"கோயிலுக்குப் போனா தரிசனம் கிடைக்கும்... ஆனா, எனக்கு விநாயகரே கிடைச்சார்!" கலா மாஸ்டர் சென்டிமென்ட் | Kala Master Speaks about Ganesh Chaturthi

வெளியிடப்பட்ட நேரம்: 11:31 (25/08/2017)

கடைசி தொடர்பு:11:31 (25/08/2017)

"கோயிலுக்குப் போனா தரிசனம் கிடைக்கும்... ஆனா, எனக்கு விநாயகரே கிடைச்சார்!" கலா மாஸ்டர் சென்டிமென்ட்

கலா மாஸ்டர்

``கோயிலுக்குப் போனா பிரசாதம், அமைதி, புண்ணியம்தான் கிடைக்கும். ஆனா, எனக்கு கடவுளே கிடைச்சார். எங்க குடும்பத்தாருக்கு வழிகாட்டியா இருக்கும் விநாயகர் வந்த பிறகுதான், எனக்கு அர்த்தமுள்ள வாழ்க்கையும் வளர்ச்சியும் கிடைச்சுது" - நெகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் பேசுகிறார் கலா மாஸ்டர். விநாயகர் சதுர்த்தியையொட்டி, தன் வீட்டில் இருக்கும் விநாயருக்காக ஷாப்பிங் வேலைகளில் பிஸியாக இருப்பவர், விநாயகர் பற்றிய தன் சென்டிமென்ட் விஷயங்களைப் பகிர்கிறார்.

கலா மாஸ்டர்

``சின்ன வயசுல இருந்து விநாயகர்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா, வேலையில பிஸியா இருந்ததால பெரும்பாலும் அவரோடு நேரத்தைச் செலவழிக்க மாட்டேன். ஆனா, அடிக்கடி விநாயகர் கோயிலுக்குப் போவேன். 12 வருஷங்களுக்கு முன்னாடி, நவராத்தி சமயத்துல காளிகாம்பாள் கோயிலுக்குப் போனேன். அங்கே, அழகான விநாயகர் சிலையை எண்ணெய்க்குள்ளே வெச்சு, சாமி ஒருத்தர் பூஜை செய்துக்கிட்டிருந்தார். `இந்த விநாயகர் எங்கே போகப்போறார்?'னு பக்கத்துல இருந்தவங்க அந்தச் சாமிகிட்ட கேட்டாங்க. `நவராத்திரி முடியிற சமயத்துல, ஒரு வி.ஐ.பி வீட்டுக் கல்யாண மண்டபத்துக்குப் போகப்போறார்'னு அவர் சொன்னார். `விநாயகர் ரொம்ப அழகா இருக்காரே. இவர் போகும் வி.ஐ.பி வீடும் வி.ஐ.பி-யும் கொடுத்துவெச்சவங்க'னு நினைச்சுட்டு நான் வந்துட்டேன்.

கலா மாஸ்டர்

சரியா நவராத்திரி முடியிற சமயம், அந்தக் கோயிலுக்குப் போனேன். அந்த வி.ஐ.பி கல்யாண மண்டபத்துக்கு விநாயகரை ஒரு வண்டியில் ஏற்றும் வேலையில தீவிரமா இருந்தாங்க. அப்போ ஒரு குழந்தை, `இந்தச் சிலை, கலா மாஸ்டர் வீட்டுக்குப் போகுதா?'னு அந்தச் சாமியைப் பார்த்து எதேச்சையாகக் கேட்க, அவர் என்ன நினைச்சார்னு தெரியலை. திடீர்னு, நான் கார் ஏறும் சமயத்துல, `விநாயகரை கலா வண்டியில வைங்க'னு சொல்லிட்டார். எனக்கு ரொம்ப வியப்பா இருந்துச்சு. நான் ஒண்ணுமே புரியாம திகைச்சு நிற்க, `இவர் உன் வீட்டுக்கு வர்றதுதான் பொருத்தமா இருக்கும். இனி உன் வாழ்க்கையே மாறும்'ங்கிற மாதிரி அவர் கண் அசைவிலேயே சொன்னார். மேலும், `விநாயகரை, ஏற்கெனவே ஒரு வி.ஐ.பி-க்குக் கொடுக்க முடிவுசெய்திருந்தீங்களே?'னு நான் கேட்க, `அவருக்கு புது விநாயகரை அனுப்பிடுறேன். அந்தக் குழந்தை சொன்னது, கடவுளே சொன்னதுபோல நினைக்கிறேன். நீ கிளம்பு'னு அந்தச் சாமி சொன்னார். நானும் சந்தோஷமா புது குடும்ப நபரை அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்து, கோயில் செட்டப்ல அவரை பிரதிஷ்டை செஞ்சு, வழிபட ஆரம்பிச்சேன்" என்பவருக்கு விநாயகர் வீட்டுக்கு வந்ததும் வாழ்வில் நிறைய மாற்றங்கள் நடந்ததாகக் கூறுகிறார்.

