Published:Updated:

“அளவுக்கு அதிகமான பாராட்டு, போதையா இருக்கு!” - ‘கருப்பன்’ விஜய் சேதுபதி

“அளவுக்கு அதிகமான பாராட்டு, போதையா இருக்கு!” - ‘கருப்பன்’ விஜய் சேதுபதி
“அளவுக்கு அதிகமான பாராட்டு, போதையா இருக்கு!” - ‘கருப்பன்’ விஜய் சேதுபதி

“அளவுக்கு அதிகமான பாராட்டு, போதையா இருக்கு!” - ‘கருப்பன்’ விஜய் சேதுபதி

‘ரேனிகுண்டா' பட இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம் இயக்கி, விஜய் சேதுபதி-தன்யா உள்பட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கருப்பன்'. திண்டுக்கல் உள்பட தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் படத்தின் டீஸர்,  ட்ரெய்லர் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் விஜய் சேதுபதி, இயக்குநர் பன்னீர்செல்வம், இசையமைப்பாளர் இமான், பாடலாசிரியர் யுகபாரதி உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்...

யுகபாரதி: 

“நாலு நாள்ல வெள்ளை ஆக க்ரீம் விக்குற இந்தக் காலத்துல, பன்னீர்செல்வம் செம தில்லா `கருப்பன்'னு படம் எடுத்திருக்கிறார். இதுக்கு தைரியம் தேவையில்லை. முதல்ல தமிழனா  இருக்கணும். அந்தத் தமிழனா இருக்கக்கூடிய மனிதர், பன்னீர்செல்வம். இவருடைய படத்தில் நான்காவது முறையா சேர்ந்து வேலைபார்ப்பது மகிழ்ச்சி. திருவிழா நாள்கள்ல ஊருக்குப் போகும்போது, ‘கூட்டம் இல்லாத பஸ்ல போலாம்’ என நினைத்து, பஸ் ஸ்டாண்ட்டில் நிற்கும் எல்லா பஸ்ஸையும் விட்டுட்டே இருப்போம். கடைசியில் பஸ்ஸே இல்லைனு தகவல் வரும்போது ஒரு பதற்றம் வருமில்லையா, அந்தப் பதற்றம்தான் பன்னீர்செல்வத்தின் வாழ்க்கையிலும் நடந்தது. அவர், ஆறு ஆண்டுகளுக்கு முன்பே எல்லோர் கவனத்துக்கும் வந்திருக்கக்கூடியவர். ஆனா, முடியாமல் போய்விட்டது. 

விஜய் சேதுபதி, என்னைவிட கறுப்பு. நான் நேசிக்கக்கூடிய நடிகர். இந்தப் படத்தில் நாயகியின் பெயர் அன்புச்செல்வி. என் மனைவியின் பெயரும் அன்புச்செல்விதான். இந்தப் படத்தின் பாடல்கள் என் வீட்டம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும்னு நினைக்கிறேன். இமானுடன் எனக்கு இது 30-வது படம்னு நினைக்கிறேன். கணக்கே இல்லாமல் இமான்கூட சேர்ந்து வேலைபார்த்திருக்கிறேன். பாட்டு எல்லாம் சூப்பரா வந்திருக்கு.” 

யுகபாரதி:

“யுகபாரதி  சார் என் நண்பர். அவருடன் வேலைபார்ப்பது நல்ல அனுபவம். ஒரு நடிகராக விஜய் சேதுபதியை அவ்வளவு நேசிக்க ஆரம்பித்துவிட்டேன். அவருடைய டயலாக் டெலிவரி எப்பவுமே சூப்பர். தன் நடிப்பால் படத்தைத் தூக்கி நிறுத்தக்கூடியவர். ஒருசில ஹீரோக்களை அவர்களின் வெற்றி-தோல்விகளைத் தாண்டி இயல்பாகவே பிடிக்கும். அந்த ஹீரோக்களில் விஜய் சேதுபதி முதன்மையானவர்.”

ஆர்.பன்னீர்செல்வம்:

“என் வாழ்க்கையில் பஸ் வரலைன்னு காத்திருந்தபோது, எனக்காக ஏசி பஸ்ஸே வந்தது. அந்த பஸ்ஸில் விஜய் சேதுபதிதான் டிரைவர். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சார்தான் கண்டக்டர். எனக்காக மட்டுமே வந்த பஸ் அது. அதில் வேறு யாருக்கும் இடம் கிடையாது. அதுல நான் எவ்வளவு வேண்டுமானாலும் விளையாடலாம். இரண்டு கதைகளை எழுதினேன். இந்தக் கதையைத்தான் முதலில் எடுக்க வேண்டும் எனத் தோன்றியது. படத்தின் கதையை நிறைய நடிகர்களிடம் சொல்வதற்கு முயற்சி செய்தேன். யாரும் கேட்கக்கூட முன்வரவில்லை. இதற்கு முன் `ரேனிகுண்டா'னு ஒரு படம் பண்ணியிருக்கேன். `நல்ல படம்’னு பாராட்டு வாங்கிய படம். ஆனா, நம் கதையைக்கூட யாரும் கேட்கத் தயாராக இல்லையே’ என வருத்தப்பட்டேன். 

