Published:Updated:

நம்மைத் துரத்தும் அந்த மூன்றாவது கண்! - ‘புரியாத புதிர்’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
நம்மைத் துரத்தும் அந்த மூன்றாவது கண்! - ‘புரியாத புதிர்’ விமர்சனம்
நம்மைத் துரத்தும் அந்த மூன்றாவது கண்! - ‘புரியாத புதிர்’ விமர்சனம்

நம்மைத் துரத்தும் அந்த மூன்றாவது கண்! - ‘புரியாத புதிர்’ விமர்சனம்

கேமராக்கள் சூழ் உலகு இது. இங்கு எவ்வளவு பத்திரமாக இருந்தாலும், ஓடி ஒளிந்தாலும் ஆயிரமாயிரம் கண்கள் நம்மைக் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கின்றன. மொபைல் கேமராக்களால் ஏற்படும் பிரச்னைகள், சிக்கல்கள், பழிவாங்கல்களைப் பதிவுசெய்திருக்கிறது ‘புரியாத புதிர்.’
 

வளரும் இசைக் கலைஞன் கதிர் (விஜய் சேதுபதி). பப் ஒன்றில் டிஜே-வாக இருக்கும் அர்ஜுனன் மற்றும் டிவி சேனல் ஒன்றில் வேலைசெய்யும் நண்பனுடன் வசித்துவருகிறார். மழை நாளொன்றில் விஜய் சேதுபதியின் கண்ணில்படும் காயத்ரிக்கும் விஜய் சேதுபதிக்கும் காதல். எல்லாம் சரியாக நகரும்போது, காதலியின் அந்தரங்க வீடியோ ஒன்று விஜய் சேதுபதியின் மொபைலுக்கு வருகிறது. அடுத்தடுத்து வரும் வீடியோக்களால் விஜய் சேதுபதி மன உளைச்சல் அடைகிறார். அமானுஷ்யத் தன்மை, மர்மம், காதலின் தவிப்பு என எல்லாம் கலந்த இந்த 'புரியாத புதிர்' முடிச்சு என்ன என்பதுதான் கதை.

தொழில்நுட்ப வளர்ச்சியின் இன்னொரு அபாய முகத்தையும் அது பெண்களின் வாழ்வைக் குலைக்கும் கொடூரத்தையும் முதல் படத்திலே அலசியிருக்கும் அறிமுக இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கவனம் ஈர்க்கிறார். ஸ்கேண்டல் வீடியோக்களின் அடிப்படையை அழகான மெசெஜாகவும் த்ரில்லராகவும் படமாக்கியதற்குப் பாராட்டுகள். 

இசைக் கலைஞன், இங்கிலீஷ் புத்தகம் படிப்பவர், கூலர்ஸ், நகரத்து இளைஞர் என விஜய் சேதுபதிக்குக் கொஞ்சம் வித்தியாசமான ரோல். நிறைய அதிர்ச்சி தரும் காட்சிகளில் வியர்த்துக்கொட்டி, மொட்டைமாடிக் காட்சியில் கதறி அழுது என நடிப்பில் சுவாரஸ்யத்துக்குக் குறைவில்லை. காயத்ரிக்கு அழகான கதாபாத்திரம், உணர்ந்து நடித்திருக்கிறார். விஜய் சேதுபதிக்கும் காயத்ரிக்குமான காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி அள்ளுகிறது. நண்பர்களும் தோழியும் எனக் குறைந்தளவே கதாபாத்திரங்களில் நேர்த்தியாகக் கதை சொல்லியிருக்கிறார்.

அந்தரங்க வீடியோக்களை எடுப்பது யார் என்ற சஸ்பென்ஸை நீட்டித்தது வரை ஓகே. ஆனால் அந்த ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் க்ளிஷேக்கள் நிறைந்து சுவாரஸ்யம் மிஸ்ஸிங். இசை பாந்தமாய்ப் பொருந்துகிறது.

பாடல்கள் கேட்கக் கேட்கப் பிடிக்கலாம் ரகம். தீவிரமான காட்சி ஒன்று, பிறகொரு பாடல், மறுபடி த்ரில் என ஒரு கோடு போட்டுப் பயணிக்கும் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் வேகப்படுத்தியிருக்கலாம். 
 

போகிறபோக்கில் இன்னொரு பெண் இருக்கும் (நண்பனின் மேனேஜர் மனைவி) போட்டோவை காயத்ரி வெளியிடுவது மட்டும் சரியா? ஒரு அப்பார்ட்மென்டில் கறுப்பாகவும் ஒல்லியாகவும் இருப்பவரைக் குற்றவாளியாகக் காட்டுவது, “இதுக்குத்தான் இவங்களுக்கு வீடு கொடுக்கக் கூடாதுங்றது” வசனம் போன்றவற்றைத் தவிர்த்திருக்கலாம் பாஸ்.

புவனின் கத்தரி கச்சிதமாக வேலைசெய்திருக்கிறது. மர்மத்தில் செலுத்திய கவனத்தை ஃப்ளாஷ்பேக் பின்னணியில் அழுத்தம் கூட்டுவதற்கும் காட்டியிருக்கலாம். ஸ்கேண்டல் வீடியோக்களின் அபாயங்கள் குறித்துப் படங்கள் வருவது வரவேற்கத்தக்கது. ஆனால் ஆண்களின் வக்கிரப்புத்தியை அம்பலப்படுத்துவதோடு, எல்லா வக்கிரங்களையும் துணிச்சலோடு பெண்கள் எதிர்கொண்டு போராடுவதாகவும் காட்சிப்படுத்தி இருக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு