Published:Updated:

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ பராக், பராக்...!

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ பராக், பராக்...!
‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ பராக், பராக்...!

2006-ம் வருடம், சென்னையில் ஒருநாள் காலைப்பொழுதில் பேருந்தில் சென்றுக்கொண்டிருந்தேன். முதலில் வேகமாக ஒருசில நொடி கவனத்தைப் பெற்ற அந்த போஸ்ட்டரை, மீண்டும் பார்க்கும் ஆவல். கொஞ்சம் இடைவெளிவிட்டு அது கண்ணில் பட்டபோது பேருந்தின் வேகத்தில் `இப்போதும் நாம் பார்த்தது அதுதானா?' என்ற சந்தேகத்தைக் கொடுத்தது. என் சந்தேகத்தை ஊர்ஜிப்பதுபோல் பின் இருக்கையில் ஒரு பாட்டியின் சிரிப்புச் சத்தம். “ஏங்க... இவன் படத்துல வருவானே அந்த வடிவேலுதானே?” அந்தப் பாட்டியின் கேள்வியும் சந்தேகமும் எனக்கும் ஒட்டிக்கொள்ள இன்னும் கண்களை அகலமாகத் திறந்துக்கொண்டு அடுத்த போஸ்டருக்குக் காத்திருந்தேன்.

சென்னையின் புதுப்படங்களின் தகவல்களை உடனுக்குடன் அறிய தரும் போஸ்டர்கள், முதன்முதலில் ஒட்டப்படும் பிரத்யேக இடங்களில் குறிப்பிடத்தக்கவை கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் ஏரியாவும், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கலைக் கல்லூரி எதிர்பக்கம் உள்ள சுவரும்தான். அங்கே ஒட்டப்பட்ட  சினிமா போஸ்டர்களில் பாதிக்குமேல் வெளிவராமல்கூட போகலாம். ஆனால், போஸ்டர் வந்தே தீரும். போஸ்டர் ஒட்டுதல் என்பது ஒரு கலை. தொடர்ச்சியாக இருபது போஸ்டர்களை ஒட்டி மீண்டும் மீண்டும் அதையே பார்க்கவைத்து மக்கள் மனதில் அட்டையாக ஒட்டவைக்கும் உத்தி அந்த போஸ்டர் ஒட்டும் சிறுவர்களையே சாரும்

அப்போது 17D-யில் பயணித்துக்கொண்டிருந்தேன். நான் நினைத்ததுபோலவே அந்தப் பிரத்யேகச் சுவரில் ஜகஜோதியாகக் காட்சியளித்தது வடிவேலுவின் `இம்சை அரசன் 23-ம் புலிகேசி'யின் போஸ்டர். கண்களை விரித்து கம்பீரமாக அமர்ந்திருக்கும் வடிவேலுவின் முகத்தில் நீண்ட மெல்லிய மீசையில் இருக்கும் பூவை பூ தானா என ஊர்ஜிதம் செய்வதற்கே அத்தனை நேரம் எடுத்தது எனக்கு. கண்களில் நீர் வழியும் அளவுக்கு வெகு நேரம் சிரித்துக்கொண்டே இருந்தேன். ஒரு படத்தில் “நாங்க எல்லாம் ஜோதிகா போஸ்டரையே மூணு மணி நேரம் பார்ப்போம்” என்று சத்யன் சொல்லியிருப்பார். அப்படித்தான் எனக்கு அன்று நடந்தது வடிவேலுவின் ஒரு போஸ்ட்டரே அன்று முழுவதும் பேச்சாக, கேள்வியாக, எதிர்பார்ப்பாக, சிரிப்பாக மாறியது. என்ன ஒரு கலைஞன்!! முதலில் ஏதோ மேடை நாடகத்திற்கான போஸ்டர் என தோன்றியது பிறகுதான், அது சங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ராஜா காலத்துக் கதை என்ற மீடியா விபரங்களில் தெரியவந்தது. படம் எப்படா ரிலீஸ் ஆகுமென்று காத்திருந்து போய் பார்த்த படம் அது

