Published:Updated:

தெலுங்கு சினிமாவின் புதுக்கவிதை! முரட்டு தேவதாஸான `அர்ஜுன் ரெட்டி' படம் எப்படி?

பா.ஜான்ஸன்
கார்த்தி
தெலுங்கு சினிமாவின் புதுக்கவிதை! முரட்டு தேவதாஸான `அர்ஜுன் ரெட்டி' படம் எப்படி?
தெலுங்கு சினிமாவின் புதுக்கவிதை! முரட்டு தேவதாஸான `அர்ஜுன் ரெட்டி' படம் எப்படி?

முன்பு ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற ரோமியோ ஜூலியட் காதல் கதையை நிறைய வன்முறை கலந்து `கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா' படம் மூலம் சொல்லி கவனம் ஈர்த்தார் சஞ்சய் லீலா பன்சாலி. இதே இயக்குநர் அதற்கு முன்பு எடுத்து மிகப்பெரிய ஹிட்டான படம் `தேவதாஸ்'. அதற்கு முன்னரே இந்தி உள்பட பல மொழிகளிலும் காதலித்திருந்தார்கள் தேவதாஸும் பார்வதியும். அதே கதையை கொஞ்சம் தன் ஸ்டைலில் `தேவ் டி'யாக எடுத்து மீண்டும் பேசவைத்தார் அனுராக் காஷ்யப். இப்போதும் அதே கதை நிறைய மாற்றங்களுடன் படமாக வெளிவந்து, மொத்த ஆந்திராவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அறிமுக இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருக்கும் இந்த `அர்ஜுன் ரெட்டி' படத்தைத்தான் `மார்டன் டே தேவதாஸ்', `தெலுங்கு சினிமாவின் திருப்புமுனை' எனக் கொண்டாடிவருகிறார்கள் ரசிகர்கள்.

``அப்படி என்ன பொல்லாத `அர்ஜுன் ரெட்டி'?'' எனக் கேட்கிறீர்களா. ஆம், நிஜமாகவே பொல்லாத அர்ஜுன் ரெட்டி பற்றிய கதைதான் இது. அவனுடைய பொல்லாத காதல் பற்றி, பொல்லாத கோபம் பற்றி, பொல்லாத பிரிவு பற்றி, பொல்லாத போதை பற்றி, பொல்லாத மருத்துவம் பற்றி... இன்னும் அவனுடைய நிறைய பொல்லாதவைப் பற்றிப் பேசுகிறது படம். 

படத்தின் பல காட்சிகள் சம்திங் ஸ்பெஷல்தான். ஒவ்வொரு மொழிக்கும் ஓர் ஆட்டோகிராஃப் உண்டு. தமிழுக்கு `ஆட்டோகிராஃப்', மலையாளத்துக்கு `பிரேமம்'போல், தெலுங்குக்கு இனி `அர்ஜுன் ரெட்டி'.  தெலுங்கு சினிமாவின் மாற்று சினிமாவுக்கான துளிர். சென்ற வருடம் வெளியான `பெல்லிச் சூப்புலு' மூலமே அது தொடங்கியிருந்தாலும், `அர்ஜுன் ரெட்டி' பயங்கர அடாவடியாக `இதெப்பிடி இருக்கு?' என காலரைத் தூக்கிக்கொள்கிறான். வெளியானதிலிருந்து படத்துக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் அதை விருட்சமாக்க விரும்புவோம்.

