Published:Updated:

பேய் படம்னா இப்படி இருக்கணும்! - ‘அனந்தோ பிரம்மா’ படம் எப்படி?

ஜெ.சரவணன்
பேய் படம்னா இப்படி இருக்கணும்! - ‘அனந்தோ பிரம்மா’ படம் எப்படி?
பேய் படம்னா இப்படி இருக்கணும்! - ‘அனந்தோ பிரம்மா’ படம் எப்படி?

`ஜகன்மோகினி'யில் ஆரம்பித்து பல நூறு பேய்ப் படங்களைத் தமிழ் சினிமாவில் எடுத்துவிட்டார்கள். ஆனாலும் இன்னும் எத்தனை பேய்ப் படங்கள் வந்தாலும் பார்க்க ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அதுவும் பேய் இருப்பதாக வெறும் கப்சாவிட்டே மிரட்டும் கதைகொண்ட `பிட்சா' படத்தின் வெற்றிக்குப் பிறகு  தமிழ் சினிமாவில் வரிசையாக வாரத்துக்கு ஒரு பேய்ப் படம் வெளிவந்தது. அவற்றில் பல படங்கள் சீக்வல்களாகவும் வெளியாகின. அதேசமயம் வெளியான அனைத்து பேய்ப் படங்களும் வெற்றியடைந்துவிடவில்லை.

பேய்ப் படங்களைப் பொறுத்தவரை, திரைக்கதையில் சுவாரஸ்யமும் வித்தியாசமும் இல்லாவிட்டால் மண்ணைக் கவ்வவேண்டியதுதான். ஆனால் தமிழ் சினிமாக்கள், ஒரு பழைய வீடு, அதில் உலாவும் பேய்கள் என்ற அளவில்தான் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஹாலிவுட்டில் எடுக்கப்படும் பேய்ப் படங்கள் பலவற்றைப் பார்த்தாலும் எங்கெல்லாம் பேய் வருகிறது, எங்கெல்லாம் உட்காந்திருக்கிறது, பேய் வரும்போது என்ன சவுண்ட் கொடுக்க வேண்டும் என்பதை மட்டும்தான் இங்கு இருப்பவர்கள் பார்த்துக் கற்றுக்கொள்கிறார்கள். அவற்றின் திரைக்கதையையோ, பின்னணி இசையைப் பயன்படுத்துவதன் உத்தியைக் கற்றுக்கொள்ளவோ குறைந்தபட்சம் காப்பியடிக்கவோகூட முயற்சிப்பதில்லை. 

அதனாலேயே ஒரே மாதிரியான கதை, க்ளிஷேவான காட்சிகள், கிளாமர் என பேய்ப் படங்கள் தமிழில் வந்துகொண்டிருக்கின்றன. மேலும் ஹாரர் - காமெடிப் படம் என்ற பெயரில் பல படங்களில் மொக்கை காமெடிக் காட்சிகளை வைத்துதான் கடுபேற்றுகிறார்கள். இதில் பேய்ப் படங்களுக்கென்றே நேந்துவிடப்பட்டவர் கோவை சரளா. `முனி' படத்தின் இரண்டாம் பாகமாக `காஞ்சனா' வெற்றிக்குக் காரணமே கோவை சரளாதான் எனச் சொல்லலாம். அதற்காக எல்லா பேய்ப் படங்களிலும் அவரை வைத்தே டெஸ்ட் பண்ணால் எப்படி மக்களே? பாவம் கோவை சரளா. 

சமீபத்தில் வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தெலுங்கு பேய்ப் படமான `அனந்தோ பிரம்மா', பிற பேய்ப் படங்களுக்கெல்லாம் சவால்விடும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் க்ளிஷே காட்சிகள் இல்லை, கிளுகிளுப்பு காட்சிகள் இல்லை, பாடல்கள் இல்லை, இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை. முக்கியமாக மொக்கை காமெடி சுத்தமாக இல்லவே இல்லை. படம் முழுக்கச் சிரித்துச் சிரித்து வயிறு வலித்துவிடும் அளவுக்கு காமெடி. மகி ராகவ் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், நடிகை டாப்ஸி முன்னணி பேய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் முழுக்க அவருக்கு ஒரே ஓர் உடைதான், அதுவும் பாதம் வரை மறைக்கும் அழகான வெளிர் நீல நிற கவுன்தான். (இது சிலருக்கு ஏமாற்றத்தைத் தரலாம்.)   

