Published:Updated:

ஆயிரம் படங்கள் நடித்த அல்லு ராமலிங்கையா! - டோலிவுட் ஹீரோக்களின் கதை! #KingsOfTollywood Part - 2 |

ஆயிரம் படங்கள் நடித்த அல்லு ராமலிங்கையா! - டோலிவுட் ஹீரோக்களின் கதை! #KingsOfTollywood Part - 2 |
ஆயிரம் படங்கள் நடித்த அல்லு ராமலிங்கையா! - டோலிவுட் ஹீரோக்களின் கதை! #KingsOfTollywood Part - 2 |

சென்ற பாகத்தில் பார்த்த சிரஞ்சீவி குடும்ப நடிகர்கள்போல இந்தப் பாகத்தில் பார்க்கப்போவது, அல்லு குடும்பம் பற்றி. இந்த இரண்டு குடும்பங்களுக்கும் தொடர்பு உண்டு, சிரஞ்சீவி திருமணம் செய்துகொண்டது அல்லு குடும்பத்துப் பெண்ணைத்தான். ஆயிரம் படங்களுக்குமேல் நடித்த அபூர்வ நடிகர் அல்லு ராமலிங்கையாதான், இந்தக் குடும்பத்திலிருந்து முதலில் சினிமாவுக்கு வந்தவர். வாருங்கள், அல்லு குடும்பத்துக்குள் ஒரு விசிட் போகலாம்...

ஆரம்ப காலங்களில் அல்லு ராமலிங்கையாவின் ஆர்வம் இருந்ததெல்லாம் நாடகங்கள் மீதுதான். அந்த ஆர்வம் மெள்ள மெள்ள சினிமா மீது திரும்பியது.  `புட்டில்லு' படம் மூலம் அறிமுகமானவர், 1,016 படங்கள் நடித்து முடித்தார். முக்கால்வாசி படங்களில் காமெடி ரோல்தான். தெலுங்கில் பல நடிகர்களுக்கும் இவரது நடிப்பு இன்ஸ்பிரேஷன். சட்டென இவரை நினைவுப்படுத்தவேண்டுமென்றால்... ஷங்கர் இயக்கிய `காதலன்' படத்தை ரீவைண்ட் செய்து பாருங்கள். 

அதில் நக்மாவின் தெலுங்கு மாட்லாடும் தாத்தாவாக மனோரமாவுடன் நடித்திருப்பாரே அவர்தான் இவர். `பத்ம ஸ்ரீ' விருது வென்ற இவருக்கு, அல்லு அரவிந்த், சுரேகா, வசந்த லக்‌ஷ்மி, நவபாரதி என நான்கு பிள்ளைகள். இதில் சுரேகா, சிரஞ்சீவியைத் திருமணம் செய்துகொண்டது பற்றி முந்தைய பாகத்திலேயே பார்த்தோம். அல்லு அரவிந்த், சினிமாவில் ஆர்வாமாகி உள்ளே நுழைந்தார். நடிகராக அல்ல தயாரிப்பாளராக. 

டோலிவுட்டின் பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று, அல்லு அரவிந்தின் `கீதா ஆர்ட்ஸ்'. சிரஞ்சீவியின் பல வெற்றிப் படங்களைத் தயாரித்தது, அல்லு அர்ஜுன், ராம் சரண் ஆகியோருக்கு அடையாளம் கொடுத்தது என, குடும்பத்துக்காகவே பல படங்களை இந்த நிறுவனத்தின் மூலம் தயாரித்தார் அரவிந்த். தெலுங்கில் மட்டும் அல்ல தமிழில் ரஜினிகாந்த் நடித்த `மாப்பிள்ளை' படத்தைத் தயாரித்தது, விஜய் நடித்த `நினைத்தேன் வந்தாய்' படத்தை வெளியிட்டது, இந்தியில் அமீர் கான் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி பெத்த ஹிட்டடித்த `கஜினி' படம் தயாரித்ததும் கீதா ஆர்ட்ஸ்தான். சினிமா நடிகர் இருந்த, சினிமாக்கள் உற்பத்தியாகிற இடத்திலிருந்து இன்னொருவர் நடிக்க வராமலா இருப்பார்?

வந்தார், அல்லு அர்ஜுன். சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருந்தார். ஹீரோவாக நடிக்கும் முன் ட்ரையல்ஸ் பார்ப்பதுபோல ஒரு படத்தில் கேமியோ ரோலிலும் நடித்தார். பிறகு, ஹீரோவாக அறிமுகமான படம்தான் `கங்கோத்ரி'. படம் எதிர்பார்த்த அறிமுகத்தைக் கொடுக்கவில்லை என சோர்ந்தபோது, அல்லு அர்ஜுனிடம் `ஆர்யா' (தமிழில் `குட்டி' ஆக ரீமேக் ஆனது) கதையுடன் வந்தார் சுகுமார். `ஃபீல் மை லவ்' என படம் பார்த்த ரசிகர்கள் சிலிர்த்துக்கொண்டார்கள். தொடர்ந்து வரிசையாக ஐந்து படங்கள் ஹிட்டானாலும் `Bunny' என்ற செல்லப்பெயரில் ரசிகர்கள் மனதில் செட்டிலானார் அல்லு அர்ஜுன். வழக்கமாக இழுத்து இழுத்துப் பேசும் டெம்ளேட் டயலாக் டெலிவரியைக் கொஞ்சம் மாற்றி நடித்ததில், பவன் கல்யாணுக்கு ஒரு பங்கு உண்டு. சண்டைக்காட்சிகளில்கூட விரைப்பாக நிற்காமல், அநாயசமான பாடி லாங்வேஜ் அவரின் அடையாளமாக மாறியது. அதேபோல் துறுதுறுப்பான நடிப்பில் கவர்ந்தவிதத்தில் அல்லு அர்ஜுனையும் ரசிகர்களுக்குப் பிடித்துப்போனது. ஜிக்ஜாக்போல ஒரு படம் வெற்றியடைவதும், இன்னொரு படம் தோல்வியடைவதுமாக கிராஃப் சென்றது அல்லு அர்ஜுனுக்கு. கரியரின் உச்சத்திலிருந்தபோது அர்ஜுனின் தம்பி சிரிஷ் நடிக்க ரெடியானார். 

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது சிரிஷுக்கு. ராதாமோகன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு பைலிங்குவலாக உருவான அந்தப் படம் `கௌரவம்'. அதன் பிறகு, `கொத்த ஜன்தா', `ஸ்ரீரஸ்து சுபமஸ்து' படங்களிலும் நடித்தார். அல்லு அர்ஜுனுக்குக் கிடைத்த வரவேற்புபோல் இல்லை என்றாலும், நடிகராக பட லிஸ்ட் அத்தனை மோசமில்லை. கூடவே, மோகன்லால் உடன் நடித்த `1971: பியாண்ட் பாடர்ஸ்' படத்தில் இவரின் கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அல்லு குடும்பத்திலிருந்து இனிவரும் படங்கள் அதிரிபுதிரி ஹிட்டடிக்க வாழ்த்துகள்.

அடுத்த பகுதியில் இன்னொரு குடும்பம் பற்றிப் பார்க்கலாம்!

- இங்க்க உந்தி!