Published:Updated:

இந்திய சினிமாக்களின் நம்பர் 1 வில்லன் ‘கப்பர்’ உருவான கதை!

இந்திய சினிமாக்களின் நம்பர் 1 வில்லன் ‘கப்பர்’ உருவான கதை!
இந்திய சினிமாக்களின் நம்பர் 1 வில்லன் ‘கப்பர்’ உருவான கதை!

தலைப்பு: கப்பர்.

கதாசிரியர்சௌரவ் மஹாபாத்ரா.

ஓவியர்ரோனில்ஸன் ஃப்ரெய்ரி & மற்றும் பலர்.

வெளியீடு: 2014 (112 முழுவண்ணப் பக்கங்கள், 295 ரூபாய்).

பதிப்பாளர்: கிராஃபிக் இந்தியா

கதைக் கரு: இந்திய திரைப்படங்களில் ஆகச்சிறந்த இரண்டகனாகக் கருதப்படும் கப்பர் சிங் உருவான கதை.

குறிப்பு: `ஷோலே' திரைப்படத்தைத் தழுவி, கப்பர் சிங்கின் கிளைக்கதையைச் சொல்லும் கிராஃபிக் நாவல்.

விளையாட்டு வீரர்கள் (குறிப்பாக, கிரிக்கெட் விளையாடுபவர்கள்), வெள்ளித்திரை நட்சத்திரங்கள் எனப் பலரும் விளம்பரங்களில் நடித்துவருகிறார்கள். இவர்கள் அனைவருமே அவரவர் நிஜ பிம்பத்தை முன்வைத்தே விளம்பரங்களில் தோன்றுகிறார்கள். ஆனால், முதன்முதலில் ஒரு திரைப்படக் கதாபாத்திரத்தை (அதுவும் அந்தக் கதாபாத்திரம் ஹீரோகூட கிடையாது, வில்லன்தான்) விளம்பரத்தில் நடிக்கவைத்த படம்தான் `ஷோலே'. 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி வெளியான இந்த `ஷோலே' திரைப்படம், இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த திரைப்படம் என்றும், இதன் எதிர்நாயகன் ஆன ‘கப்பர் சிங்’ இந்தியாவின் புகழ்பெற்ற வில்லன் என்றும் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்த கப்பர் சிங் கதாபாத்திரம்தான், இந்தியாவில் முதன்முதலில் விளம்பரத்தில் தோன்றிய முதல் வில்லன் கதாபாத்திரம்.

ஓநாயின் பார்வையிலிருந்து பார்த்தால்தான் அதன் பக்கம் உள்ள நியாயம் தெரியும் என்பதைப்போல, இந்திய திரைப்படங்களின் பயங்கரமான வில்லனான கப்பர் சிங், எப்படி அனைவரும் நடுங்கும் ஒரு கொள்ளைக் கூட்டத் தலைவன் ஆனான் என்பதைச் சொல்கிறது ‘கப்பர் சிங்’ கிராஃபிக் நாவல். புதிதாக ஒரு கதையைக்கூட எழுதிவிடலாம். ஆனால், ஏற்கெனவே பிரபலமாக இருக்கும் ஒரு கதைக்கு, நாற்பது ஆண்டுகளாகக் கொண்டாடப்படும் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்துக்கு, முன்கதை அமைப்பது மிகவும் சிரமமான வேலை. ஆனால், கப்பர் சிங்குக்கு மட்டுமல்ல தாகூர், சூர்மா போபாளி, ஜெயிலர், சாம்பா, மெஹ்பூபா என, கதையின் மிக முக்கியமான பாத்திரங்கள் பலருக்கும் அட்டகாசமான ஓர் அறிமுகத்தை உருவாக்கியிருக்கிறார், பிரபல காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல் படைப்பாளியான சௌரவ் மஹாபாத்ரா.

கப்பர் சிங் உருவான கதை: 

சௌரவ் மஹாபாத்ரா எழுதிய இந்த முன்கதையில், தாகூரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் கப்பர் சிங்கைச் சந்திக்க வருகிறார் புதிய ஜெயிலர். அவர், கப்பர் சிங்கிடம் அவனைப் பற்றி விசாரிக்க, தன்னைப் பற்றி முழுமையாகச் சொல்கிறான் கப்பர். சினிமா ஸ்டைலிலேயே ஃப்ளாஷ்பேக்கில்தான் கதையின் பெரும்பகுதி சொல்லப்படுகிறது. கிராமத்துத் தலைவரான கப்பரின் தந்தை பெயர் ஹரி சிங். சம்பல் பகுதியில் இருக்கும் கொள்ளைக்காரர்களின் தலைவனான பைரவ் சிங், இவர்களின் கிராமத்தில்தான் ஆயுதங்களைப் பதுக்கிவைக்கிறான். அந்தப் பகுதியின் சப்-இன்ஸ்பெக்டரான கன்ஹையா லாலின் சகோதரனை பைரவ் கொன்றதால், இவர்கள் இருவருக்குமிடையே பகை உருவாகிவிடுகிறது. கொள்ளைக்காரனான பைரவ் சிங்கைப் பிடித்து, கொல்லக் காத்திருக்கிறார் சப்-இன்ஸ்பெக்டர் கன்ஹையா லால். அதற்காக, இவரை ஒரு நேர்மையாளர் என நினைத்துவிட வேண்டாம். இவரும் ஒரு வில்லத்தனம் கலந்த கேரக்டரே!