அர்ஜுன் பற்றிப் பேசும் முன், சென்சார் வாரியத்துக்குச் சின்னச் செய்தி,

தோல் தெரிய, சதை குலுங்கிக் குத்தாட்டும்போடும் பல்வேறு நற்பண்புமிக்க பாடல்களுக்கு `U'' சான்றிதழ் கொடுத்து கெளரவிக்கும் சென்சார் போர்டு, ஒரு மனிதனின் உணர்ச்சிக் குவியல்களை உண்மைத்தன்மை விலகாமல் காட்டியிருக்கும் ஒரு படத்துக்கு `ஏ' சான்றிதழ் கொடுத்திருக்கிறது. அதில் நியாயம் இருப்பினும், கோபப்படும்போது பேசும் அனைத்து வார்த்தைகளையும் மியூட் செய்திருக்கிறார்கள். `சினிமா பாராடைஸோ'வில் வரும் இறுதிக் காட்சிபோல், மாண்புமிகு சென்சார் போர்டு கத்தி போடும் அனைத்து காட்சிகளும் வசனங்களும், ஒருநாள் அகண்ட திரையில் வெளியாகத்தான் போகின்றன. அன்று தன் காதுகளையும் கண்களையும் மாண்புமிகு மேதமை பொருந்திய சென்சார் போர்டு மூடிக்கொள்ளும் என நம்புவோமாக. 

அத்தனை முத்தங்கள், கோபங்கள், அழுகைகள், சிகரெட்-பீடி புகை மண்டலங்கள், போதை மருந்துகள், பெண்கள், பாட்டில்கள், என அர்ஜுன் ரெட்டியாகவே இருக்கிறார் விஜய் தேவரகொண்டா. ஒருவேளை இந்தப் படத்தை ரீமேக் செய்தால்கூட, அப்படிப்பட்ட ஓர் இன்டர்வெல் காட்சியில், வேறு எந்த ஒரு ஹீரோவையும் பொருத்திப் பார்க்க முடியுமா என தெரியவில்லை. தன்னுடன் கால்பந்து போட்டியில் தவறாக நடந்துகொள்ளும் சகமாணவனைப் புரட்டி எடுக்கும் அர்ஜுன், அதே மாணவனிடம் `ப்ரீத்தியை எதுவும் பண்ணாதே!' என நரம்பு புடைக்க கைகள் நடுங்க அழுவது, தெலுங்கு புரியாத ஆசிரியை முன் ஒட்டுமொத்த ஜூனியர்களையும் `ப்ரீத்தி, என்னோட காதலி' என வார்னிங் செய்வது. `போடி... போ. உனக்கு துளுவுல எவனாவது ஒருத்தனைக் கட்டிவைப்பாங்க. இதுதான் என் சாபம்' எனக் கோபப்படுவது, தன் வீட்டின் கண்ணாடி டம்ளரை உடைத்த வேலைக்காரியை சாலை வரை துரத்துவது, எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான்பா என்பதற்காக நண்பன் சிவாவைச் சோதிப்பது , ``we were in our private space dad, that preethi's dad interfered" என முத்தத்துக்கு புது விளக்கம் தருவது , ``உன் தம்பிக்கு மட்டும் இல்லடி, உங்க அம்மா, உங்க அக்கா, உங்க அப்பா எல்லாத்துக்கு முத்தம் கொடுப்பேன்" என காதலை வித்தியாசமாக வெளிப்படுத்துவது, ``பாட்டிக்குப் பிடிச்ச பாட்டு இது" என அந்த நிலையில் வீட்டில் அந்தப் பாடலை பிளே செய்வது, ஒரு சந்தர்ப்பத்தில் ப்ரீத்தியைப் பார்த்ததும் `பேபி..!' என அழுவது, கோர்ட்டில் பேசும் ``I do not deserve" வரை எல்லாமே ஸ்பெஷல்.

