Published:Updated:

Father And Daughter... தன்னையே மீட்டெடுக்கும் எட்டு நிமிடக் கவிதை!

விகடன் விமர்சனக்குழு
Father And Daughter... தன்னையே மீட்டெடுக்கும் எட்டு நிமிடக் கவிதை!
Father And Daughter... தன்னையே மீட்டெடுக்கும் எட்டு நிமிடக் கவிதை!

ஜப்பானைப் பொறுத்தவரையில், கலை உலகுக்கு மூன்று தலைமகன்களை அளித்த தேசம் என்றுதான் சொல்லவேண்டும். இந்த மூன்று துறைகளுமே ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டதுதான்.

  • ஒசாமு தெசூக்கா - காமிக்ஸ் (மாங்கா)வின் தலைமகன்.
  • அகிரா குரசோவா - திரைப்படங்களின் தலைமகன்.
  • ஹயாவ் மியசாகி - அனிமே (கார்ட்டூன்) படங்களின் தலைமகன்.

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் பேசப்போவது ஒருவரைப் பற்றித்தான்: ஹயாவ் மியசாகி. இவரைப்பற்றி ஏகப்பட்ட விவரங்கள் இணையத்தில் படிக்கக் கிடைக்கிறது. உலகின் முதல் கௌரவ ஆஸ்கார் விருதைப் பெற்ற அனிமே இயக்குநர் இவர் என்பதும், இதற்கு முன்பாக தனக்கு அளிக்கப்பட்ட ஆஸ்கார் விருதைத் திருப்பித் தந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயங்கள். இவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள, கூகுள் ஆண்டவரிடம் No Cuts என்று தேடிப் பாருங்கள், இவர் எப்படிப்பட்ட ஆளுமை என்பது விளங்கும். அப்படித் தேட நேரமில்லாதவர்களுக்காக, இதோ சுருக்கமாக அந்த எபிசோட்.

கட் செய்தால், பிளாஷ்பேக்:

1979-ல் TMS கம்பெனியில் சேர்கிறார், மியசாகி. இங்குத்தான் The Castle of Cagliostro என்ற அனிமேஷன் திரைப்படத்தை இயக்குகிறார். 1981-ல் இப்படத்தின் சிறப்புக் காட்சிகளை வால்ட் டிஸ்னி நிறுவனத்துக்கு இவர்கள் திரையிட்டுக் காண்பிக்க, இப்போதைய வால்ட் டிஸ்னி நிறுவனத் தலைமைப் படைப்பு அதிகாரியான ஜான் லாசெஸ்டருக்கு, அந்த அனிமேஷன் படம் மிகவும் பிடித்துப்போய் விட்டது. அன்று முதல் இவர் மியாசாகியின் தீவிர ரசிகராக மாறி, மேற்கத்திய நாடுகளுக்கு மியாசாகியின் தூதராக மாறிவிட்டார் என்றே சொல்லலாம்.

பதிலுக்குப் பதில் - பட்டாக்கத்தி:

 1985ல் மியசாகி தன்னுடைய ஸ்டுடியோ ஜீப்ளியைத் தொடங்கினார், (ஜப்பானிய மொழியில் இதை ஜீபுரி என்றுதான் உச்சரிக்க வேண்டும்). Castle in the Sky (1986), My Neighbour Totoro (1988), Kiki’s Delivery Service (1989), Porco Rosso (1992) ஆகிய படங்களை இயக்கினார், மியசாகி. 1995ல் இவர் இயக்கிய Princess Mononoke படம்தான் இவரது மேதைமையை உலகுக்கு அடையாளம் காட்டியது. ஜப்பானில் பல வசூல் சாதனைகளைப் படைத்த இந்தப் படத்துக்குப் பிறகு மியாசாகி தான் ஓய்வெடுப்பதாக அறிவித்தார்.

