Published:Updated:

உலகமயமாக்கலுக்கு இடையே ஆனந்த யாழை மீட்டிய தங்கமீன்கள்! #4YearsOfThangaMeengal

தினேஷ் பிரபு
உலகமயமாக்கலுக்கு இடையே ஆனந்த யாழை மீட்டிய தங்கமீன்கள்!  #4YearsOfThangaMeengal
உலகமயமாக்கலுக்கு இடையே ஆனந்த யாழை மீட்டிய தங்கமீன்கள்! #4YearsOfThangaMeengal

வறுமைக்கும், நேர்மைக்கும், பாசத்துக்கும், உலகமயமாக்கலுக்கும் நடுவே சிக்கித் தவிக்கும் ஒரு தந்தை, தன் மகளுக்கு எந்தவிதத்திலும் தன்னுடைய இயலாமை தெரிந்துவிடக் கூடாது என, அவள் காண விரும்பும் உலகத்தை உருவாக்கித் தந்து அழகு பார்க்கும் அற்புதப் படம் `தங்க மீன்கள்'.

இதில், தந்தை-மகள் இடையேயான பாசக் கதை மட்டுமல்ல, பரீட்சையை முன்வைத்து குழந்தைகளின் கற்பனைத் திறன் பள்ளிகளில் எவ்வாறு காவுவாங்கப்படுகிறது என்பதையும் அழுத்திச் சொல்லப்பட்டுள்ளது. திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகும் நிலையான வருமானமின்றி அப்பாவின் பண உதவியால் அவர்களோடு கூட்டுக் குடும்பமாக வாழும் நிலை கல்யாணிக்கு. அப்பா, தன்னை நுட்பமாக அவமானப்படுத்துகையில், அதை வெளிப்படுத்தும் தருணங்களாக இருக்கட்டும்... எல்லா கோபங்களையும் தெருவில் போகும் ஒரு நாயின் மீது கல்லைக்கொண்டு எறிந்து தன்னை ஆசுவாசப்படுத்த நினைக்கையில் மனைவி அவனைத் திட்ட, அதற்கு ராம் சொல்லும் பதில்... இயலாமையின் உச்சம். 

பொதுவாகவே இயக்குநர் ராமின் கதாநாயகர்கள், ராமாகவே மற்ற இரண்டு படங்களிலும் வாழ்ந்திருப்பர். உடல்மொழி, வசன உச்சரிப்பு , நடை என ஒவ்வொன்றிலும் பிரபாகரன் (கற்றது தமிழ்) பிரபுநாத் (தரமணி) இரண்டு படங்களிலும் ராமை எளிதாகக் காண முடியும். ஆனால், `தங்க மீன்கள்' படத்தில் ராமே கல்யாணியாக வாழ்ந்தது மிகப்பெரிய பலம். குறிப்பாக, அந்த இன்டர்வெல் ப்ளாக். மன அழுத்தத்தின் உச்சத்தில் ஒருவன் தன்னைச் சுற்றி நடக்கும் எதையும் பொருட்படுத்தாமல் இருக்கும் நிலை. அழுகை, கதறல், தனிமைப்படுத்திக்கொள்ளல் அனைத்தையும்விட தீவிரமான ஒரு நிலையை நடிகராக அவர் பிரதிபலித்திருப்பார்.

அவர் மட்டுமின்றி, செல்லம்மா, வடிவு, எவிட்டா மிஸ், கல்யாணியின் தந்தை, செல்லம்மாவின் தோழி அந்தப் பூரி சிறுமி என ஒவ்வொரு கதாபாத்திரமும், தங்களுக்கே உரிய தனித்தன்மையுடன் இன்னும் நம் நினைவில் நிற்கிறார்கள். பசுமையின் ஈரத்தையும், ரயில் ஓசையும் யுவனின் இசையும் இந்தப் படத்தை பேருந்துப் பயணத்தில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து மலை வாசஸ்தலத்தை வேடிக்கை பார்ப்பது போன்ற ஒரு மனநிலையைத் தந்தன. `நதி வெள்ளம் மேலே...' `யாருக்கும் தோழனில்லை...' `ஆனந்த யாழை...' இப்படி ஒவ்வொரு பாடலும் படத்தின் கதையோடு பிணைந்து வந்து நம்மை வருடிச் செல்லும். `ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடலுக்காக நா.முத்துக்குமாருக்கு தேசிய விருது கிடைத்தது போனஸ். 

இறுதிக் காட்சியில் அரசுப் பள்ளியில் செல்லம்மா படிக்கும் அந்தத் தங்க மீன்கள் கதை, அட்டகாசமான ஒரு நிறைவைத் தருகிறது.

`தாரே ஜமீன் பர்', `சில்ட்ரன் ஆஃப் ஹெவென்', `அஞ்சலி', `கன்னத்தில் முத்தமிட்டால்' போன்ற ஒவ்வொரு படமும் நமக்குத் தோன்றினாலும்கூட, `தங்க மீன்கள்' படத்தின் நிறைவில் எல்லாம் மறைந்து நம் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துவிட்டது என்பதை எவரும் மறுக்க முடியாது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படைப்புகளில் `தங்க மீன்கள்' படத்துக்கு நிச்சயம் ஓர் இடம் உண்டு. இன்றைய நிலையில், வர்த்தகத்தை மனதில்கொள்ளாமல் தரமான திரைப்படம் மக்களை சென்றடைய வேண்டும் என நினைக்கும் வெகு சில படைப்பாளிகளில், இயக்குநர் ராம் முக்கியமானவர்.