Published:Updated:

சினிமா டுடே..!

ந.ஆஷிகா, படங்கள்: பா.காளிமுத்து

சினிமா டுடே..!

ந.ஆஷிகா, படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:

தீபாவளி ரிலீஸ் படங்களின் விமர்சனங்கள் பட்டையைக் கிளப்பிட்டிருக்கிற நேரம் இது. இன்றைய சினிமா பற்றி விமர்சிக்கிறாங்க, மதுரை தியாகராசர் கல்லூரி மாணவிகள் சிலர்!

மதுமதி

''பேட்டை ரௌடி ஹீரோ, ஹேண்ட்ஸம் வில்லன், குத்துப் பாட்டு, கதையே இல்லாத காமெடி திரைக்கதை... இதுதான் இன்றைய சினிமாக்களோட பொது இலக்கணம். சினிமா என்பது எவ்வளவு பவர்ஃபுல்லான மீடியம்?! ஆனா, அதை ஒரு பாஸிட்டிவ் ஃபோர்ஸா பயன்படுத்த பெரும்பாலானவங்க நினைக்கிறதில்ல. நல்ல விஷயங்கள் சொல்லலைன்னாலும், கெட்ட விஷயங்களை சொல்லாமலாவது இருக்கலாம்தானே? இன்னிக்கு எந்தப் படத்தையும் குடும்பத்தோட சேர்ந்து பார்க்க முடியறதில்ல. கேட்டா, கமர்ஷியல் ஃபார்முலானு சொல்றாங்க. ஆனா, அந்த கமர்ஷியல் மிக்ஸுக்கும் இங்கே கற்பனை பஞ்சம். ஒரே மாவை அரைச்சு சலிக்க வைக்கிறாங்க. அதையும் மீறி, 'அட, நல்லாயிருக்கே!’னு ஒரு படத்தை நினைச்சா, அது வெளிநாட்டுப் படங்களோட வி.சி.டி திருட்டா இருக்கு. என்னமோ போங்க பாஸ்!''

சினிமா டுடே..!

விஷ்ணுப்பிரியா

''டெக்னாலஜிக்கலா தமிழ் சினிமாவின் வளர்ச்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. மல்லுவுட், சாண்டல்வுட், பாலிவுட்னு எல்லா இடங்களிலுமே நம்ம தமிழ் சினிமா டெக்னீஷியன்களுக்கு இருக்கும் மரியாதை, நமக்கான பெருமை. இசை, பாடல், திரைக்கதை, இயக்கம்னு நமக்கான தேசிய விருதுப் பட்டியல்களும் சந்தோஷம் தருவதாதான் இருக்கு. 'எந்திரன்’ல இருந்து ரிலீஸ் ஆகவிருக்கும் 'ஐ’ வரைக்கும், தமிழ் சினிமாக்களோட வியாபாரமும் ஜோர்தான். இந்த மாதிரி பெரிய வெற்றிகளுக்கு மத்தியில், சின்னச் சின்னக் குறைகளை ஏன் பெரிதுபடுத்தணும்? அதனால, ஐ ரெஸ்பெக்ட் கோலிவுட்!''

மனஸ்வினி  

''எல்லா படங்களிலும் பெண்களோட பாத்திரப்படைப்பு அதிர்ச்சி தரும் விதமாவே இருக்கு. முக்கியமா, 'லூசுப் பெண்’ ஹீரோயின், தமிழ் சினிமாவின் அடையாளமாவே போயிடுச்சு. தரமான இயக்குநர்களோட படங்களில் கூட ஹீரோ யினை ஊறுகாயாத்தான் பயன்படுத்துறாங்க. மரியாதைக்குரிய பெண் கதாபாத்திரங்கள், தமிழ் சினிமாவில் அத்திப்பூதான். போதாக் குறைக்கு, இப்போ எல்லா படங்களிலும் பெண்களைத் திட்டி ஒரு பாட்டு, மஸ்ட் ஆயிடுச்சு. 'அடிடா அவளை’, 'பொண்ணுங்களே இப்படித்தான்’னு கேவலப்படுத்துறாங்க, தாங்களும் கேவலப்பட்டுக்கிறாங்க! மாத்தணும்... இந்த டிரெண்டை மாத்தணும்!''

சினிமா டுடே..!

நிவேதிதா

''படத்துக்கு ஒரு 'டாஸ்மாக்’ சாங்... கொடுமையிலும் கொடுமை! சாராயம் குடிக்கிறது ஏதோ டீ, காபி போல இப்போ சகஜம் என்பது மாதிரியான தோற்றத்தை உண்டாக்குது தமிழ் சினிமா. 'சினிமா ஒரு என்டர்டெயின்மென்ட்... அதில் மெசேஜ் எதுவும் சொல்லத் தேவையில்லை...’னு சொல்லிட்டு எக்குத்தப்பா சீன்ஸ் வைக்கிறாங்க. ஆனாலும் அதன் மூலமா அவங்க சொல்ற மறைமுக மெசேஜ்... பெற்றோர்களுக்கு, 'நாளைக்கு உங்க பையனும் தண்ணி அடிச்சிட்டு வந்தா, அதில் அதிர்ச்சியாக எதுவும் இல்லை’ என்பதும், இளைஞர்களுக்கு, 'டாஸ்மாக், சோஷியலைஸ்டு டிரிங்கிங் இதெல்லாம் தப்பேயில்ல’ என்பதும்தான். ஒவ்வொரு படைப்பாளிக்கும் சமூகப் பொறுப்பு என்பது இருக்கணும்!''

ஹரிணி

''எப்படியெல்லாம் ஈவ் டீஸிங் செய்ய லாம், எப்படியெல்லாம் திருட்டுத்தனம் செய்யலாம், எப்படியெல்லாம் கொலை செய்யலாம், எப்படியெல்லாம் தற்கொலை செய்துகொள்ளலாம்... டிக்கெட் எடுக்கிற பாவத்துக்கு இதையெல்லாம்தான் டீட்டெய்ல்டா சொல்லிக் கொடுக்குது இன்றைய சினிமா. அதிலும் 'தாதா ஹீரோயிஸம்’, ரொம்ப டேஞ்சரஸ். முன்ன எல்லாம் நம்ம தமிழ் சினிமா ஹீரோக்கள் நேர்மையானவங்களா, உழைப்பாளிகளா, அன்பானவங்களா இருந்தாங்க. அதனால அந்த ஸ்டார்ஸோட ஃபேன்ஸும், ரியல் லைஃப்லயும் ஹீரோ இமேஜ் சேர்க்க நினைச்சவங்களும் நல்லவங்களா இருக்க முயற்சி பண்ணினாங்க. இப்போ, ரெண்டு பொண்ணுங்களை தில்லாலங்கடியா லவ் பண்றவனும், கொலை செய்துட்டு கெத்தா திரியுறவனும்தான் ஹீரோ நம்ம தமிழ் சினிமா ஸ்கிரீன்ல! விளைவு, நிஜ வாழ்க்கையிலும் இதெல்லாம் தப்பு என்ற மாரல் கொஞ்சம் கொஞ்சமா தேஞ்சுட்டே வருது. கிரெடிட் கோஸ் டு கோடம்பாக்க டைரக்டர்ஸ்!''