Published:Updated:

விஜயகாந்த் - முருகதாஸ், அஜித் - வெங்கட் பிரபு... சொல்லி அடித்த ஒன் டைம் ஹிட் கூட்டணி!

விஜயகாந்த் - முருகதாஸ், அஜித் - வெங்கட் பிரபு... சொல்லி அடித்த ஒன் டைம் ஹிட் கூட்டணி!
விஜயகாந்த் - முருகதாஸ், அஜித் - வெங்கட் பிரபு... சொல்லி அடித்த ஒன் டைம் ஹிட் கூட்டணி!

அஜித்தின் அடுத்தப் படம் சிவாவுடனா இல்லையா என்ற விவாதம்,  விவேகம் ஹிட்டா ப்ளாப்பா என்ற கேள்வியை ஈஸியாக ஓவர்டேக் செய்து செல்கிறது. பலர் 'ஐயோ மறுபடியும் மொதல்ல இருந்தா?' எனக் கதற, சிலர் இன்னமும் 'வாவ் ஜி' என வருத்தமே இல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திரும்பத் திரும்ப ஒரே இயக்குநரோடு இணைவதற்கு பதில் ஒரே ஒரு முறை சேர்ந்து ஹிட்டும் அடித்த இயக்குநர்களோடு நடிகர்கள் மீண்டும் கைகோர்த்தால் கெத்தாக இருக்கும்தானே? அப்படி ஒன்டைம் ஜோடி சேர்ந்து ஹிட்டடித்தவர்கள் பட்டியல் இது:

கமல் - கெளதம் வாசுதேவ் மேனன்:

கமல் நீண்ட இடைவேளைக்குப் பிறகு காக்கிச் சட்டையில் கலக்கிய ஆக்‌ஷன் படம். 'காக்க காக்க' தந்த சுறுசுறு பூஸ்ட்டில் கற்க கற்க கள்ளம் கற்க இறங்கியடித்தார் கெளதம். கமல் - கமாலினி கெமிஸ்ட்ரி, ஜோதிகாவின் வித்தியாச வேடம், டேனியலின் மிரட்டல் நடிப்பு, சீரியஸான சீரியல் கில்லர்கள் கதை என படம் வேற வெலவலில் இருந்தது. இதன் காரணமாகவே படம் முழுக்க விரவிக் கிடந்த கெட்ட வார்த்தைகளையும் தாண்டி ஆல் சென்டர் ஹிட். அடுத்த பத்தாண்டுகளில் விஸ்வரூபம் மட்டுமே கமல் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படம். கெளதமுக்கும் கடைசியாக காக்கிச்சட்டை கைகொடுத்த படம். சீக்கிரம் அதே மாதிரி படம் எடுங்க கெளதம். ஆனா, அதே படத்தை எடுத்துடாதீங்க ப்ளீஸ்!

விஜய் - ஷங்கர்:

விஜய் நடிப்பு பயின்ற அதே குருகுலத்தில்தான் ஷங்கர் இயக்கம் பயின்றார். அந்தவகையில் இருவரும் ஒரே பெஞ்ச் மாணவர்கள் போல. ஆனாலும் இருவரும் இணைவது மட்டும் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. 'முதல்வன்' ஜஸ்ட் மிஸ்ஸாக 12 ஆண்டுகள் கழித்து நண்பனில் இணைந்தார்கள் இந்த நண்பர்கள். ரீமேக் படம்தான் என்றாலும் அமீரை எந்த இடத்திலும் ஞாபகப்படுத்தாமல் விஜயே ஆக்ரமித்தார். சீக்கிரமே ஒரிஜினல் தமிழ் படத்துல உங்க ரெண்டு பேரையும் பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங்ணா!

அஜித் - வெங்கட்பிரபு:

'மங்காத்தா' - சந்தேகமே இல்லாமல் அஜித்தின் கேரியரில் அந்தர்மாஸ் சினிமா இந்தப் படம்தான். அதுவரை ஹீரோவாக கெத்து காண்பித்த அஜித் வில்லனாக சால்ட் அண்ட் பெப்பரில் வெளுத்து வாங்கினார். கூடவே அர்ஜூன் ஜோடி சேர பார்ட்னர்ஷிப் நூறைத் தாண்டியது. ரணகள தீம் மியூசிக், அதகள க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் என அஜித் ரசிகர்களையும் தாண்டி எல்லாருக்குமான படமாக செதுக்கியிருந்தார் வெங்கட் பிரபு. இப்போதும் 'மங்காத்தா 2 எப்ப தல?' என அப்பாவியாக கேட்கும் கடைக்கோடி ரசிகன் இருக்கத்தான் செய்கிறான். சீக்கிரம் சேருங்க ப்ரோ!

கேப்டன் - ஏ.ஆர்.முருகதாஸ்:

கேப்டனின் கேரியரில் மிக முக்கிய சினிமா ரமணா. வழக்கமாக காக்கியிலோ கேமஃப்லாஜ் யூனிபார்மிலோதான் கெட்டவர்களை துவம்சம் செய்வார். ஆனால் இதில் வித்தியாச வேடம். கன்னச் சதை குதிக்கக் குதிக்க ஆடும் டூயட்கள் கூட இல்லை. அவ்வளவு ஏன் டேட்டா பன்ச், க்ளைமாக்ஸ் வசனம் தவிர்த்து பெரிதாக பேசவே மாட்டார் கேப்டன். ஆனால் படம் ஏ, பி, சி என எல்லா சென்டர்களிலும் வசூலை வாரிக் குவித்தது. இப்போது கேப்டன் களத்திலும் இல்லை, கனவுத் தொழிற்சாலையிலும் இல்லை. திரும்ப ஃபார்முக்கு வர முருகதாஸ் கைகொடுத்தால் சூப்பராக இருக்கும்.

விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன்:

ஒரே ஒரு டயலாக்தான். படம் முழுக்க அதைச் சொல்லியே நம்மை சிரிக்க வைக்க முடியுமா? இந்த இணையால் முடியும். பீட்சாவில் திரும்பிப் பார்க்க வைத்த விஜய் சேதுபதி இதில் 'சூப்பர்ஜி' சொல்ல வைத்தார். 'மெடுலா ஆப்லகெட்டா', 'என்னாச்சு?', 'ப்ப்ப்ப்ப்பா' என பல பன்ச்லைன்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு எடுத்துக்கொடுத்தப் படம். அதன்பின் நெடுந்தூரம் வந்துவிட்டார் விஜய் சேதுபதி. பாலாஜி தரணிதரனும் அடுத்தப் படத்தில் மூழ்கிவிட்டார். சீக்கிரம் சேருங்க ப்ரோ!