Published:Updated:

நண்பன் அஜித்துக்கு ஒரு வேண்டுகோள்! - 'விவேகம்' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
நண்பன் அஜித்துக்கு  ஒரு வேண்டுகோள்! - 'விவேகம்' விமர்சனம்
நண்பன் அஜித்துக்கு ஒரு வேண்டுகோள்! - 'விவேகம்' விமர்சனம்

நண்பன் அஜித்துக்கு ஒரு வேண்டுகோள்! - 'விவேகம்' விமர்சனம்

தமிழ்நாடு, இந்தியா இப்போது இண்டெர்நேஷனல் என கதைக்களத்தில் அடுத்தடுத்த நகர்ந்த அஜித் - சிவா டீம், அவுட்புட்டில் அதை சாதித்திருக்கிறதா?  


பல்கேரியாவில் கவுன்டர் டெரரிஸ்ட் ஸ்குவாட் ஏஜென்ட் ஏ கே (அஜய் குமார்). தேட முடியாதவர்களைக் கண்டுபிடிப்பது, கொல்ல முடியாதவர்களை தேடிக் கொல்வதில் ஸ்பெஷலிஸ்ட் (280 மிஷன் அதில் 279 ஆன் டார்கெட்). அஜித்தின் உயிர் நண்பன் மற்றும் டீம் மேட்  ஆர்யன் (விவேக் ஓபராய்). உலகின் மூன்று இடங்களில் செயற்கை நிலநடுக்கத்தை உண்டாக்கி அழிக்கக்கூடிய ஆயுதத்தை செயலிழக்கச் செய்யும் அசைன்மென்ட் அஜித் டீமிடம் வருகிறது. அதற்காக நடாஷா என்கிற பெண்ணைக் கண்டுபிடிக்க கிளம்புகிறார். ஆயுதத்தை செயழிக்கச் செய்யும் டீக்ரிப்ஷன் ட்ரைவையும் கைப்பற்றுகிறார். ஆனால், நம்பிய ஒருவர் முதுகில் குத்தி துரோகம் செய்ய.... அடுத்து என்ன?  பழிவாங்கல்... தலை விடுதலை... சர்வைவாதான். 

அஜித் தன் மீதான எதிர்பார்ப்பை எந்த விதத்திலும் குறைவில்லாமல் வழங்கி இருக்கிறார். கவுன்டர் டெரரிஸ்ட் ஸ்குவாடைச் சேர்ந்தவர் என்பதை நம்பும் அளவுக்கான உடலமைப்பைக் கொண்டு வந்தது, ஆக்‌ஷன், பைக் சேஸ், பனிக் காட்டில் ரிவென்ஜுக்கு தயாராவது என படத்திற்காக அஜித் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார் (படம் முடிந்த பின் மேக்கிங் காட்சிகளைப் பார்க்கவும்). சில நிமிடங்களே வந்து போனாலும் அக்‌ஷரா ஹாசன் கதாபாத்திரம் கவனிக்க வைக்கிறது. பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் அக்‌ஷராவுக்கு தமிழில் இது ஒரு நல்ல அறிமுகம். அவருக்கான ஓப்பனிங் சீனும் சூப்பர். காஜல் அகர்வாலுக்கு குடும்பப் பாங்கான, உணவகம் நடத்தும், பாட்டு க்ளாஸ் எடுக்கும் வேடம். எந்த குறையும் இல்லாமல் அதை முடித்திருக்கிறார் காஜல். ஆனால், அக்‌ஷரா காஜலுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் கூட விவேக் ஓபராய்க்கு இல்லை.காஜலை விடவும் அஜித்தை அதிகமாக லவ்வுகிறார் விவேக் ஓபராய். வருகிறார், அஜித் எப்படியாப்பட்டவர் தெரியுமா எனப் பேசுகிறார். மறுபடி வருகிறார் அஜித் அப்படியாப்பட்டவர் என சொல்கிறார். படம் முழுக்க இது மட்டும்தான் அவருக்கான வேலை. 
 

படத்தின் தரத்தை கூட்டும் அளவு அனிருத்தின் பின்னணி இசை ஒலிக்கிறது.ஆனால் பாடல்கள் ஏனோ காதைப் பதம் பார்க்கின்றன. படத்திற்கு ஓரளவு வேகம் சேர்த்து பரபரப்பாக்குகிறது ரூபனின் படத்தொகுப்பு. விதவிதமான லொக்கேஷன்கள், பெரும்பாலும் லைவ் லொகேஷன்களில் காட்சிப்படுத்திய ஒளிப்பதிவாளர் வெற்றியின் உழைப்பு குறிப்பிடத்தக்கது. காலோயன் வொடெனிசரோவ் மற்றும் கணேஷ் வடிவமைத்திருக்கும் சண்டைக்காட்சிகள் நேர்த்தியாக இருந்தது. குறிப்பாக பைக் சேசிங், இருபுறமும் ரயில் ஓடிக் கொண்டிருக்க நடுவில் நடக்கும் சண்டைக்காட்சி போன்றவை சிறப்பு. ஹைடெக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் அலுவலகம், பயன்படுத்தும் ஆயுதங்கள் முதற்கொண்டு எல்லாமும் நம்பும்படியான தோற்றத்தில் தந்திருக்கும் மிலனின் கலை இயக்கமும் குறிப்பிட வேண்டியது. 
 


பல நூறு கோடிகள் கொட்டி படங்கள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், 100 கோடிக்குள் ஒரு மாஸ் ஹீரோ படத்தை தரமானதாகக் கொடுக்க முடியும், அதன் அவுட் புட் சர்வதேச தரத்திலும் தர முடியும் என நிரூபித்த விதத்தில் தமிழ் சினிமாவின் மார்கெட்டை அடுத்த தளத்துக்கு எடுத்து செல்லும் முயற்சியாகப் பார்க்கலாம். அதே வேளையில் இந்தப் படத்தை வெளிநாட்டில் எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதும் தோன்றாமல் இல்லை. ஹாலிவுட் படம் போல் அதிரடியாய் இருக்கும் ஒரு படம், குடும்பக் காட்சிகளில் சிக்கி , பின் மீளமுடியாத நிலைக்கு செல்கிறது. 
 


 "எண்ணம் போல் வாழ்க்கை நண்பா", "நட்ப சந்தேகப்படக்கூடாது, சந்தேகப்பட்டா அது நட்பே கிடையாது", "அவர்கூட உழைச்ச உனக்கே இவ்வளவு இருக்குன்னா... அவர்கூட பொழைச்ச எனக்கு எவ்வளவு இருக்கும்" என பிலோ ஆவரேஜ் வசனங்கள் ஸ்பீட் பிரேக். பன்ச் வசனங்கள் பேசினால் பரவாயில்லை பேசும் எல்லாமே பன்ச்சாக மட்டுமே இருந்தால் எப்படி? அதற்காக காதல் வசனங்களில் கூடவா, "உன்னோட இருக்கறது சந்தோஷம்ங்கறத விட, நீதான் என் சந்தோஷமாவே இருக்க" என்ற மாதிரி ரொமான்டிக் வசனங்கள் எல்லாம்...ஹ்ம்ம்.   ஹீரோயின், வில்லன் சமயத்தில் ஹீரோவைப்பற்றி ஹீரோவே புகழ்ச்சியாக சொல்லிக் கொள்ளும் வசனங்கள்... ஒரு கட்டத்துக்கு மேல் தாங்கமுடியவில்லை  நண்பா. வெறும் சண்டைக் காட்சிகள், ஹீரோவைப் புகழும் வசனங்கள் மட்டுமே இருந்தால் போரடிக்கும் என்று இடையிடையே கொஞ்சம் கதையும் என்ற சிவாவின் அதே டெம்ப்ளேட்டில் இந்தப் படமும். அதிலும் வழக்கம் போல் "நாஆஆஆஆன்... யாஆஆஆர்னு" என இழுத்து இழுத்துப் பேசும் மாஸ் வசனங்கள் எல்லாம் சோதிக்கிறது. ஒரு கட்டத்தில் அஜித் வாய்ஸும், வில்லன் வாய்ஸும் ஒரே மாதிரி ஒலிக்க ஆரம்பிக்கிறது. அந்த அளவுக்கு நண்ண்ண்ண்ண்பா... நண்ண்ண்ண்பா... என பேஸ் வாய்ஸில் பேசி அல்லு கிளப்புகிறார்கள். 
 