தன் முதல் படம் என்ற எந்த ஒரு தோற்றமும் இல்லாமல் அசத்தியிருக்கிறார் ப்ரீத்தி ஷெட்டி. மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து ஆந்திராவிற்கு இறக்குமதி ஆகி இருக்கும் ஷாலினி பாண்டே, அப்படி ஒரு நடிப்பு. கல்லூரியில் சீனியர் அர்ஜுன் கூப்பிடும்போதெல்லாம், ஒருவித பயத்துடன் செல்வது, ``இன்னிக்கு என்ன க்ளாஸ்?" என அர்ஜுன் கேட்க, ஒருவித பயத்துடன் ``அப்பர் தோராக்ஸ் Upper thorax" எனச் சொல்வது என, கல்லூரிக் காலங்களின் ஜூனியர்களை கண்முன் நிறுத்துகிறார். காதலனுக்காக நெடுந்தூரம் பயணம் செய்வது, வீட்டைவிட்டு வெளியேறுவது, கோபப்படும்போது அறைவது என ப்ரீத்தி சிரிப்பு ஹீரோயின்களுக்கு மத்தியில் தனித்து தெரிகிறார். உயரமான ஆண்களுக்கு, தன்னைவிட சற்றே குள்ளமான ஜோடி என்பது எப்போதுமே பெர்ஃபெக்ட் காம்போதான். Short girls are cute என்பதை மற்றுமொருறை முத்தங்களால் நிரூபித்திருக்கிறார் ப்ரீத்தி. எந்தவொரு சூழலிலும் அவருடைய முகத்தில் அந்தக் குழந்தை முகம் விலகவே இல்லை, இறுதிக்காட்சி உள்பட. 

அர்ஜுனின் பாட்டியாக தமிழின் முன்னாள் கதாநாயகி காஞ்சனாவின் (`அதே கண்கள்', `காதலிக்க நேரமில்லை'... கூகுள் இமேஜ்களைத் தேடிக்கொள்ளவும்) பிரமாதமான நடிப்பும் கவனிக்கவைக்கிறது. ஆரம்பத்திலிருந்தே அர்ஜுனுக்கு சப்போர்ட்செய்வது, அர்ஜுனின் அண்ணன் இதுபற்றி புலம்பும்போதுகூட, ``Suffering is personal, Let him suffer" என்பது, உறவினர் ஒருவர் `அர்ஜுனுக்கு என்ன ஆச்சு?' என சம்பிரதாயமாக வினவ, ``உன்னை யாரு உள்ளே விட்டா வெளியே போ" என்பது என படம் நெடுகவரும் அல்ட்டி பாட்டி ரோல். 

யாரோ ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை நாவலாகப் படித்திருக்கிறீர்களா? சில பக்கங்கள் அதீத சுவாரஸ்யமாக இருக்கும்,  சில பக்கங்களை ஸ்கிப் செய்தாலும் கதை புரியும். ஆனால், ஒவ்வொரு பக்கமும் அவரின் வாழ்க்கையாகவே இருக்கும். `அர்ஜுன் ரெட்டி' (மூன்று மணி நேரத்துக்கும் அதிகமான ஒரு சினிமா) அப்படிப்பட்ட ஒன்றுதான். கதை எனப் பார்த்தால், வழக்கம்போல் தேவதாஸ் கதைதான். 

முதல் படத்தை, தெலுங்கு சினிமாவின் எந்த ஒரு சம்பிரதாயத்துக்கும் இடம்கொடுக்காமல், இவ்வளவு அருமையாகவும் உண்மையாகவும் எடுக்க முடியுமா? முடியும் என்கிறார் அறிமுக இயக்குநர் சந்தீப் ரெட்டி. அனுராக் கதையை வாங்கி இம்தியாஸ் அலி இயக்கியதைப் போன்ற தரமான மேக்கிங். குத்துப் பாடல்கள் இல்லை, யாரோ ஒருவனின் வாழ்க்கையின் முக்கியப் பகுதிகளை `பிக் பாஸ்' திரையில் தினமும் சென்று பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இந்தத் தெலுங்கு சினிமா.

