Published:Updated:

‘என் பொண்ணு, பிள்ளையாரை கடலில் கரைக்க விட மாட்டா!’ அனிதா குப்புசாமி #VinayagarChaturthi #GaneshChaturthi

‘என் பொண்ணு, பிள்ளையாரை கடலில் கரைக்க விட மாட்டா!’ அனிதா குப்புசாமி #VinayagarChaturthi #GaneshChaturthi
‘என் பொண்ணு, பிள்ளையாரை கடலில் கரைக்க விட மாட்டா!’ அனிதா குப்புசாமி #VinayagarChaturthi #GaneshChaturthi

கிராமியப் பாடல்கள் வழியே பல வருடங்களாக நம் உள்ளத்தைக் கொள்ளைகொண்டவர்கள் அனிதா மற்றும் குப்புசாமி. அனிதாவுக்குப் பிள்ளையார்தான் செல்லக் கடவுள். எந்த ஒரு செயலுக்கு முன்பும், பிள்ளையாரை வணங்கிவிட்டு ஆரம்பிப்பது அவருடைய வழக்கம். விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக அவருடைய பிள்ளையார் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். 

“எங்க குடும்பத்தில் எல்லோரும் முதலில் வணங்குவது பிள்ளையாரைத்தான். எங்க சின்னப் பொண்ணு நேஹாவுக்கு பிள்ளையார்னா அவ்வளவு விருப்பம். வீட்டில் பூஜை செய்யும்போது பக்கத்தில் வந்து உட்காந்துப்பாங்க. வீடு முழுக்க பல வகை பிள்ளையார்கள் இருக்கு. கிஃப்ட் கொடுக்கிறவங்களில் பலரும் பிள்ளையாரைத்தான் கொடுப்பாங்க. திருமணம் ஆகப்போகும் பெண்கள் மற்றும் நீண்ட நாள்களாகத் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களின் வீட்டுக்குப் பிள்ளையார் பொம்மையைப் பரிசாக கொடுக்கலாம். ‘வீட்டுக்குப் பிள்ளையார் வந்தால், தடையின்றி கல்யாணம் நடக்கும்’ என்கிற ஐதீகம் இருக்கு. 

அதேமாதிரி எந்த காரியத்தை ஆரம்பிக்கும்போதும் முதலில் வணங்குவது பிள்ளையாரைத்தான். அவர்தான் முழு முதற்கடவுள். பஞ்சமுகப் பிள்ளையார், மிருகதப் பிள்ளையார் போன்றவை எங்க ஃபேவரைட். மெட்டல், சில்வர் எனப் பல பிள்ளையார் எங்கள் வீட்டில் இருக்கு. நாங்கள் கச்சேரியில் முதலில் ஆரம்பிப்பது பிள்ளையார் ஸ்லோகன் பாடலைத்தான். விநாயகரைப் போற்றி இரண்டு, மூன்று பாடல்களைப் பாடினப் பிறகே மற்ற பாடல்களை பாடுவோம். என் கணவர் பாடின பிள்ளையார் ஸ்லோகனைத்தான் என் போனின் ரிங்க்டோனாக வெச்சிருக்கேன். யாழ்ப்பாணத்தின் நீர்வேலி பிள்ளையாருக்காக, நான் பாடிய பாடல் எங்களுக்கு எப்போதும் ஸ்பெஷல். சென்னை, மயிலாப்பூரில் இருக்கும் வரசக்தி விநாயகர், எங்க வீடு இருக்கும் ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் இரட்டைப் பிள்ளையார் ஆகியவை நான் அடிக்கடி சென்று வணங்கும் கோயில்கள்'' என்ற அனிதா குப்புசாமி, தனது விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் பற்றியும் சொன்னார். 

விநாயகர் சதுர்த்திக்குப் படைக்கப்படும் கொழுக்கட்டை, சுண்டல்களோடு, விழாம்பழம் போன்ற ஐந்து வகைப் பழங்களை வைத்துப் படைப்போம். எங்க இரண்டு மகள்களும் ரொம்ப குஷியோடு கடைக்குப் போய் பிள்ளையாரை வாங்கிட்டு வருவாங்க. விநாயகர் சதுர்த்தி முடிந்த மூன்றாவது நாள், பிள்ளையார் சிலையை கடலில் கொண்டுபோய் கரைப்போம். மூன்றாவது நாள் முடியவில்லைன்னா, பதினோராவது நாள்தான் கரைப்போம். என் சின்னப் பொண்ணுக்குத்தான் பிள்ளையாரை கரைக்கவே மனசு வராது. எனக்கு ஞாபகம் தெரிஞ்சு அப்போதெல்லாம் பிள்ளையாரை கரைக்க விருப்பமில்லாதவங்க, அரச மரத்தடியில் வெச்சுடுவாங்க. படமாக வைத்திருப்பதைவிட சிலையாக வைத்திருக்கும் பிள்ளையாருக்குக் கோயில் சிலைக்குச் செய்யும் பூஜைகளை முறையாகச் செய்யணும். அப்படி இருந்தால்தான் வீட்டில் வெச்சுக்கலாம். அதனால்தான், ஆறு அல்லது கடல் போன்ற நீர்நிலையில் கரைச்சுடறாங்க'' என்றவர், தொடர்ந்து பிள்ளையாருடனான அன்பைப் பகிர்கிறார். 

“எங்க வீட்டில் எந்தப் பூஜையாக இருந்தாலும் நான்தான் செய்வேன். காலையில் எழுந்ததும் குளிச்சுட்டு, பூஜை அறைக்குப் போய் நின்னால்தான் அன்றைய நாளை நல்லபடியா ஆரம்பிச்சு இருக்கிற உணர்வு ஏற்படும். பூஜையை முடிச்சதும் பிள்ளையார் பாடல்களை டேப் ரெக்கார்டரில் போட்டுடுவேன். 'பிள்ளையாரே பிள்ளையாரே பிடிச்சு வெச்சப் பிள்ளையாரே' என்ற பாடலை முணுமுணுத்துட்டே இருப்பேன். இந்தப் பாட்டில் கல்யாணம் சீக்கிரம் நடக்கணும்னு சொல்ற வார்த்தைகள் வரும். அதனால், திருமணம் தள்ளிப் போய்ட்டு இருக்கிறவங்க இதைப் பாடலாம். மார்கழி மாதத்தில் வாசலில் கோலம்போட்டு, பிள்ளையார் செஞ்சு பூவும் வைப்பாங்க. பெரும்பாலும் கன்னிப் பெண்கள்தான் இதைச் செய்வாங்க. முப்பது பிள்ளையார்கள் சேரும்போது கன்னிப் பொங்கல் வைப்பாங்க. அதாவது, தை மாசப் பொங்கல். அப்புறம் அந்தப் பிள்ளையார்களை ஆற்றில் கரைப்பாங்க. இப்படிச் செய்தால், சீக்கிரமே திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கு” என்கிறார் அனிதா குப்புசாமி.