கலா மாஸ்டர்

``எங்க வீட்டுக்கு விநாயகர் வந்த சமயத்துலேயிருந்து, அவர்தான் குடும்பத்தின் வழிகாட்டி. அவர்கிட்ட கேட்காம, எந்த முக்கியமான முடிவுவையும் எடுக்க மாட்டேன். குறிப்பா, விநாயகர் வந்த பிறகு என்னோட வாழ்க்கை வெற்றி உயரங்களை நோக்கிப் போச்சு.  அதுவரை வெறும் டான்ஸ் மாஸ்டராவே வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தவ, நிறைய புதுப்புது நிகழ்ச்சிகள் செய்தேன். திருமணமாகி, அன்பான கணவர் கிடைச்சார். அற்புதமான குழந்தை, பெற்றோரைப்போல மாமனார்-மாமியார் கிடைச்சாங்க. `மானாட மயிலாட' நிகழ்ச்சி உள்பட நிறைய நிகழ்ச்சிகள், நிகழ்ச்சி இயக்குநர்னு பல அவதாரங்களை எடுத்து வெற்றிபெற்றேன். வசதி வாய்ப்புகள் பெருகுச்சு. தினமும் இவரை கும்பிடாம வீட்டைவிட்டுக் கிளம்ப மாட்டேன். வெளியே போயிட்டு வீடு வந்ததும், முதல்ல பார்க்கிற நபரும் இவரே. வெளியூர் எங்கே போனாலும் என் மனசு இவரையே நினைச்சுக்கிட்டிருக்கும். அதனாலேயே வலது கையில அவரோட உருவத்தை பச்சைக் குத்திக்கிட்டேன். அதனால அவர் எல்லா நேரத்துலயும் என்கூடவே இருப்பார்.

அடிக்கடி வீட்டுல இருக்கிற விநாயகரை நினைச்சு, நாள் முழுக்க மெளனவிரதம் இருப்பேன். அப்புறம் டான்ஸ் மற்றும் மற்ற நிகழ்ச்சி வேலைகள்ல கொஞ்சம் சிரமம் ஏற்படவே, வீட்டுக்கு வந்த பிறகு மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை விரதம் இருப்பேன். அப்போ, என்னை அறியாம விநாயகர்னு சொல்லிப் பேசிடுவேன். அதனால, பெரும்பாலும் வீட்டுல மெளனவிரதம் இருக்கும்போது வாயில் பேண்ட்டேஜ் ஒட்டிக்குவேன். பார்க்கிறவங்க சிரிப்பாங்க. அதையெல்லாம் நான் பெருசா எடுத்துக்க மாட்டேன். `ஒருநாள் முழுக்கப் பேசாமல் இருப்பதால், பத்து வருஷம் ஆயுள் கூடும்'னு சொல்வாங்க. ஆனா, என்னோட விநாயகரை நினைச்சு மெளனவிரதம் இருக்கிறப்போ, என் மனசு ரொம்பவே அமைதியாகிடும். தொடர்ந்து வேலையில சிறப்பா கவனம் செலுத்த முடியும்" என்பவர் வீட்டில் எக்கச்சக்க விநாயகர் சிலை கலெக்‌ஷன்களை வைத்திருக்கிறார்.

கலா மாஸ்டர்

``எனக்கு விநாயகரை ரொம்பப் பிடிக்கும் என்பதால், பலரும் சின்னச் சின்ன விநாயகர் சிலை மற்றும் அவர் சார்ந்த பொருள்களை கிஃப்டா கொடுப்பாங்க. குறிப்பா, போன வருஷம் வேலன்டைன்ஸ் டே அன்னிக்கு கேரளாவுக்குப் போய் எனக்காக நடன விநாயகரை வாங்கிட்டு வந்து கணவர் மகேஷ் கிஃப்ட் பண்ணினார். அது என்னால மறக்கவே முடியாது. தவிர, வெளியூர் போகும் இடங்களில் கிடைக்கும் வித்தியாசமான விநாயகர் சிலைகளை வாங்கிட்டு வருவேன். அப்படி இப்போ என் வீட்டுல நிறைய விநாயகர் கலெக்‌ஷன்ஸ் வெச்சிருக்கேன்.

ஒவ்வொரு வருஷமும், விநாயகர் சதுர்த்திதான் எனக்கு தீபாவளி. விநாயகர் சதுர்த்திக்கு ரெண்டு வாரங்களுக்கு முன்னாடியே பூஜைக்கும், அவரோட அலங்காரத்துக்கும் செமயா ஷாப்பிங் செய்வேன். தவிர, எங்கே போனாலும் அவருக்குன்னு தனியா ஷாப்பிங் செஞ்சு, தினமும் அவருக்கு வெரைட்டியான டிரஸ்ஸை அணிவிப்பேன். அப்படி விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு அவரைக் குளிப்பாட்டி, அலங்காரம் செஞ்சு, புது டிரெஸ் அணிவிச்சு, நகைகள் போட்டு, சிறப்பு உணவு வகைகளை எல்லாம் வெச்சு படையல் போட்டு பூஜை செய்வேன். அதனால அன்னிக்கு முழுக்க எங்க வீடே ஜெகஜோதியா இருக்கும். வீட்டுக்கு நிறைய கெஸ்ட் வந்தும், விநாயகர் சதுர்த்தியை சிறப்பிப்பாங்க. மறக்காம நீங்களும் இந்த வருஷம் எங்க வீட்டுக்கு வந்திடுங்க" என்று நம்மை வரவேற்று புன்னகைக்கிறார் கலா மாஸ்டர்.

படங்கள் : ரா.வருண் பிரசாத்


டிரெண்டிங் @ விகடன்