கன்னடத்துக்கு `லூசியா', தெலுங்குக்கு `அர்ஜுன் ரெட்டி' என அண்டை மாநிலத்தவர்கள்மேல் பொறாமைகொள்ள மற்றுமொரு தருணத்தை நல்கியிருக்கிறார்கள். அனைத்து ஸ்டீரியோ டைப்புகளையும் உடைத்தெறிந்து `இந்தப் படம், இந்தப் பாதையில் இப்படித்தான் செல்லப்போகிறது. பார்க்கிறவன் பார்த்துக்கோ!' எனச் சொல்லும் அந்த ஆரம்ப காட்சிகள், எந்த ஓர் இடத்திலும், தொய்வு அடையவிடாத ஒரு ஸ்க்ரிப்ட், எந்த நிலையிலும் அர்ஜுனைத் தாங்கிப் பிடிக்கும் நண்பன் சிவா கதாபாத்திரம் அனைத்தும் பக்கா காமிகல். அர்ஜுனைச் சமாளிக்கவும் முடியாமல், கைவிடவும் முடியாமல் பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பித் தவிக்கும் காட்சிகள் எல்லாமே சிரிப்பு சரவெடி. `நான் எனக்கு எப்போதும் உண்மையாக இருப்பேன்' என இறுதிவரை அதில் மாறாமல் இருக்கும் அர்ஜுன், ஜாதி வேர்கள் ஊறிப்போயிருக்கும் ஒரு குடும்பமாகக் காட்டப்படும் ப்ரீத்தி ஷெட்டியின் வீடு, ப்ளஸ் அந்த வசனங்கள், ஒரு பெர்ஃபெக்ட் நாவலை பல நாள்கள் கழித்து நிம்மதியான சூழலில் படித்த ஃபீல். 

சந்தீப் ரெட்டி என்பதாலேயே, ஷெட்டிகள் குறைவாகவும், ரெட்டிகள் பரந்த மனப்பான்மைகொண்டவர்களாகவும் காட்டப்பட்டிருக்கிறார்களோ என்கிற சின்ன நெருடல் மட்டும்தான் படத்தின் மீதுள்ள குறை. 

பல்வேறு லாங் ஷாட் காட்சிகள், ஒரு பெரிய படத்தில் இதுபோன்ற காட்சிகள் பெரும்பாலும் சோர்வைத் தரும். ஆனால், அப்படி எதுவும் நிகழாமல் பார்த்துக்கொள்கிறது ராஜூ தோட்டாவின் கேமரா. பல காட்சிகள் மெட்டல் இசையில் அதிர்கிறது திரை அரங்கம். குறிப்பாக அர்ஜுனுக்கு டென்ஷன் ஏறும்போதெல்லாம் ஒலிக்கும் `வரவொவ் வரவொவ் வரவொவ்...' அதிரடி என்றால் சட்டென மாறி, கர்னாடிக்கில் மெலடி மழலை பாடவைக்கிறது ராதனின் இசை. `மதுரமே...' பாடல், தெலுங்கு இளைஞர்களின் காலர் ட்யூனாக மாறியுள்ளது. படம் முழுக்க அத்தனை ராவான வசனங்கள்  சப்டைட்டில் இல்லாதது ஏனோ ஒரு குறை என்றாலும், அது பெரிய குறையாக இல்லை. எந்த ஒரு வசனமும் துருத்திக்கொண்டு தத்துவமாகவோ, அறிவுரையாகவோ இல்லாமல் அதன் பாதையில் பயணிக்கிறது.

1917-ம் ஆண்டு எழுதப்பட்ட `தேவதாஸ்', அதன் நூறாவது ஆண்டை சில மாதங்கள் முன் கொண்டாடியது. அது ஒரு பெங்காலி நாவல். இருந்தும் தேவதாஸ் என்றவுடன் நமக்கு ஒரு கதாபாத்திரம் நம் கண் முன் விரிகிறது. அருகே காதலியின் பெயரில் ஒரு நாய். `அர்ஜுன் ரெட்டி'யின் கதையை இவ்வளவு சுருக்கமாகவும் சொல்லலாம். 15 தடவைக்குமேல் இதைத் தழுவி திரைப்படங்கள்  இந்திய மொழிகளில் வெளியாகியிருக்கின்றன. ஆனால், இந்த தேவதாஸ், தெலுங்கு சினிமாவுக்குக் கிடைத்திருக்கும் ஒரு புதுக்கவிதை.

அடுத்த கட்டுரைக்கு