இந்தப் படத்தின் அசுர வெற்றியைக் கண்ட வால்ட் டிஸ்னி நிறுவனம், தன்னுடைய கிளை நிறுவனமான Miramax Films மூலமாக இப்படத்தின் ஆங்கில மொழிமாற்று உரிமையைப் பெற்றது. புகழ்பெற்ற சிறுவர் இலக்கியவாதியான நீய்ல் கெய்மனைக் கொண்டு ஆங்கில வசனங்களை எழுத வைத்தது. மிராமேக்சின் தலைமைச் செயல் அதிகாரியான ஹார்வி வெய்ன்ஸ்டீன் இந்தப் படத்தின் பல காட்சிகள் அமெரிக்க அரசியல் சூழலுக்கு உகந்தது அல்ல என்று கருதி, அவற்றை நீக்கச் சொன்னார். பதிலுக்கு அவருக்கு என்ன கிடைத்தது தெரியுமா? தன் வாழ்நாள் முழுவதும் சமரசமே செய்துகொள்ளாத ஒரு கலைஞன், தனது படைப்பை வேறொருவர் எடிட் செய்ய எப்படி ஒப்புக்கொள்வார்? இந்தக் காட்சிகளை நீக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு மியாசாகி அளித்த பதில், இன்றளவுக்கும் பேசப்படும் ஒரு செயலாகவே உள்ளது.

மிராமேக்ஸ் பில்ம்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்குத் தபால் மூலமாக ஒரு ஜப்பானிய நாட்டின் பாரம்பர்ய கடானா வாளும், No Cuts என்று எழுதப்பட்ட தாளும்தான் மியாசாகியின் பதில். (இந்த கடானா என்பது நம்ம ஊர் பட்டாக்கத்தி போல). கடைசியில் வெற்றி மியாசாகிக்கே. Princess Mononoke என்ற அந்தப் படத்தை, எந்தக் கருத்துடன் அவர் எப்படி எடுத்தாரோ, காட்சிகள் வெட்டப்படாமல் அப்படியே மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆங்கிலத்தில் வெளியானது.

இதுவரையில் 20 அனிமேஷன் திரைப்படங்களை இயக்கி, 15க்கும் மேற்பட்ட மாங்கா காமிக்ஸ் தொடர்களை எழுதியும் இருக்கிறார். 22 படங்களில் ஒரு வரை-கலைஞராகவும் பணியாற்றியுள்ள மியாசாகியின் திரைப்பட நிறுவனத்தின் பெயர், ஸ்டுடியோ ஜீப்ளி. இதன் பன்னாட்டு விநியோக உரிமைகளை நிர்வகிப்பது, வைல்ட் பன்ச் என்ற நிறுவனம்.

திரும்ப, இன்னொரு சீன் சேஞ்ச்:

தேடல் தொடங்கியது: 2008-ம் ஆண்டு மியாசாகியின் போன்யோ என்ற அனிமேஷன் திரைப்படத்தின் பன்னாட்டு விநியோக உரிமையைப் பற்றி விவாதிக்க, வைல்ட் பன்ச் நிறுவனத்தின் வின்சென்ட் மராவல் ஜப்பானுக்குச் சென்றிருந்தார். ஒவ்வொருமுறை மராவல் ஜப்பான் வரும்போதும், அவர் மியாசாகியிடம் கேட்பது ஒரே ஒரு விஷயத்தைத்தான். அதாவது, மியாசாகியின் ஸ்டுடியோ ஜீப்ளி, மற்ற நாட்டு அனிமேஷன் நிறுவனங்களுடன் இணைந்து, கார்ட்டூன் படங்களைத் தயாரிக்க வேண்டும் என்பதே. இம்முறையும் அதே வேண்டுகோளை முன்வைத்தார், மராவல்.