படத்தில் பல்கேரிய மொழி பேசும் காட்சிகளுக்கு ஸ்டைலிஷ் தமிழில் டப்பிங் கொடுக்கப்பட்டிருக்கும். அதுவே அல்பேனிய மொழிப் பெயர்ப்புக்கு மட்டும் அருமைப் பிரகாசம் (கருணாகரன்) இருப்பார். அதற்கும் அதே தமிழ் டப்பிங் ஐடியாவைப் பயன்படுத்தியிருந்தால் காமெடி என்கிற பெயரில் ஆடியன்ஸ் அவஸ்தை பட தேவையிருந்திருக்காது. படம் முழுக்க டைமிங்குடன் தொடர்புடையது என்றிருந்தார் இயக்குநர். ஆம், வாட்ச் டைமிங் வைத்து ஓப்பனிங் சீனில் அணையிலிருந்து குதிக்கிறார், போனை வைத்து ட்ராக் செய்து விடுவார்கள் என 29 செக்கண்டில் கட் செய்கிறார், மூணு மணிநேரத்தில் திரும்பிவிடுவேன் எனச் சொல்லி க்ளைமாக்ஸ் ஃபைட்டுக்குக் கிளம்புகிறார். என்ன டைமிங்...!
 


க்ளைமாக்ஸுக்கு முன் வில்லனுக்கும் அஜித்துக்குமான அந்த உரையாடல், அஜித்தின் அடுத்த மூவை வில்லன் கணிப்பது, வில்லனின் மூவை அஜித் கணிப்பது என அந்த விறுவிறு ஆட்டம் சுவாரஸ்யமான ஒன்று. கூடவே, அல்பேனியன் கேங் உடன் மோதும் அந்த காட்சி மாஸ் ஏற்றுகிறது. ரிவர்ஸ் ஹேக்கிங், மோர்ஸ் கோட், அல்ட்ரா வைலட் ஜாமர், அக்‌ஷராவின் ஹேக்கிங் டிவைஸ் எனப் பல டெக்னிகல் விஷயங்கள் படத்தில் மிரட்டுகிறது. ஜேம்ஸ்பாண்டு கதையில் செண்டிமெண்ட்டை அனபாண்டு கொண்டு ஒட்டும் முயற்சி சரிதான். ஆனால், ஒட்டுதலில்தான் பிரச்னை. யோசிக்க கூடாத விறுவிறுப்பு ஒரு கட்டத்தில் சுமையாகி போகிறது. அந்த புள்ளியை கணித்து இலக்கை மாற்றியிருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும். ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டால் முகம் மாறும் ஓகே... உயரம் கூடவா மாறும், அத்தனை மிஷன்களை முடிக்கும் ஏ கே பற்றி அதே துறை சேர்ந்த உயர் அதிகாரிக்குத் தெரியாமல் இருக்குமா என சில குறைகள் கூட ரசிகர்களுக்கான படம் என்பது மறக்க வைக்கிறது. ஆனால், அஜித் ரசிகர்கள் மட்டும் கைதட்டி, விசில் அடித்தால் போதுமா?!

அஜித் எப்படிப்பட்ட படத்தில் நடித்தாலும் அவருடைய ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது ஓ.கேதான். அதற்காக உங்களுடைய  ரசிகர்களுக்காக மட்டுமே நடித்துக் கொண்டிருப்பது சரிதானா நண்பா அஜித்?!

அடுத்த கட்டுரைக்கு