அந்தச் சமயத்தில் ஒருநாள் இரவு இயக்குநர் சீனுராமசாமி எனக்கு போன் பண்ணி, ‘உன் கதையில் என் தம்பி விஜய் சேதுபதி நடித்தால் எப்படி இருக்கும்?' என்றார். `சூப்பராக இருக்கும்ணே' என்றேன். `நாளைக்கு காலையில் என் பட டப்பிங் இருக்கு. வந்திடுங்க. விஜய் சேதுபதியை அறிமுகப்படுத்திவைக்கிறேன்' என்றார். போனேன், விஜய் சேதுபதியைச் சந்தித்தேன். `உங்க படம் எனக்குப் பிடிக்கும், இப்பகூட உங்க படப் பாட்டைத்தான் கேட்டுட்டிருக்கேன். ஆனா, எனக்கு அடுத்தடுத்து படங்கள் இருக்கு. அதனால், இப்ப உடனடியா உங்க படம் பண்ண வாய்ப்பு இல்லை’ என்றார். `நீங்க படம் பண்ணலைன்னாகூட பரவாயில்லை. என் படத்தின் கதையைக் கேளுங்கள்' என்றேன். `எவ்வளவு நேரத்தில் சொல்வீங்க?' என்றார். `ரெண்டு மணி நேரம் ஆகும்' என்றேன். `அவ்வளவு நேரம் எனக்கு இல்லை. அரை மணி நேரத்தில் சொல்ல முடியுமா?' என்று கேட்டார். `இல்லை சார், முழு கதையையும் சொல்லணும். உங்களுக்கு எப்ப டைம் இருக்கோ, அப்போ சொல்லுங்க!' என்றேன். 

பிறகு நண்பர் சீனுராமசாமி, விஜய் சேதுபதியின் மேலாளர் ராஜேஷ், என் உதவி இயக்குநராக இருந்தவரும் `றெக்க’ படத்தின் இயக்குநருமான சிவா, அந்தப்படத் தயாரிப்பாளர் கணேஷ் எனப் பலரும் விஜய் சேதுபதிக்கு தொடர்ந்து நினைவூட்டி கதை கேட்கவைத்து இந்தப் படத்தை பண்ணவைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி. ரத்னம் சார் தயாரித்த படங்களில் நான் உதவி இயக்குநராக இருந்திருக்கிறேன். இப்போது அவருக்கே படம் பண்ணியது எனக்கு மிகவும் சந்தோஷம். விஜய் சேதுபதி சாரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். நள்ளிரவு நேரங்கள்லகூட செல்போனில் அழைத்து, `சார் எனக்கு ஒரு விஷயம் தோணுச்சு... அந்தக் காட்சியை இப்படிப்  பண்ணலாமா?' எனக் கேட்பார். விஜய் சேதுபதிபோல ஸ்க்ரிப்ட்படி இன்வால்வ் ஆகி நடிக்கக்கூடிய வேறு ஒருத்தரைப் பார்க்க முடியாது.”

விஜய் சேதுபதி:

“பொதுவா பாராட்டு, அளவுக்கு அதிகமானா போதை மாதிரி இருக்கு. `ரேனிகுண்டா' பட ட்ரெய்லர் பார்த்துவிட்டு `யாருடா இவர்?'னு நினைச்சிருக்கேன். பன்னீரின் நேர்மையும் பொறுமையும் எனக்குப் பிடிக்கும். அவருக்கு ரொம்ப சரியாத்தான் பன்னீர்செல்வம்னு பேர் வெச்சிருக்காங்க. நான் சினிமாவுக்கு 2004-ம் ஆண்டிலிருந்து முயற்சிபண்ணினேன். 2010-ம் ஆண்டில்தான் ஹீரோ ஆனேன். எங்கிட்ட கேட்டால் ஐம்பது பேரைப் பற்றியாவது ஏதாவது குறை சொல்வேன். ஆனால், பன்னீர்செல்வம் தன் வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்களைப் பார்த்திருந்தாலும், மற்றவர்களைப் பற்றி ஒரு வார்த்தைகூட நெகட்டிவா பேசாதவர். `இவர் ஏதாவது சொல்வார்’னு நினைப்பேன். ஆனா, இவர் சொன்னதே இல்லை. 

படத்தில் வில்லனாக பாபி சிம்ஹா. எனக்கும் பாபிக்கும் பத்து வருஷ நட்பு. ‘இந்த வில்லன் கேரக்டரை ஒரு ஹீரோ பண்ணினால் நல்லாயிருக்கும்’னு தோணுச்சு. வேறொரு ஹீரோகிட்ட கேட்டோம். அவர் பிஸியா இருந்தார். பாபிக்கு போன்போட்டு, ‘ஒரு வில்லன் கேரக்டர். பண்ண முடியுமா?'னு கேட்டேன். `ஓகேடா. நீ சொல்லிட்டேல்ல... பண்ணிடலாம்!'னு சொன்னான். `நான் சொன்னதுக்காகப் பண்ண வேணாம். முதல்ல கதையைக் கேளு'னு சொன்னேன். `இல்ல மச்சி, நீ சொன்ன சரியா இருக்கும்’னு சொல்லி பண்ணான்.”

நிகழ்ச்சியில், ஸ்டன்ட் மாஸ்டர் ராஜசேகரன், தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், ஐஸ்வர்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு