Published:Updated:

விவேகம்ல இதெல்லாம் கொஞ்சம் கவனிச்சிருக்கலாமே டைரக்டர் ஐயா!

தார்மிக் லீ
விவேகம்ல இதெல்லாம் கொஞ்சம் கவனிச்சிருக்கலாமே டைரக்டர் ஐயா!
விவேகம்ல இதெல்லாம் கொஞ்சம் கவனிச்சிருக்கலாமே டைரக்டர் ஐயா!

ஜித் படத்தை விஜய் ரசிகர்கள் கலாய்ப்பதும், விஜய் படங்களை அஜித் ரசிகர்கள் கலாய்ப்பதும் இயல்புதான். ஆனால் இரண்டு வருட காத்திருப்புக்குப் பிறகு வெளியான 'விவேகம்' படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அஜித் இந்தப் படத்தில் மெனக்கட்டிருக்கிறார் என்ற செய்தியைக் கேட்டதும் ரசிகர்கள் இங்கும் அங்குமாக குதித்தனர். சமூக வலைதளங்களில் அஜித்தின் உடல் அமைப்பு ஃபிட்டாக இருக்கும் சில புகைப்படங்களும் மெகா வைரல். அதற்காகவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு நெகட்டிவ் விமர்சனங்கள்தான் அனல் பறந்தது. படம் வெற்றியா தோல்வியா என்பதல்ல விவாதம். எந்தெந்த இடங்களில் எல்லாம் எதிர்பார்ப்பை மீறி ஏமாற்றியது என்பதுதான் மேட்டர்.

ஒரு இடத்துல கேமரா நிற்குதா பாரு? 

படத்தில் பலருக்கும் தெரியாமல் எரிச்சலூட்டியது கேமராதான். பொதுவாக எந்த ஒரு காட்சியும் மனதில் பதிய ஒரு 4 செகண்டாவது வேணும். இந்த விஷயத்தை ஹாலிவுட்டில் தகர்த்தனர். ஒரு செகண்டுக்கும் குறைவாக காட்சிகளை எடுத்து, ஹாலிவுட்டில் பிரமிக்க வைத்த படங்கள் ஏராளமாக உள்ளது. உதாரணத்திற்கு 'பார்ன் ஐடென்டிட்டி' படத்தைச் சொல்லலாம். கண் இமைக்கும் நேரங்களில் பல ஷாட்டுகளை கடக்கும் காட்சிகள் நம் கண்களுக்கு பெரிய விருந்தாகவே அமையும். அந்த முயற்சியை 'விவேகம்' படத்திலும் கையாண்டிருக்கிறார் சிவா. ஹாலிவுட்டில் வெறும் சண்டைக் காட்சிகளுக்கு மட்டும் பயன்படுத்தி வந்த இந்த டெக்னிக் இப்படத்தில் காதல் காட்சிகளிலும் இடம்பெற்றதுதான் பெரும் சோகம். ரொமான்ஸ் காட்சிகளிலும் கேமரா ஆடிக் கொண்டே இருந்தது பார்வையாளர்களுக்கு சற்று எரிச்சலூட்டியது. 

இடியாப்ப வசனங்கள் :

படத்தில் வசனங்கள் மிக முக்கியம். அஜித்தின் மிகப் பெரிய ப்ளஸ்ஸே அவரது குரல்தான். அவரது அந்த வாய்ஸில் சின்ன பன்ச் டயலாக்கைப் பேசினால் கூட ரசிகர்களுக்கு அதுதான் காலர் ட்யூன். 'விவேகம்' படத்தின் டீசர் வந்தபோது கூட அப்படித்தான். 'இந்த உலகமே உன்ன எதிர்த்தாலும்...' என்று இவர் பேசி வெளியான அந்த பகுதியைக் கட் செய்து பலரும் ரிங் டோனாகவும், காலர் ட்யூனாகவும் வைத்துக் கொண்டனர். ஆனால் படம் பார்த்தப் பிறகுதான் தெரியவந்தது, படம் முழுவதுமே அப்படித்தான் என்று. பொதுவாக 'காலையில சாப்டியா'னு கேள்வி கேட்டால் 'ஹ்ம்ம் சாப்டேன், சாப்பிடல' என்றுதான் பதில் வரும். இதே கேள்வியை அஜித்திடம் காஜல் கேட்டிருந்தால் 'இல்லம்மா, நிறைய பேர் சாப்பாடு இல்லாம கஷ்டப்பட்டு இருப்பாங்க, நான் மட்டும் எப்படி இங்க நிம்மதியா சாப்பிடுறது, இருந்தாலும் பரவாயில்லை எனக்கு பசிக்கிற ஒரே காரணத்துனால மட்டும்தான் நான் இப்போ சாப்பிடப்போறேன், நீ சாப்பாட்டை எடுத்து வைம்மா' என்றுதான் இடம்பெற்றிருக்கும். இந்த ரகத்தில்தான் படத்தின் ஒட்டுமொத்த வசனங்களுமே இடம்பெற்றிருக்கிறது. லொக்கேஷன், சண்டைக் காட்சி, பயன்படுத்திய தொழில்நுட்பங்கள் என பல விஷயங்கள் ஹாலிவுட் தரத்தில் இருந்தாலும் இடம்பெற்ற வசனங்கள் தெலுங்கு படங்களில் வருபவை போல இருந்ததால் யார் மனதிலும் ஒட்டாமல் இருந்தன. இது படத்துக்குப் பெரிய மைனஸ்.  