அப்போது, மியாசாகி அவரை அழைத்து ஒரு எட்டு நிமிட குறும்படத்தை அவருக்குக் காண்பித்தார். வசனங்கள் இன்றி, மௌனப் படமாக இருந்த அந்த கார்ட்டூன் படத்தைப் பற்றி சிலாகித்துப் பேசலானார், மியாசாகி. Father & Daughter என்ற பெயரைக் கொண்ட அந்த கார்ட்டூன் குறும்படம், மியாசாகியை கவர்ந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், அவரைப் போன்ற பல ரசிகர்களின் கூட்டு முயற்சியால், ஜப்பானில் இந்த எட்டு நிமிடக் குறும்படம் திரையரங்குகளில் பரவலாக வெளியிடப்பட்டு, மக்களின் பேராதரவைப் பெற்றது. ஜப்பானிய அனிமேஷன் வகுப்புகளில் இத்திரைப்படம் விவாதிக்கப்பட்டது. இந்தக் குறும்படத்தை இணையத்தில் பார்க்க:

இப்போது மியாசாகி பேச ஆரம்பித்தார். அவர் முதலில் சொன்ன வாக்கியம், “இந்த இயக்குநரைத் தேடிக் கண்டுபிடியுங்கள்”. மராவலுக்கு இது சற்று கடினமான வேலையாகத் தெரிந்தது. எனவே அவர், “இது கொஞ்சம் கஷ்டமான வேலை” என்று இழுக்க, மியாசாகி அந்த மந்திரச் சொற்களை உச்சரித்தார். “வேறோர் இயக்குநரோடு இணைந்து ஒரு கார்ட்டூன் படத்தைத் தயாரிக்க, இவ்வளவு ஆண்டுகளாக நீங்கள் என்னிடம் கேட்டு வந்தீர்கள் அல்லவா? அப்படி நான் ஓர் இயக்குநரோடு இணைந்து ஒரு படத்தைத் தயாரிப்பதாக இருந்தால், இவர்தான் அந்த இயக்குநர்”. அவ்வளவுதான். ஊருக்குத் திரும்பிய மராவல், தன்னுடைய நிறுவனத்தின் மூலமாக இந்த இயக்குநரைத் தேடத் தொடங்கினார்.

இங்கே மறுபடியும் கட் செய்தால், இன்னொரு ஃப்ளாஷ்பேக்:

மிஹயில் டூடக் டெ விட்: 64 வயதாகும் மிஹயில், நெதர்லாந்தில் பிறந்து, வளர்ந்தவர். பிறகு, ஜெனிவாவிலும், லண்டனிலும் கலைசார்ந்த மேற்படிப்பை முடித்தார். படிக்கும்போது (1978ல்) தனது முதல் அனிமேஷன் குறும்படத்தை இயக்கினார், மிஹயில். பிறகு, ஸ்பெயினில் சில மாதங்கள் பணிபுரிந்துவிட்டு, திரும்பவும் லண்டனுக்கே வந்து செட்டிலாகிவிட்டார். மெதுவாக விளம்பரப் படங்கள், குறும்படங்கள் என்று அவர் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தத் தொடங்கினார். கமர்ஷியலாகப் பணிபுரிந்து வந்தாலும், தனது துறை மீதான ஆர்வம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்தது. அதனால், அனிமேஷன் துறையில் இருக்கும் பல புதிய நுணுக்கங்களைக் கற்று வந்தார்.

14 ஆண்டுகள் கழித்து, தன்னுடைய இரண்டாவது அனிமேஷன் படத்தை இயக்கினார், மிஹயில். அவரது முதல் படத்துக்கும் இரண்டாவது படத்துக்கும் கதையளவில் ஒரே டெக்னிக்தான் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அனிமேஷன் வகையில் பல மாற்றங்களைக் காண முடிந்தது. இடைப்பட்ட ஆண்டுகளில் ஜப்பானிய மாங்கா மற்றும் இதர ஓவிய நுணுக்கங்களை ஆராய்ந்த மிஹயில், அவற்றில் இருந்த சில யுக்திகளை தனது படத்திலும் கொண்டு வந்திருந்தார். உதாரணமாக, பிரஷ் ஸ்ட்ரோக் டிராயிங் என்று சொல்லப்படும் பாணியில், இங்க்கையும் வாட்டர் கலரையும் பயன்படுத்தி இவர் வரைய ஆரம்பித்தார். இந்தக் குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, அதன்பிறகு இந்த இங்க் + வாட்டர் கலர் கொண்ட பிரஷ் ஸ்ட்ரோக் டிராயிங் ஓவிய பாணியையே தனது அடையாளமாக்கிக் கொண்டார், மிஹயில். இந்தப் பாணியில் அவர் உருவாக்கியதுதான் இந்த எட்டு நிமிடக் குறும்படம்.

