Published:Updated:

தன்னைத்தானே செதுக்கியவன் யுவன்! #HBDYuvan

தன்னைத்தானே செதுக்கியவன் யுவன்! #HBDYuvan
தன்னைத்தானே செதுக்கியவன் யுவன்! #HBDYuvan

தன்னைத்தானே செதுக்கியவன் யுவன்! #HBDYuvan

“1980 - இது இசை ரசிகர்களின் ஏகாந்த காலம். தமிழகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் இளையராஜா... இளையராஜா... இளையராஜா" அது ஓர் இசை ராஜாங்கம். அரசனுக்கே உரிய கர்வமும் பெருமிதமும் கொடுக்கக்கூடிய போதை. எத்தனை எத்தனையோ சிற்றரசுகள் வந்தபோதும் சிறிதும் அசைக்க முடியாத அடித்தளத்தில், தன் இசை ராஜ்ஜியத்தை நடத்தியவர். காரணம், திரையிசை என்பதைத் தாண்டி தெய்விக இசையாக மக்களிடம் விரவிக்கிடந்தார்.

மந்திரித்துவிட்ட ஆடுகளாக இருந்த மக்களின் ரசனையை நவநாகரிக வடிவத்துக்கு ஏற்ப புத்தம் புது இசைமொழியை அறிமுகம் செய்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அதுவரை தமிழ் இசை ரசிகர்கள் கேட்டிராத சத்தம், புதுமையான இசை வடிவம். On a lighter note இதுவும் சாதாரண விஷயம் அல்ல. ஒரு பக்கம் ஏ.ஆர்.ரஹ்மான் கோலோச்ச... 21-ம் நூற்றாண்டில் தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்களைக் கைக்குள் அடக்க ஆரம்பித்திருந்தார் யுவன் சங்கர் ராஜா. ஒரு மாஸ் ஹீரோவுக்குக் கிடைக்கும் கைதட்டலை இவர் பெயர் வரும்போது ஒலிக்க ஆரம்பித்ததும்தான் பலரின் பார்வையும் யுவன் வசம் திரும்பியது. கிட்டத்தட்ட யுவன் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 20 வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது. ராஜாவிடமிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் தன்னைத் தனித்துக்காட்டி மக்களிடம் பெயர் எடுத்திருந்தார். அதற்குமேல் அடையவேண்டிய, தொட்டுப் பிடிக்கவேண்டியது என எதுவும் இல்லை. ஆனால், யுவன் அடைய வேண்டும் என்ற வேட்கையோ, தொட்டுப் பிடிக்கும் விளையாட்டின் மீதோ ஆர்வம்கொள்ளாமல், வேறு மாதிரியான பயணத்தை மேற்கொண்டார். அப்படியாக பிறந்த இசையில் எத்தனையோ காதல் சேர்ந்தது, எவ்வளவோ சோகம் சேர்ந்தது, இன்னும் இன்னும் அன்பு உருவாகி நம்மை அழவைத்தது, எதுவும் யோசிக்க மறந்து, முழு ஆன்மாவையும் வெறுமையாக்கி, இறகைப்போல காற்றில் பறக்கவிட்டது. எது எதிலிருந்தோ நம்மை மீட்டது.

விளையாட்டாக தன் இசைப் பயணத்தை யுவன் ஆரம்பித்திருந்தாலும், இசை அவர் ரத்தத்தில் ஊறிய விஷயம் என்பது மறுக்க முடியாதது. யுவன் தன் பயணத்தை ஆரம்பித்த பொழுதுகளில் முதல் சில வருடங்கள் எல்லாம் அப்படி ஒன்றும் அசத்தலாக இல்லை. அவரின் இசை நன்றாகவே இருந்தாலும் திரைத் துறையில் படத்தின் வெற்றி என்பதை வைத்துதான் எல்லா கலைஞர்களுக்கும் மதிப்பு. `அன்னக்கிளி' கிராமத்துத் தெருக்களில் எல்லாம் ஒலித்ததுபோல், `ரோஜா' தமிழ்நாடெங்கும் புது ரத்தம் பாய்ச்சியதைப்போல், `மின்னலே' பட்டிதொட்டியெங்கும் பரவியதைப்போல் `அரவிந்தன்' பெரிய அலையை உருவாக்கவில்லை. அடுத்தடுத்த சில படங்களுக்கும் அப்படியே.

அது நல்ல இசையாக இருந்தபோதிலும். ஓர் இசையமைப்பாளருக்கு முதல் படம் தூள் கிளப்பிவிட்டால் அடுத்தடுத்து பெரிய படங்கள் என கிராஃபை நாம் பார்த்துக்கொள்ள வேண்டியதில்லை. சகசினிமா கவனித்துக்கொள்ளும். அப்படி இருக்க யுவன் ஒவ்வொரு படத்துக்கும் தன் முனைப்பைக் காட்டிக்கொண்டே இருந்தார். `அப்பா வளர்த்துவிடவேண்டியிருந்தது' என்ற விஷயமே இங்கு இல்லாமல்போனது அப்போதுதான். யுவனின் ஆரம்பகாலத்தில் இளையராஜாவை யுவன் இசையமைக்கும் படங்களுக்கு எல்லாம் பத்திரிகையாளர் சந்திப்பு, இசை வெளியீட்டு விழாக்கள் போன்றவற்றுக்குப் பலரும் அழைப்பார்களாம். எதற்குமே அவர் கலந்துகொண்டதில்லை. அப்போதெல்லாம் ராஜா சொல்வது ஒன்றே ஒன்றுதான்.

“நான் வர மாட்டேன். இசை ஒரு கடல். அதுல நீ நீந்தி வா. உன்கிட்ட விஷயம் இருந்தா, நீ நிச்சயமா மேல வந்திருவ. உன்னை நான் புரமோட் பண்ணிடுற மாதிரி எப்பவுமே நான் இருக்க மாட்டேன். உனக்காக நான் பேசத் தேவையில்லை. உன் இசையை நீ பேச வை" என்பாராம்! தனக்கான ஒவ்வொரு படிக்கல்லையும் தானே எடுத்து வைத்துக்கொண்டவர் யுவன். `பில்லா'வில் அஜித்துக்காகப் பாடுவாரே, `தன்னைத்தானே செதுக்கியவன் இவன்...' என்று அது யுவனும்தான்!

கல்லூரியில் படிக்கும்போது என் நண்பன் ஒருவன் இருந்தான். நாங்கள் எல்லாம் `யுவன்... யுவன்...' என்று அங்கலாய்க்கும்போது அவன் `யுவனைப் பிடிக்காது' என்பான். ஏன் எனக் கேட்டால், `எந்த ரேடியோவைப் போட்டாலும், டிவி-யில் சன் மியூசிக் என எது போட்டாலும் யுவன் பாடல்கள்தான் வருகின்றன. சில நேரங்களில் வெறுத்துவிடுகின்றன' என்பான். அப்போது யுவன் இசையில் பேக் டு பேக் ஆல்பங்கள் வந்துகொண்டே இருக்கும். வாய்ப்பு கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். யுவன் இந்த விஷயத்தில் இளையராஜாவின் பாணியைக் கடைப்பிடிப்பவர். சிறிய பட்ஜெட்கொண்ட படம், பெரிய ஹீரோ நடிக்கும் படம் என்றெல்லாம் பார்க்காமல் கதை பிடித்திருந்தால், தன்னை அணுகும் எந்தப் படத்துக்கும் அவர் இசையமைக்கத் தவறியதில்லை.

நண்பர்களுக்காக சில திரைப்படங்களை அவர் எந்த முன்பணமும் வாங்காமல்கூட செய்துகொடுத்திருக்கிறார்.  `பில்லா-2' திரைப்படத்தை அஜித்துக்காக செய்துகொண்டிருக்கும்போதே, `ஆதலால் காதல் செய்வீர்' என்ற முகம் தெரியாத ஹீரோவின் படத்துக்காக ஒப்புக்கொள்ளவும் செய்வார். அவர் காலத்தில் போட்டியாக இருந்த ஹாரிஸ் ஜெயராஜ் வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் மட்டுமே செய்வார். அதுவும் ஏதாவது ஒரு பெரிய நடிகரின் படமாக இருக்கும். ஆனால், யுவன் சில நேரங்களில் வருடத்துக்கு 10 படங்கள்கூட இசையமைத்திருக்கிறார். இளையராஜா அப்படி இருந்தவர். உண்மையில் இளையராஜாவின் காலத்தில் அது அவருக்கு எளிதாக இருந்தது. ஆனால், இப்போது இருக்கும் போட்டி காலத்தில், கொஞ்சம் அசந்தாலும் அடுத்தடுத்து திறமைகள் முளைத்துத் தனிப்பெரும் ஆளாக வளர்ந்துவிடக்கூடிய சூழ்நிலையில் இத்தனை படங்களை ஒப்புக்கொண்டு, ஒவ்வொரு படத்துக்கும் தனிப்பெரும் உழைப்பைக் கொடுத்து நிலைத்து நிற்பது அசாத்தியமான விஷயம்.

யுவன், இயக்குநர்களின் இசையமைப்பாளர். சமீபத்தில் இயக்குநர் ராம் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார், ``யுவனுக்கு இசை மட்டுமல்ல, கதையும் தெரியும். எந்த ஒரு கதைக்குமான நாடித்துடிப்பும் இயக்குநர்கள்தான். அந்தக் கதை எப்படிப் பயணிக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தை தன்னுள் வைத்திருப்பவர்கள் அவர்கள். யுவன் அந்த ஓட்டத்தின் நாடி பிடித்துப் பார்த்து இசையமைப்பவர்'' என்று. இயக்குநர் ராம் என்றால் யுவன் இசை எப்படி இருக்கும், செல்வராகவன் என்றால் எப்படி இருக்கும், இயக்குநர் ஹரி என்றால் யுவனின் இசை எப்படி இருக்கும், வெங்கட் பிரபு என்றால் எப்படி, சுந்தர்.சி என்றால் எப்படி என்று அவர் இசையைக் கணிப்பவர்கள் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஒவ்வோர் இயக்குநரின் திரைக்கதை பாணிக்கும் அவரவர் பாணியிலேயே கதையின் போக்கு பாதிக்காமல் இசையமைக்கும் லாகவம் தெரிந்த ஓர் இசையமைப்பாளர் யுவன்.

