Published:Updated:

’நான் நல்லவன் இல்லடா.... ரொம்ப கெட்டவன்!’ சொல்லியடித்த அஜித் #SixYearsOfMankatha

எட்.விஸ்வநாத் பிரதாப் சிங்
’நான் நல்லவன் இல்லடா.... ரொம்ப கெட்டவன்!’ சொல்லியடித்த அஜித் #SixYearsOfMankatha
’நான் நல்லவன் இல்லடா.... ரொம்ப கெட்டவன்!’ சொல்லியடித்த அஜித் #SixYearsOfMankatha

ஒவ்வொரு நடிகருக்கும் 50-வது படம் 100-வது படம் என்பது மைல்கல். குறிப்பிட்ட அந்தப் படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்கிற எண்ணம், ஒவ்நவொரு நடிகர்களுக்கும் உண்டு. ரஜினிக்கு 'ஸ்ரீ ராகவேந்திரா’ கமல்ஹாசனுக்கு  `ராஜபார்வை', விஜயகாந்த்துக்கு `கேப்டன் பிரபாகரன்' போன்ற படங்கள் அவர்களுக்கு 100-வது திரைப்படங்களாக மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அதுபோல அஜித்துக்கு 50-வது திரைப்படமான `மங்காத்தா' மாபெரும் வெற்றியைத் தந்தது. அஜித் ரசிகர்களுக்கு மிகப் பிடித்த படங்களில் `மங்காத்தா'வுக்கு தனி இடம் உண்டு.

தனது 50-வது திரைப்படம் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என, நடிகர்களுக்கு பல கனவுகள் இருக்கும். பெரும்பாலும் அவை தேசப்பற்றுத் திரைப்படமாகவோ, மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லும் கமர்ஷியல் படங்களாகவோத்தான் இருக்கும். ஆனால்இவற்றிலிருந்து தனித்து மாறுபட்டிருந்ததே `மங்காத்தா' படத்தின் சிறப்பு. இந்தப்படம் வெளிவந்து இன்றுடன் ஆறு வருடங்கள் ஆகின்றன. இந்தப்படம் எந்தெந்த விஷயங்களில்  தனித்துத் தெரிந்தது என்பதைப் பாப்போம்.

இந்தப் படத்தில் நல்லவர் என ஒருவரைக்கூட நாம் பார்க்க முடியாது. படத்தில் ஹீரோ, வில்லன் என எவருமே இல்லை. வில்லன், வில்லாதி வில்லன் எனக் கூறும் அளவுக்கே திரைக்கதை அமைப்பு இருக்கும். ‘தல என்றால், தனி கெத்து’ என அவரின் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு ஏற்றார்போல அக்மார்க் வில்லனாகவே கண் முன் தோன்றினார் அஜித். ``இன்னைக்கு நிறையபேர் சால்ட் & பேப்பர் ஸ்டைல்-ல நடிக்கலாம். அதுக்கெல்லாம் விதை நான் போட்டது” எனச் சொல்லும் பெருமை அஜித்துக்கே உண்டு. இவ்வாறு ஒரு கதாநாயகனுக்கே உண்டான அனைத்து இலக்கணங்களையும் உடைத்தெறிந்து, தன் ரசிகர்களின் மீதுகொண்ட நம்பிக்கையால் மட்டுமே அஜித் இதில்நடித்தார். அதேபோல் தலயின் ரசிகர்களும் திரைப்படத்தை திருவிழாபோல் கொண்டாடினர்.

மேலும், திரைப்படத்தின் பெரிய பலமே பாத்திரப் படைப்புகள்தான். அதுவரை நேர்மையான ஒரு காவல்துறை அதிகாரியாக பல படங்களில் நடித்த அர்ஜுனை, கிரிமினல் போலீஸாக நமக்குக் காட்டியவிதம் வித்தியாசமாக இருந்தது. அர்ஜுன் மட்டுமின்றி த்ரிஷா, வைபவ், பிரேம்ஜி, மகத், ராய் லட்சுமி, ஜெயபிரகாஷ், ஆண்ட்ரியா என அனைத்து கதாபாத்திரங்களும் மிகச் சரியான தேர்வு.

தனி மனிதனாக முழு திரைப்படத்தையும் முதுகில் சுமந்து அஜித் தாங்கினாலும், அஜித்துக்கு உறுதுணையாக அமைந்தது யுவன் சங்கர் ராஜாவின் இசைதான். `Prince Of BGM' என தன் ரசிகர்களால் புகழப்படும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, படத்துக்குப் பெரும்பலம். குறிப்பாக, அஜித்துக்காக யுவன் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய தீம் மியூசிக் இன்றளவும் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இன்றும்கூட பலரது கைபேசியின் அழைப்புமணியாக `மங்காத்தா' படத்தின் தீம் மியூசிக் இருப்பதை நாம் பல இடங்களில் கேட்கலாம். `இது அம்பானி பரம்பரை...' பாடலில் அனைவரையும் ஆட்டம்போடவைத்த யுவன், `என் நண்பனே...' பாடலில் மெலடியிலும் ஸ்கோர் செய்தார். அநேகமாக கதாநாயகியைக் காதல் தோல்விப் பாடல் பாடவைத்த திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும்.

பர பர சேஸிங் திரைக்கதையில் மேலும் வேகம் சேர்த்தது சக்தி சரவணின் ஒளிப்பதிவு. பிரவின் மற்றும் ஸ்ரீகாந்தின் எடிட்டிங், சிறப்பான வடிவத்தைப் படத்துக்கு வழங்கியது. படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, ஒரு ரசிகனாக தான் எப்படியெல்லாம் அஜித்தைப் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டாரோ, அப்படியெல்லாம் நமக்குக் காட்சிகளாக தந்திருந்தார். 

எட்.விஸ்வநாத் பிரதாப் சிங்