இப்போ, இன்டர்செக்ட் ஆக, ஒரு வீடியோ:

அப்பாவும் மகளும்: நம்முடைய சிறுவயதில் யாரையாவது பிரிந்துவிட்டால், அதை நம்மால் தாங்கிக் கொள்ளவே இயலாது. ஆனால், வயதும் அனுபவமும் பெற்ற பிறகு, பிரிதலின் இன்றியமையாமையை உணரத் துவங்குகிறோம். பிரிதல் என்பது வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு கட்டம். எப்போது இந்த புரிதல் நமக்கு வருகிறதோ, அப்போதே நான் அடுத்தவர்களின் செயல்களை மன்னிக்கத் தொடங்கி விடுவோம். மகளுடன் சைக்கிளில் வருகிறார் ஒரு அப்பா. மகளை கரையில் விட்டுவிட்டு, அவர் மட்டும் படகில் செல்கிறார். தனித்து விடப்பட்ட மகள், அதன்பிறகு ஒவ்வொரு நாளும் அந்தக் கரையில் வந்து, நீரோட்டத்தையே பார்த்துக் கொண்டிருப்பாள். நாள்கள், வாரங்கள், பருவங்கள், ஆண்டுகள் ஆகின்றது. ஆனாலும் அவள் தொடர்ந்து கரைக்கு வந்து தன்னை விட்டுச் சென்ற தந்தையை எதிர்பார்த்துக் காத்திருப்பாள். ஒரு கட்டத்துக்குப் பிறகு, அவளது வாரிசுகள் அவளுடன் வர ஆரம்பிக்கிறார்கள். கவித்துவமான முடிவைச் சொல்லிவிட்டால், ஸ்பாய்லர் ஆகிவிடும். ஆகவே, எட்டு நிமிடக் கவிதையை யூடிபில் பார்த்து விடுங்கள். எப்படிப்பட்ட ஒரு ஆளுமையின் படைப்பை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்வீர்கள். ஆஸ்கார், பாஃப்டா, மற்ற கிராண்ட் ஃப்ரீக்கள் என்று உலகில் இருக்கும் அனைத்து அனிமேஷன் விருதுகளையும் குவித்தது, இந்தக் குறும்படம்.

இந்தக் குறும்படத்தில் மேலோட்டமாக பார்த்தாலே, ஒரு அழகிய கவிதை போன்ற பாசப் போராட்டம் தெரியும். ஆனால், ஒவ்வொரு காட்சியிலும் இயக்குநர் வைத்திருக்கும் உருவகங்கள், குறியீடுகள் அனைத்துமே இந்தப் படத்தை வேறொரு தளத்துக்கு உயர்த்துகிறது. உதாரணமாக, கடைசியில், வயதான நிலையில், சைக்கிள் ஸ்டாண்ட் போடும் அந்தக் காட்சியைப் பாருங்கள். முதல் முறை நிறுத்தும்போது, சைக்கிள் கீழே விழுந்து விடுகிறது. இரண்டாம் முறை நிறுத்த, அப்போதும் விழுந்து விடுகிறது. ஆனால், அடுத்த முறை சைக்கிளை நிறுத்தாமல் சென்று விடுகிறார். இதன் உண்மையான பொருளை உணர்ந்தால், இந்த இயக்குநரை ஏன் மியசாகி அவ்வளவு ஆண்டுகளாகத் தேடினார் என்பது புரியும்.

ஒருவழியாக, இந்த இயக்குநரைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டார்கள், வைல்ட் பன்ச் நிறுவனத்தினர். மிஹயிலிடம் சென்று, “எங்களுக்காக ஒரு அனிமேஷன் திரைப்படத்தை இயக்குகிறீர்களா?” என்று கேட்க, இப்போதைக்கு முடியாது என்று சொல்லி விட்டார் அவர். மிஹயிலைச் சந்திக்க, பிரான்ஸிலிருந்து லண்டனுக்கு வந்தது வீணாகிவிட்டதே? என்று நினைத்துக்கொண்டு, “சரி, பரவாயில்லை. விடுங்கள். நான் ஸ்டுடியோ ஜீப்ளியிடம் வேறு யாராவது இயக்குநரைத் தேடச் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்தார்.

“என்ன? என்ன சொன்னீர்கள்? ஸ்டுடியோ ஜீப்ளியா? மியசாகியின் ஜீப்ளியா? என்ன விஷயம் என்று முழுமையாகச் சொல்லுங்கள்” என்று கேட்க, மியாசாகி தனிப்பட்ட முறையில் அவர் மீது கொண்டிருந்த ஆர்வத்தைச் சொல்கிறார்கள். மியசாகி என்ற அந்த மந்திரவாதியில் பெயரைக் கேட்ட உடனே, இந்த அனிமேஷன் திரைப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டார்,  மிஹயில். இப்படியாக, இந்தத் தலைமுறையின் தலைசிறந்த அனிமேஷன் படைப்பாளியைத் தயாரிப்பாளராகக் கொண்டு, ஒரு மிகச் சிறந்த கதைசொல்லியை இயக்குநராகக் கொண்டு The Red Turtle என்ற அனிமேஷன் திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு வெளியான இத்திரைப்படம் ஆஸ்காருக்காக பரிந்துரைக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தை மறக்காமல் பார்த்து விடுங்கள். ஆனால், அதற்கு முன்னர், இந்த இயக்குநருக்கு இப்படிப்பட்ட வாய்ப்பை அளித்த இந்தக் குறும்படத்தைப் பற்றி சில வரிகள்:

அனிமேஷன் படங்களுக்கு என்று ஒரு வரைகலை இலக்கணம் உண்டு. Perfectionஐத் தேடும் வகையில்தான் பல சிறந்த அனிமேஷன் படங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், இந்தக் குறும்படத்தில், இலக்கணத்தை நன்கு உணர்ந்து, அதை முறையாக மீறி இருக்கிறார், மிஹயில்.

இது நேர்த்தியான ஓவியக் கோட்பாடில் வரையப்படவில்லை. உறுதியான, தெளிவான கோடுகளைக் கொண்ட ஓவிய பாணியுமே இதில் இல்லை. Abstract என்று சொல்வோமே, அதுபோல் வரையப்பட்டதுதான். மேலும், இதில் இருக்கும் வண்ணக் கலவையைப் பற்றி தனியாகவே ஒரு கட்டுரை எழுதலாம். இந்தக் குறும்படத்தில், இரு வண்ணங்கள் சேரும் இடங்களில் (இரண்டு வண்ணங்கள் / காட்சிகள் சேரும் இடங்களின் எல்லையில்) வண்ண வேறுபாடு காட்டப்படவில்லை. அனிமேஷன் துறையின் அனைத்து இலக்கணத்தையும் நன்கு அறிந்து, அவற்றை மீறும் ஒரு கலைஞனின் உன்னதப் படைப்புதான் இங்கே தெரிகிறது. இதற்காகவே, இந்த Father & Daughter என்ற குறும்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். வார்த்தைகள், வசனங்கள் எதுவுமே இல்லை என்பதும் இன்னொரு ப்ளஸ் பாய்ண்ட்.

இந்தக் குறும்படம் சரியாக, 17 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியானது. நமது வாழ்க்கையில், நம் அன்புக்குப் பாத்திரமானவர்கள் சிலர் நம்மை விட்டுப் பிரிய நேரலாம். ஆனால், அந்த முடிவுகளை அவர்களே விரும்பி எடுப்பதில்லை. இந்தக் குறும்படத்தில் வரும் தந்தையைப் போல, அவர்களுக்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கலாம். ஆனால், அவர்களுக்கான நமது தேடலை எப்போதுமே தொடர வேண்டும். ஏனென்றால், அடுத்தவர்கள் மீதான நமது அன்புதான் உலகையே இயக்கிக் கொண்டிருக்கிற ஒரே அறம்.