பயம்தான் உன்னை வழிநடத்தும்

17 வயதான கப்பர் சிங், முக்கியமான ஒரு விஷயத்தை தந்தையிடமிருந்து கற்றுக்கொள்கிறான். பல லட்சம் பெறுமானமுள்ள ஆயுதங்கள் கிராமத்தில் இருந்தாலும், கிராம மக்கள் யாருமே அதைத் திருடவோ, எடுக்கவோ முயல்வதில்லை. கப்பரின் தந்தை, அதை கிராம மக்களின் மீது பைரவ் சிங் வைத்துள்ள நம்பிக்கை எனச் சொல்கிறார். ஆனால், உண்மையில் அது பைரவ் மீது கிராம மக்களுக்குள்ள பயம் என்பதை கப்பர் அறிந்துகொள்கிறான். மோசமான போலீஸுக்கும் கொள்ளைக் கூட்டத்துக்குமிடையே நடக்கும் நேரடி மோதலில், கப்பரின் தந்தை ஹரிசிங், பைரவ் சிங்கால் சுட்டுக் கொல்லப்படுகிறார். வாழ்நாள் முழுவதும் துணிந்து எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்க முடியாத தன் தந்தை ஒரு கோழை என்பதை அந்தத் தருணத்தில்தான் உணர்கிறான் கப்பர். சுட்டுக் கொல்லப்பட்ட தந்தையின் உடலைச் சுமந்துகொண்டு கிராமத்துக்குத் திரும்பியது, 17 வயதான ஹரி சிங்கின் மகன் அல்ல; மனதில் வெறிகொண்ட ஒரு புது ஆன்மாவாக உருவான கப்பர்.

அன்று இரவு கிராமத்துக்குத் திரும்பும் பைரவ் சிங்கை, தனி ஆளாகத் தாக்குகிறான் கப்பர். ஆனால், ஒரு கூட்டத்துக்கு எதிராக அவனால் ஜெயிக்க முடியவில்லை என்றாலும், பைரவை காயப்படுத்திவிட்டு தாயுடன் தப்பித்துவிடுகிறான். காட்டுப் பகுதிக்குச் சென்று, தனக்கென ஒரு குழுவை உருவாக்கி, ஆயுதங்களைச் சேகரித்து, பலம்கொண்ட ஒரு வீரனாக உருவெடுக்கிறான் கப்பர். ஆனால், வயதான அவனின் தாயாரால், காட்டுப் பகுதியில் வசிக்க முடியாத சூழல் ஏற்பட, தாயை ஒரு கிராமத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறான். ஆனால், துரோகங்கள்  அவனைத் துரத்த, தைரியமான முடிவுகள் சிலவற்றை அவன் எடுக்க நேரிடுகிறது. பைரவ் சிங், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கன்ஹையா லால், தன்னைக் காட்டிக்கொடுக்க நினைக்கும் துரோகி, உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய் எனப் பல இன்னல்கள் வர, இவற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆளுமையாக கப்பர் உருவெடுக்கிறான் என்பதுதான் மீதி கதை.

“ ‘ஷோலே' திரைப்படத்தின் படத்தில் த்ரில்லிங்கான இரண்டு காட்சிகள் எவை?' எனக் கேட்டால், அனைத்து ரசிகர்களும் இந்த இரு காட்சிகளைத்தான் சொல்வார்கள்.

  1. தாகூரின் கைகளை கப்பர் சிங் வெட்டும் காட்சியும், அப்போது பேசும் வசனமும்.
  2. கப்பரிடம் சிக்கிக்கொண்ட நாயகனைக் காப்பாற்ற (ஹேமமாலினி) நடனமாடுவது.

இந்த இரண்டு காட்சிகளையும் இந்த கிராஃபிக் நாவலில் கொண்டு வர முடியாது என்பதால், இவை இரண்டையும் மிக நேர்த்தியான கிராஃபிக்  சிறுகதைகளாக, காமிக்ஸ் வடிவில் அளித்திருப்பது இந்தப் புத்தகத்தின் மற்றொரு சிறப்பு.

ஷோலே எக்ஸ்ட்ரா

அப்போதெல்லாம் திரைப்படங்களின் பாடல்கள் மட்டும்தான் ஆடியோ கேசட்டுகளாக வரும். மிகச் சிறப்பான, நினைவுகூரத்தக்க வசனங்களைக்கொண்ட ஒருசில படங்களுக்கு மட்டும், வசனங்களைக்கொண்ட ஒலிச்சித்திரமாக ஆடியோ கேசட்டுகளை வெளியிடுவார்கள். தமிழில்கூட, `திருவிளையாடல்', `விதி' போன்ற படங்களுக்கு ஆடியோ கேசட்டுகள் விற்பனையில் சாதனை படைத்தன எனபது நினைவிருக்கலாம். அதைப்போலவே, `ஷோலே' படத்தின் ஒலிச்சித்திரமும் வெளியானது. அதில் ஒரு சிறப்பம்சம் இருக்கிறது. ஆம், `ஷோலே' படம், வழக்கமான இரண்டரை மணி நேர இந்திய சினிமா கிடையாது. அப்போதைய சென்சார் போர்டால் ஆறு நிமிடங்கள் வெட்டப்பட்டு, ரிலீஸானதே மூன்று மணி 18 நிமிடம்கொண்ட நீளமான படம். ஆகவே, இந்திய ஆடியோ கேசட் வரலாற்றில் முதல்முறையாக, ஒரு படத்தின் வசனம், இரண்டு தனித்தனி கேசட்டுகளில் வெளியான பெருமை `ஷோலே'வுக்கே உண்டு. அதைப்போலவே, இந்த கிராஃபிக் நாவலிலும் சில புதுமைகளை எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்காக வைத்திருக்கிறார்கள்.

சுட்டிகளுக்கான ‛ஷோலே’ 

இந்த கிராஃபிக் நாவலின் ஹைலைட்டாக இன்னோர் ஆச்சர்யம் காத்திருக்கிறது. ‘ஷோலே’ திரைப்படமும் சரி, அதன் ஆக்கமும் சரி, இரண்டுமே வயதில் முதிர்ந்தவர்களுக்காக உருவாக்கப்பட்டவை. ஆனால், இதே கதையை இப்போதைய சுட்டிக் குழந்தைகளுக்குச் சொல்வதாக இருந்தால், எப்படி இருக்கும்? இதற்கு பதில் அளிக்கும் வகையில் அட்டகாசமான ஒரு குட்டி காமிக்ஸ் இதே புத்தகத்தில் இருக்கிறது. `ஷோலே' படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் குட்டிக் குழந்தைகளாக இருந்தால், கதை எப்படி இருந்திருக்கும் என்பதை அழகான காமிக்ஸ் கதையாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்தியாவின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவரான சௌமேன் படேல், குழந்தைகளைக் கவரும் வகையில் வரைந்துள்ள ஓவியங்கள், ரசிக்கவைக்கின்றன.

பிரமாண்டமான ஒரு சூப்பர் ஹிட் திரைப்படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரத்துக்கு மிக அழகாக ஒரு முன் கதை அமைத்து, அதை சிறப்பான நான்லீனியர் வடிவிலும் கொடுத்து அசத்தியிருக்கிறார், கதாசிரியர் சௌரவ் மஹாபாத்ரா.

செளரவ் மஹாபாத்ரா (கதாசிரியர்)

ஒடிசாவில் பிறந்து வளர்ந்து, IIT காரக்பூரில் MBA படித்து, 2000-வது ஆண்டு அமெரிக்காவுக்குப் குடிபெயர்ந்தவர்தான் சௌரவ். பிரபலமான சமூக வலைதளம் ஒன்றை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். வேதாளர் (Phantom) காமிக்ஸ் தொடருக்குக் கதை எழுதிய ஒரே இந்தியர், பிரபல அமெரிக்க காமிக்ஸ் தொடர்களுக்குக் கதை எழுதியவர் என்று பல சாதனைகளைப் படைத்தவர். இணையத்தில் காமிக்ஸ் எழுதுவது எப்படி எனப் பல வளரும் கதாசிரியர்களுக்காகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

ஓவியர்கள்: 

பிரேசிலைச் சேர்ந்த ரோனில்ஸன் ஃப்ரெய்ரி, கப்பரின் கதைக்கு வரைந்திருக்கிறார். மற்ற கிளைக்கதைகளுக்கு சௌமேன் படேல், ஜீவன் காங், எடிசன் ஜார்ஜ் எனப் பல ஓவியர்கள் வரைந்திருக்கிறார்கள்.