Published:Updated:

‘24 -ம் புலிகேசில நான் நடிக்க ஷங்கர் அனுமதிச்சாலும், வடிவேலு ஒப்புக்குவாரா?’ - சிங்கமுத்துவின் கேள்வி

‘24 -ம் புலிகேசில நான் நடிக்க ஷங்கர் அனுமதிச்சாலும், வடிவேலு ஒப்புக்குவாரா?’ - சிங்கமுத்துவின் கேள்வி
‘24 -ம் புலிகேசில நான் நடிக்க ஷங்கர் அனுமதிச்சாலும், வடிவேலு ஒப்புக்குவாரா?’ - சிங்கமுத்துவின் கேள்வி

குபீர் காமெடி கவுன்ட்டர்கள், பரபர அரசியல் பேச்சுகள் என பயங்கர பிசியாக இருந்த சிங்கமுத்து கொஞ்ச நாட்களாக சைலன்ட் மோடில் இருக்கிறார். தமிழகத்தையே அ.தி.மு.க பிரச்னை சுற்றி சுற்றி அடிக்கும்போது அவர் மட்டும் அமைதியாக இருந்தால் தப்பாச்சே! தேடிச் சென்று கேள்விகளை தொடுத்தோம். வழக்கமான நக்கல் தொனியில் அதகளம் செய்தார்.

நீங்களும் ரஜினி மாதிரி கண்டக்டரா இருந்து சினிமாவுக்கு வந்தவராமே?

ஆமா தம்பி! ஆரம்பத்துல மதுரை டூ தேவக்கோட்டை வழி போற அருள் டிரான்ஸ்போர்ட்ல பஸ் கண்டக்டரா நாலரை வருஷம் இருந்தேன். அப்புறம் திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபார அரிசி மண்டியில் வேலை பார்த்தேன். சின்ன வயசில இருந்தே சினிமா ஆர்வம் இருந்துச்சு. ஆனா, குடும்பத்துல மூத்தவங்கறனால அதுக்கான முயற்சியில முழு மனசா இறங்க முடியல. அப்புறம், சென்னைக்கு வந்து சுந்தரம் காபியில் வேலை பார்த்தேன். அப்புறமா, எம்ஜிஆர் நகரில் அரிசி மண்டியும் ரோஸ்டிங் க்ரைன்டிங் காபி கடையும் வச்சிருந்தேன். அப்போ நிறைய பேர் சினிமாவுல வாய்ப்பு தேடிட்டு இருந்தாங்க. என் கடைக்கு வர போக இருந்தனால அவங்க பழக்கம் ஏற்பட்டுச்சு. மனோஜ் குமார் டைரக்டர்தான் முதன்முதலாக சினிமாவுல வாய்ப்பு தந்தார். அதுக்கு பிறகு, அவரோட 12 படங்களிலும் நடிச்சேன். விக்ரமன் சார் படங்கள், சுந்தர் சி படங்கள்னு நடிக்க ஆரம்பிச்சேன். அப்போதான் வடிவேலுடன் பழக்கம் ஏற்பட்டுச்சு. அப்படியே வடிவேலுவிற்கு வசனம் எழுதறதுல முக்கியமான நபரா இருந்தேன். இப்போ, அப்படியே சினிமா பயணம் போய்கிட்டு இருக்கு. 

ஜெயலலிதாவோட உங்க அறிமுகம் எப்படி நடந்தது?

1972 லேயே எம்ஜிஆரால் ஈர்க்கப்பட்டு அ.தி.மு.கவில் சேர்ந்து உறுப்பினர் அட்டை வச்சிருந்தேன். அதுக்குப் பிறகு, அம்மா கட்சியை வழி நடத்த ஆரம்பிச்சாங்க. அவங்கள பற்றிய கவிதை தொகுப்பை எழுதி கே.ஆர்.எஸ்.முத்து என்ற பெயரில் அவங்களுக்கு அனுப்பி வச்சேன். அவங்களிடம் இருந்து பாராட்டும் கிடைச்சது. தேர்தல் சமயத்தில் அவரிடம் இருந்து அழைப்பு வந்துச்சு. யாரோ கிண்டல் செய்றாங்கனு நான் கண்டுக்கலை. அப்புறம், அவங்கனு தெரிஞ்ச பிறகு, `விண்வெளியில் விவாதம்` என்ற தலைப்பில் ஒரு தொகுப்பை எடுத்துக்கொண்டு போனேன். எனக்கு ஒரு மாதிரி பயமாகவே இருந்துச்சு. அவங்க என்ன பார்த்து சிரிச்சு பேசினாங்க. அந்த தொகுப்பை பார்த்த பிறகுதான் அவங்களுக்கு தெரியவந்துச்சு நான் தான் கே.ஆர்.எஸ்.முத்துனு. அப்படியே பிரசாரம் பண்ண சொன்னாங்க. 1000 மேடைகளுக்கு மேல் ஏறி பிரசாரம் பண்ணிட்டேன்.

நீங்க ஜெயா டிவியில பண்ண 'நல்லா சொல்றாய்ங்கய்யா டீடெய்லு' ஷோ செம ஹிட்! எப்படி பிடிச்சீங்க அந்த ஐடியாவை?

அந்த டைம்ல, 'இந்த தேர்தலில் தனிச்சு போட்டியிடுறோம். மத்த கட்சியெல்லாம் நெருக்கடி கொடுக்குறாங்க. பயங்கரமான கூட்டணிலாம் வச்சு இருக்காங்க'னு சொல்லி ஒரு நிகழ்ச்சி மாதிரி பண்ண சொன்னாங்க. அப்போதான், போண்டா மணியும் நானும் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை பண்ணினோம். கேள்வியை மட்டும் அவனுக்கு எழுதி கொடுத்துடுவேன். மத்தபடி எதுவும் மனப்பாடமெல்லாம் பண்ணலை. 

ஜெ. மரணம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

ஜெயலலிதா மரணம் பற்றி எல்லாரும் அவங்க அவங்க கருத்தை சொல்றாங்க. ஒரு சில மக்கள் அவங்க மரணத்துல மர்மம் இருக்குனு சொல்றாங்க. ஒரு சிலர் `அவங்கள கொல்ல நினைச்சுருந்தா வெறும் மூணு நிமிஷம் போதுமே, 33 ஆண்டுகள் தேவையில்லையே.. மர்மமெல்லாம் இல்லீங்க`னு சொல்றாங்க. ஆனால், அவங்க மரணத்திற்கு பிறகு, பல அரசியல் மாற்றங்கள் நடந்திருப்பது உங்களுக்கு தெரியும். உண்மையை சொல்லணும்னா என்ன பண்றதுனு தெரியாமதான் பேச்சாளர்கள் எல்லோரும் இருக்கோம். 

ஒரு அ.தி.மு.க-காரரா சொல்லுங்க, இப்படி அணி அணியா பிரிஞ்சு சண்டை போட்டுக்குறது நியாயமா?

மூன்று அணியாக இருந்து...  ஓபிஎஸ் இணைப்பால் இப்போ ரெண்டு அணிகளா ஆயிட்டோம். எல்லோருமே அம்மாவுக்காக உழைச்சவங்கதான். அதனால, இதை அண்ணன் தம்பி சண்டை மாதிரிதான் பார்க்கணும். சீக்கிரமே எல்லாம் சரியாகி மொத்தமா  ஒண்ணு சேர்வோம்னு நம்புறோம். 
 
கட்சிக்குள்ள பா.ஜ.க தலையீடு இருக்குனு பேச்சு வருதே?

தமிழகத்தோட பிரச்னைகள் பத்தி பேச முதல்வர் அடிக்கடி பிரதமரை சந்திச்சுப் பேசுறாரு. வேற எந்த முதல்வரும் இத்தனை தடவை பிரதமரை சந்திச்சுப் பேசலை. உடனே, இதை சாக்கா வச்சு பா.ஜ.க தமிழகத்துல நுழையப் பார்க்குதுனு மத்த கட்சிக்காரங்க சொல்றாங்க.  

ஆட்சியை கவிழ்க்கப் போறதா தினகரன் தரப்புல இருந்து சொல்லிகிட்டே இருக்காங்களே?

அதெல்லாம் கட்சியில் தன் பலத்தை காட்டுவதற்காக பேசுற வார்த்தைகள். அப்படியெல்லாம் கவிழ்க்க மாட்டாங்க. எல்லாரும் சேர்ந்து ஆட்சி நடத்துவார்கள் என்றுதான் நாங்களும் எந்த முடிவும் எடுக்காமல் காத்திருக்கிறோம். 

பாணபத்திர ஓணாண்டி கேரக்டரை 24-ம் புலிகேசிலயும் பார்க்கலாமா?

23-ம் புலிகேசி பண்ண அதே டீம்தான் இந்தப் படத்தையும் பண்றாங்க. அதனால, ஷங்கர் சார் நடிக்கக் கூப்பிட்டா கண்டிப்பா போவேன். ஆனா, இதுக்கு வடிவேலு ஒத்துக்கமாட்டார்னுதான் நினைக்கிறேன்! 

சிங்கமுத்து பேட்டி....

அடுத்த கட்டுரைக்கு