகம் பூரா சுத்திச்சுத்தி ஒரு பயலக்கூட விடாம மரண பயத்தை கண்ணுல காட்டி விரட்டுது. கொரானோ பாச்சா என்கிட்டே பலிக்கவே பலிக்காது. ஏன்னா புதினா சட்னியும், பூண்டு பொடியும், மிளகு குழம்பும் கும்முன்னு சாப்பிட்டு உடம்பை ச்சும்மா ஜம்முன்னுல வெச்சிருக்கேன். அதுசரி நீங்கள்லாம் வீட்டுலயே இருக்கீங்களே எப்படி உங்களுக்கு பொழுதுபோகுது... ரொம்ப போரடிக்குமே. எனக்கு அப்படி இல்லை... ஏன்னா ஏற்கெனவே ரெண்டு வருஷம் வீட்டுலேயே இருந்து பழகிக்கிட்டேன். அதனால ஜாலியா இருக்கு'' என கலாய்த்தவரிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்துப்பேசினேன்.

vadivelu
vadivelu

``நான் திருச்செந்தூர்ல சாமி கும்பிட்டுட்டு வெளியே வரும்போது என்கிட்ட மைக்கை நீட்டி `ரஜினி அரசியலுக்கு வந்தா நான் கட்சியைப் பார்த்துப்பேன். முதலமைச்சரா வேறு ஒருத்தரை வைக்க போறேன்று சொல்றாரே'னு கேள்வியை கேட்டுப்புட்டாங்க. அப்போ `ரஜினிசார் சொல்றது சரிதானே யாருக்கு அந்த மனசு வரும். பாராட்டுறேன் அவர் சொன்னதை வரவேற்குறேன்'னு சொல்லிட்டு நான் பாட்டுக்கு மதுரைக்கு வந்துட்டேன். திடீர்னு ஒரு நாள் போன். `என்ன வடிவேலு எப்படி இருக்கீங்க?'ன்னு ரஜினி சார் பேசுனார். `ரொம்ப நல்லா பேசுனீங்க'னு பாராட்டுனார். அதுக்கப்புறம் ரெண்டுபேரும் கொஞ்ச நேரம் மனம்விட்டு பேசிட்டு இருந்தோம்'' என்றவரிடம் ``வெப்சீரிஸ்ல நடிக்கப்போறேன்னு சொன்னீங்களே என்னாச்சுண்ணே'' எனக் கேட்டேன்.

``வெப்சிரீஸ் வேலைகள் செம ஸ்பீடுல நடந்துட்டு இருக்கு. யார் இயக்குநரு, என்ன வெப்சீரிஸ்னு எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன். மொத பேட்டி ஆனந்த விகடனுக்குத்தான்'' என சர்ப்ரைஸோடு முடித்தார் வைகைப்புயல் வடிவேல்!

அடுத்த கட்டுரைக்கு