தமிழ் சினிமாவில் நீங்கா இடம் பிடிக்க வேண்டும் என்றால், கதையை அலங்கரிக்க வேண்டும். படம் முழுக்க அதை நிலைத்திருத்தச்செய்யவும், கதையின் வீரியத்தைத் தீர்மானிக்கவும் மிகப்பெரும் சக்தியாக விளங்குவது பின்னணி இசை. தற்காலப் பின்னணி இசையின் ராஜா `யுவன் சங்கர் ராஜா' என அடித்துச்சொல்லலாம். யுவன் பின்னணி இசைக்கென போட்ட ட்யூன்களை எல்லாம் சேர்த்தால் அதில் இன்னும் 200 படங்களுக்கான பாடல்களை முடித்துக் கொடுத்துவிடலாம்.

பின்னணி இசை மீது யுவன் காட்டும் அர்ப்பணிப்பு அதீதமான ஒன்று. ஒரு மீட்பின் ஒளியாக, மாற்றம் பிறக்கவைக்கும் நம்பிக்கையாக, மீட்கவே முடியாத சோகமாக எப்படியும் நம்மை ஆட்கொள்ளக்கூடிய ஆற்றல்கொண்ட பொல்லாத இசை அது. யுவனின் பின்னணி இசையை ஓடவிட்டுக்கொண்டு பின்னால் எந்த ஒரு சிறிய ஹீரோவும்கூட மாஸ் ஹீரோவாகத் தன்னை உருவகப்படுத்திக் காட்டிக்கொள்ள முடியும் (சமீபத்திய உதாரணம் `சென்னை-28 II'வில் வைபவ்). படம் எந்த அளவுக்கு intense ஆக இருக்கிறதோ, பின்னணி இசையின் தேவையும் அதற்கேற்ப முக்கியப் பங்கு வகிக்கிறது. தான் அதைச் சரியாகச் செய்கிறேன் என்பதை சமீபத்தில் `தரமணி' வரை உறுதிசெய்திருப்பவர் யுவன்.

யுவன், எப்போதும் தான் ஒரு வட்டத்துக்குள் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருப்பவர். தமிழ் சினிமாவில் அவரது இருப்பை உறுதிசெய்து இன்னமும் ஓடிக்கொண்டிருப்பதற்கு மிகப்பெரிய காரணமாக இதைச் சொல்லலாம். Versatality. யுவனால் எந்த இசையையும் செய்ய முடியும். `பருத்தி வீரன்' என நாட்டார் இசையின் சாயலில் இறங்கிக் குத்தவும் தெரியும். `பில்லா', `மங்காத்தா' என ஸ்டைலிஷ் ஹை வோல்டேஜ்களில் அசரடிக்கவும் தெரியும். எல்லோராலும் இதைச் சாத்தியப்படுத்த முடியாது. Versatality காட்ட முற்படும்போது தன் signature-ஐ இழக்க நேரிடலாம். அதை மனதில் வைத்துக்கொண்டே பல இசையமைப்பாளர்களும் அப்படியான படங்களைத் தேர்ந்தெடுக்க யோசிக்கின்றனர். யுவனுக்கு அது மிகப்பெரிய பலம். எந்த வகையான இசை என்றாலும் அதில் யுவனின் signature தெள்ளத் தெளிவாகத் தெரிந்துவிடும். அது தனக்கென ஒரு பாதை வகுக்கும் உத்தி. டெம்ப்ளேட்டில் சிக்கிக்கொள்வதற்கும், எல்லா டெம்ப்ளேட்களிலும் தனக்கென ஒரு trendset செய்வதற்குமான முயற்சியில்தான் யுவன் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்கிறது.

யுவனுக்குக் கிடைக்கக்கூடிய அங்கீகாரம் எல்லாம் அவரின் ரசிகர்கள்தான். உடன் வேலைபார்ப்பவர்களே அவரின் மிகப்பெரிய ரசிகர்களாக அமையப்பெற்றது கூடுதல் வரம்தானே? இயக்குநர் ராம் `தங்க மீன்கள்' படத்துக்காக விருது வாங்கும்போது ``இது யுவனுக்காகக் கிடைக்கவேண்டிய விருது'' எனச் சொல்வதாகட்டும், வெங்கட் பிரபு விருது வாங்கும்போது யுவனுக்காகக் குரல் எழுப்புவதாகட்டும், நா.முத்துக்குமார் விருது வாங்கும்போது அடுத்தமுறை `தரமணி'க்காக விருதை நானும் யுவனும் சேர்ந்து வாங்குவோம் என்று அன்பைப் பொழிந்த கதையாகட்டும்.

விருதுகளைத் தாண்டி இந்த அன்பு அவரை வழிநடத்தும். அன்பின் வழியது இசை!

அடுத்த கட்டுரைக்கு