அதன் கதை என்ன என்பதை, சுருக்கமாகப் பார்க்கலாம். ஒரு வீடு அதை விற்கும் முயற்சியில் இருக்கிறார் அதன் எஜமான். ஆனால், அந்த வீட்டில் நான்கு பேய்கள் இருக்கின்றன. அந்தப் பேய்கள், வீட்டை விற்க யாரையும் அனுமதிக்கவில்லை. அங்கு பேய் இருப்பதைச் சொல்லியே அந்த வீட்டை அமுக்க ஒரு குரூப் முயற்சிக்கிறது. இதற்கிடையில் பணம் தேவையாக இருக்கும் நான்கு பேர் `அங்கு பேய் இல்லை' என நம்பவைத்து, அந்த வீட்டை விற்று அதில் வரும் கமிஷனைப் பெற்று, தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள விரும்புகிறார்கள். இந்த நால்வருக்குமே ஒரு குறை இருக்கிறது. அந்தக் குறையைத் தங்களின் பலமாக மாற்றி பேய்களை இரண்டு இரவுகள் சமாளித்துவிட்டால், அவர்களுக்கான கமிஷன் கிடைத்துவிடும். பேய்களுக்கும் அவர்களுக்கும் நடக்கும் மோதலில் வெற்றிபெறுவது யார்? வீட்டை விற்றார்களா இல்லையா? அந்த வீட்டில் இருக்கும் பேய்களின் பின்னணிக் கதை என்ன என்பது மீதி கதை. 

கதையின் ஒருவரி வழக்கமான பேய்ப் படங்களின் கதையாக இருந்தாலும், திரைக்கதையில் பல வித்தியாசங்களைக் காட்டியிருக்கிறார் இயக்குநர். படத்தின் தொடக்கக் காட்சிகளிலேயே நம்மை `அட...' எனச் சொல்லவைத்துவிடுகிறார். அந்தக் காட்சிகளின் சுவாரஸ்யத்தை, திரையில் பார்த்து அனுபவியுங்கள். பேய் வீட்டில் தங்கும் அந்த நால்வரும் அந்த வீட்டுக்குள் நடத்தும் சேட்டை, காமெடிக் காட்சிகள்தான் படத்தின் மிகப்பெரிய பலம். பாலகிருஷ்ணா, பாபா ராம்தேவ் ஆகியோரை எல்லாம் இமிடேட் செய்யும் காட்சிகள் உச்சகட்டம். அரங்கமே சிரிப்பொலியில் வெடிக்கிறது. இந்த நால்வரிடமும் தோற்றுப்போகும் பேய்கள், ஓர் இடத்தில் சோகமாக உட்கார்ந்திருக்கும்போது நமக்கே அந்தப் பேய்கள்மீது பரிதாபம் ஏற்டுகிறது.

ஹாலிவுட் ரேஞ்சுக்கு இல்லாவிட்டாலும் பேய்ப் படங்களின் வழக்கமான எல்லைகளை உடைத்தெறிந்து, படம் முழுக்கப் பல சுவாரஸ்யமான காமெடிக் காட்சிகளை நிரப்பி, நிறைவான ஒரு என்டர்டெயின்மென்ட் சினிமாவைத் தந்திருக்கிறது `அனந்தோ பிரம்மா' குழு.

வழக்கமான க்ளிஷே காட்சிகளும் கிளாமரும் இல்லாததால், குடும்பத்தோடு இந்தப் படத்துக்குச் சென்று சந்தோஷமாகத் திரும்ப உத்தரவாதமான படம். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இதை இந்தி மற்றும் பிற தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்ய இருக்கிறார்களாம்.