படத்தின் ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அருமையாக காட்சிப்படுத்தியிருப்பார், காமெடியில் கூட எத்தனை மெசேஜ்கள் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ”நூறு வருடங்கள் கழித்து வரும் மடையர்களுக்கு நான் எப்படி இருந்தேன் என்று தெரியவா போகிறது”. “வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே” என்ற வசனம் அதைக் கேட்கும் போதெல்லாம் பண்டைய அரசர்களின் முகங்கள் கொஞ்சம் தொங்கலாகத்தான் வந்து போகும், படம் முழுக்க வடிவேல் அடித்து ஆடியிருப்பார் படிக்கட்டுகளில் சறுக்கிக் கொண்டே இறங்குவது “தட்டானுக்கு சட்டை போட்ட...” என்று கேள்வி கேட்பது, புறாவுக்கு அக்கப்போரா என்பது, வெள்ளைக்கொடி ஏந்தி ஆடிக்கொண்டே எதிரிகள் முன் நிற்பது என படம் முழுக்க வயிறு வலிக்க காமெடிக் கலக்கல்தான்.

இன்றளவில் வடிவேலு சினிமாவிற்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இடைவெளியைக் கொடுத்திருந்த போதும் ட்விட்டர், ஃபேஸ்புக் என எத்தனை பெரிய ஜாம்பவான்களாக இருந்தாலும் வடிவேலுவைத் தொடாமல் ஒரு பஞ்ச் கூட அடிக்க முடியாது “என் இனமடா நீ”. “போர் ஆமாம் போர்.”

 “நான் அப்படிய்யே ஷாக் ஆயிட்டே”. “அது போன மாசம்”, ”ஆஹான்” ”மாப்பு வச்சிட்டாய்யா ஆப்பு” “போதும் இதோட நிறுத்திக்குவோம்” இப்படி எதற்கெடுத்தாலும் பதில் சொல்லும் விதத்திலும் எதிர் புறத்தில் உள்ளவரை கேலி செய்யும் விதமாகவும் ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்ட்டராக செயல்படுவது வடிவேலுவின் வசனங்கள்தான்

சமீபத்தில் இம்சை அரசன் 24ம் புலிகேசியின் முதல் போஸ்ட்டரைப் பார்த்த பிறகு மீண்டும் அதே உற்சாகம் தொற்றிக்கொண்டது கம்பீரமாக அமர்ந்திருக்கும் வடிவேலு வழக்கம் போல அதே மீசை, வெள்ளைப் பூ என காட்சியளித்தாலும் அவர் பின் சுவற்றில் மாட்டப்பட்டிருக்கு தட் கரடியே காறி துப்புன மோமெண்டின் கரடித் தலையும், வருங்கால சந்ததிகளுக்காக வரையப்பட்ட கம்பீர வடிவேலுவின் ஓவியமும் இரண்டாம் பார்ட்டுக்கு எதுவோ தகவல் சொல்வது போல் அமைந்துள்ளது வடிவேலுவின் சமீப கால தொய்வுகளை சரிகட்டும் விதமாகவும், வெறித்தனமாக வடிவேல் ரசிகர்களுக்கு இன்னும் நிறைய பஞ்ச் டயலாக்குகளை அள்ளித்தரும் விதமாகவும் இம்சை அரசன் அமைவார் என்று நம்புகின்றேன் அக்காமாலா, வரி கட்டுதல், சாதி விளையாட்டு என அக்கால அரசியலை கலந்து கட்டி அடித்த இயக்குநருக்கு இப்போது இருக்கும் அரசியல் சூழல் அள்ள அள்ள குறையாத வசனங்களை வாரித்தரும் என்பதால் சிம்புதேவன் இம்முறையும் வெற்றிக் கொடியை வெள்ளைக் கொடியாக்கி திரைக்கு வெளியே நீட்டுவார் என்று நம்புவோம்.