`நிலவு தூங்கும் நேரம்... நினைவு தூங்கிடாது!' - #32YearsOfKungumaChimil | 32 years of Tamil cinema `Kunguma Chimil'

வெளியிடப்பட்ட நேரம்: 21:34 (23/08/2017)

கடைசி தொடர்பு:21:34 (23/08/2017)

`நிலவு தூங்கும் நேரம்... நினைவு தூங்கிடாது!' - #32YearsOfKungumaChimil

வெள்ளி விழா கண்ட இயக்குநர் ஆர்.சுந்தரராஜனின் இயக்கத்தில் 1985-ம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று வெளிவந்த படம்தான் `குங்குமச்சிமிழ்'. படம், ரிலீஸான முதல் நாளிலேயே செம ஹிட். சரக்கை ஏற்றிச் செல்லும் ரயில் தண்டவாளத்தை நம்பி ஓடுவதைப்போல, வாழ்வாதாரமான வேலையைத் தேடி சென்னைக்கு வந்து சேருகின்றனர் ரவி (மோகன்) & பிலோமினா (இளவரசி). அவர்களின் பயணம் சுகமானது அல்ல. இவர்களின் பாத்திரங்கள் சாதாரண மக்களின் வாழ்வுரிமைக்கான தேடலையும், வேலைக்கான திண்டாட்டத்தையும் முன்னிறுத்துகின்றன. மனதிலும் வலி, வழியிலும் வலி.. ரவியால் பணத்தைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் பிலோமினா, தான் திருடாதப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சுயமரியாதையுடைய பெண்ணாக ரசிகர்களின் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

ரவியும் பிலோமினாவும் போலீஸிடம் சிக்கிக்கொண்டாலும், அதிலிருந்து ரவியையும் தன்னையும் சமயோசித்த புத்தியால் காத்துக்கொள்கிறார் கதாநாயகி. ஒரு பெண் என்பவளாலும் அனைத்தையும் கையாள முடியும் என்பதற்கு இந்தக் கதாபாத்திரத்தின் படைப்பு, அழகிய பெண்ணியிலின் படைப்பு. தங்கும் இடமான சரக்கு ரயில்பெட்டிதான் இந்தப் படத்தின் பெரும்பங்கு. தங்க, குளிக்க... என அனைத்துக்கும் அந்தச் சரக்கு ரயில்பெட்டிதான்.

ஓர் ஆணாக தனது கடமையையும் பொறுப்பையும் அனைவருக்கும் உணர்த்தும் இடத்தில், மோகன் சபாஷ் வாங்குகிறார். ஆனால், இருவரும் அவர்களை அறியாமல் ஒருவரை ஒருவர் நேசிப்பது, அதன் பிறகு கை ஓங்குமிடம், மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி குரல்களில் `கூட்ஸு வண்டியிலே...' என்னும் பாடல் அனைத்தும் அந்த கூட்ஸு பெட்டிக்கே சமர்ப்பணம். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் (CG) இல்லாத காலத்திலேயே செயற்கையான ரயில் வண்டி ஓட்டமும் அதன் ஒளிப்பதிவும் மிகவும் குறிப்பிடத்தக்கது. எஸ்.பி.பி மற்றும் ஜானகியின் குரல்களில் இசைஞானி இளையராஜாவின் மனதை வருடும் இசையில் `நிலவு தூங்கும் நேரம்... நினைவு தூங்கிடாது...' பாடலுக்கு என்றும் முதல் இடம்தான். மவுத் ஆர்கானில் இந்தப் பாடலின் இசை பல வானொலிகளின் உயிர் ராகம். 

குங்குமச்சிமிழ் - Kunguma Chimil

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ரவியும் பிலோமினாவும் பிரிந்து செல்கின்றனர். வால்பாறையின் மொத்த அழகையும் கொடைக்கானலாக மாற்றியதான் ரகசியம் ஒளிப்பதிவாளர் ராஜராஜனின் மாயாஜாலம். தன் அப்பாவைக் (டெல்லி கணேஷ்) காக்கும் அன்புமகளாக ரேவதி, அழகிலும் நடிப்பிலும் மின்னுகிறார். சந்திரசேகரின் நடிப்புக்கு உதாரணமும் தேவையோ? பெண்ணின் மெல்லிய மனதையும், வலிய உறவுகளுக்கான சறுக்கலையும் எடுத்துக்காட்டும் உறவுதான் ரேவதி-மோகனின் உறவுநிலை.

வாழ்க்கையில் எங்கு சென்றாலும், பயணித்தப் பாதையை மறவாததே வாழ்வின் அழகு. குங்குமத்துக்காக ஏங்கும் இரு பெண்களின் வாழ்வை யதார்த்தம் மாறாமல் கூறிய இயக்குநர் ஆர்.சுந்தரராஜனையும், அதற்கு உதவி புரிந்த தயாரிப்பாளர்கள் துரை, ராசப்பன்,  ஸ்ரீனிவாசன் ஆகியோரையும் என்றும் மறக்க  இயலாது.  காலம் கடந்தாலும் இன்றும் இனிமையாக ஒலிக்கின்றன மறைந்த கவிஞர் வாலி மற்றும் கங்கை அமரனின் பாடல் வரிகள்.

32 வருடங்கள் ஆயினும் என்றும் மனதில் நிற்கும் படங்களின் பட்டியலில் என்றும் நிலைக்கும் படம் `குங்குமச்சிமிழ்'.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close