பன்ச் டயலாக்குகள் :

ரஜினி கமலில் ஆரம்பித்து, சிவகார்த்திகேயன், சிம்பு வரை அவரது படங்களில் பன்ச் டயலாக் கட்டாயம் இருக்கும். அஜித் படங்களிலும் அப்படித்தான். ஆனால் இடம்பெற்ற அனைத்து வசனங்களுமே பன்ச் டயலாக் கணக்காக இருந்தால் என்ன பாஸ் செய்ய? வில்லன் கேட்கும் கேள்விகளுக்கு கெத்தாக பன்ச் வசனங்கள் பேசி அரட்டினால் ஓகே. காஜல் அகர்வால் கேட்கும் கேள்விகளுக்கு எதுக்கு பாஸ் பன்ச் வசனங்கள்? அஜித்திடம் யார் என்ன கேள்வி கேட்டாலும், அவரிடம் அதற்கு பதில் வராது, பன்ச் டயலாக்தான் வரும். சரி அஜித்துக்கு மட்டும்தான் இப்படியென்று பார்த்தால், காஜல் அகர்வாலுக்கும் அதே லெவலில்தான் டயலாக்குகள் இருந்தது. ஒருவேளை இந்தக் காரணத்தினால்தான் இருவருக்கும் லவ் வந்தது என்று சிவா குறீயிடாக சொல்ல வருகிறாரோ? இப்படி மாறி மாறி பல இடங்களில் பன்ச் வசனங்களில் விளையாடியதுதான் பெரிய சோ(வே)தனை. 'படத்துல பன்ச் டயலாக் இருக்கலாம், ஆனா படமே பன்ச் டயலக்கா இருக்கக் கூடாது'. படம் பார்த்த பாதிப்புல நானும் பன்ச் பேசுறேனே!

க்ளைமாக்ஸ் பாடல் :

பொதுவாக க்ளைமாக்ஸ் பகுதிதான் ஒரு படத்துக்கு மிகப் பெரிய பலமே. ஒட்டுமொத்த படமுமே சொதப்பினாலும் க்ளைமாக்ஸை வைத்து தப்பிவிடலாம். சமீப காலமாக வரும் படங்கள் அனைத்துமே அந்த ரகம்தான். படம் முழுவதும் நன்றாக அமைந்து, க்ளைமாக்ஸ் பகுதி சொதப்பிவிட்டால் ஒட்டுமொத்த படமுமே சொதப்பிவிடும். க்ளைமாக்ஸ் பகுதியைப் பார்த்த அனைவருக்குமே 'தூள்' பட சண்டைக் காட்சியோ பழைய அம்மன் பட க்ளைமாக்ஸோ கண்டிப்பாக நினைவிற்கு வந்திருக்கும். தல படத்துக்கு இன்னும் சிறப்பா எதிர்பார்த்தோம் பாஸ்!

படம் வெளி வரும் முன்பே அஜித்தின் மெனக்கடல்களைப் பற்றிய செய்திகள் வெளிவந்தாலும், படம் முடிந்தவுடன் இடம்பெற்ற காட்சியின் மூலம்தான் இவரின் மெனக்கெடல் நூறு சதவீதம் என தெரியவந்தது. இதை சிவா சரியாக பயன்படுத்தியிருக்கிறாரா என்ற ஆதங்கம், அஜித் ரசிகர்கள் பலருக்கும் இருக்கிறது. இருப்பினும், அஜித்தின் மெனக்கெடலுக்காகவும், சிவாவின் ஹாலிவுட் தர முயற்சிக்காகவும் வாழ்த்துகள்.